திராவிட இயக்கத்தின் மீதும், ஒடுக்கப்பட்டோர் எழுச்சியின் மீதும் அவதூறுகள் பொழியும் பணியில் பார்ப்பனீயம், நேரடியாக மோதாமல் கதை மாந்தன் ராமனைப்போல மறைந்து நின்று தாக்குதல் தொடுக்கிறது.
அந்த வரிசையில் இலக்கியவாதி என்ற போர்வையில் ஜெயமோகன் என்பவர் அவிழ்க்கும் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தும் நூல் `இன்றைய காந்தி யார்?. திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு ஆதாரங்களை அள்ளிவீசி ஆணித்தரமாகக் கேள்வி எழுப்புகிறார்.
இந்நூலிலிருந்து….
காந்தியின் கற்பனை வாதங்களுக்கும் கிறுக்குத்தனங்களுக்கும் திராவிடக் கட்சியினர் எழுதியபோது இங்கே கொதித்தனர் சிலர். காந்தியை அப்படி எழுதலாமா என்று கேட்டனர்.
காந்தியின் நடவடிக்கைகளைப் பற்றி, அவரின் நிலையைப் பற்றி அறிஞர் அண்ணா, கோகிலவாணிகள் கீதம்பாட, கோபால சாமிகள் தாளம்போட, சுசீலா நய்யார்கள் காத்திருக்க, அமிர்த கௌர்கள் வெண்சாமரம் வீச மங்கையர் மத்தியில் பெம்மான் காந்தி பவனி வருகிறார் என்று எழுதினார். 1946இல் காந்தி சென்னைக்கு வருகிறபோது இதை அவர் எழுதியிருந்தார்.
ஆனால் ஜெயமோகன் இப்போது காந்தியின் பிரமசரியத்தைப் பற்றி எழுதி அவரை விகாரப்படுத்துவானேன்? அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? காந்தி வாழ்ந்த காலத்திலேயே மகாத்மாக்களுக்கு கிறுக்குத்தனங்கள் உண்டு என கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று குடிஅரசில் பெரியார் எழுதினார். பெரியாரும் அண்ணாவும் காந்தி வாழ்ந்த காலத்தில் எழுதியவர்கள்.
விடுதலை இயக்கம் எழுச்சி பெற்றிருந்த நாள்களில் எழுதியவை. அதற்கு அரசியல் காரணங்கள் இருந்தன; பேராண்மையும் இருந்தது. இன்றைய காந்தி என்று தலைப்பிட்டு விட்டு ஜெயமோகன் பழைய காந்தியின் சரிதத்தை ஆராய்ச்சி செய்ய, உரையாடல் நிகழ்த்த, விவாதிக்க ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா? அந்த நோக்கத்தை இந்நூலினுள் எங்குமே சொல்லவில்லையே, அது ஏன்?
#######
அம்பேத்கர் ஆடை அணிவதைப் பற்றியும் அதன் மூலம் இந்தியா முழுமையும் அடையாளம் காணப்பட்டவர் அவர் என்றும் இறுதிக் காலத்தில் மெய்ஞானம் கனியப் பெற்றபோது எளிமையான ஆடைகளை நோக்கியே அவர் சென்றார் என்றும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். (பக். 27)
அதுவும் பலரும் கவனிக்காத ஒன்றை நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறாராம் _ கற்றறிந்த, மேதையான அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே அவர் நல்ல ஆடை அணியக் கூடாதா? அந்த ஆசைஅவருக்கு வந்தால் அது தவறா? அத்தகையவர்களுக்கு மெய்ஞானம் வந்தால்தான் எளிமையான ஆடைகளை அணிவார்களா? அருண்ஷோரி அம்பேத்கரைப் பற்றி எழுதி அவமானப்படுத்தியது போலத்தான் இதுவும்! காந்தியும் பிறரும் அதே ஊழியில் சூட்டுகளை அணிந்தது போல்தான் அம்பேத்கரும் அணிந்தார்.
அதனை ஏன் ஒரு பெரிய செய்தியாக ஜெயமோகன் எழுதுகிறார்? இன்றைய காந்தியைக் காட்ட எண்ணிய அவர் அம்பேத்கரை ஏன் அவமானப்படுத்துகிறார்?
தமிழ்நாட்டில் _ அக்கால சென்னை மாகாணத்தில் கோட் சூட்டோடு பொலிவாக விளங்கிய தாழ்த்தப்பட்ட தலைவர்கள் பலர் உண்டு. இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, மேயர் என்.சிவராஜ், ஆர்.வீரைய்யன், எல்.சி.குருசாமி முதலான தலைவர்கள் கோட் சூட் அணிந்து கம்பீரமாக காட்சி அளித்தனரே. இவர்களெல்லாம் அம்பேத்கர் அளவுக்குப் பெயரும் புகழும் பெற்றவர்கள் அல்ல. இருப்பினும் அக்காலத்தில் ஆங்கில ஆதிக்கம் இருந்தபோது அம்மொழி கற்ற மேதமை நிறைந்தவர்கள் உடுப்புகளை அய்ரோப்பிய பாணியில் அணிந்தார்கள்.
தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயர் கோட் சூட் தலைப்பாகையோடு காட்சியளிக்கவில்லையா? அவர்களை வெளிப்படுத்திக் கொள்ள ஓர் அடையாளம் தேவைப்பட்டது. அதனால்தான் அம்பேத்கரும் கோட் சூட் அணிந்து கொண்டார். ஒருவேளை தாழ்த்தப்பட்டவர்கள் கோட் சூட் அணிந்து கொள்ளக் கூடாது என நினைக்கிறாரா _ ஜெயமோகன்?
#######
காந்தியின் இயற்கை மருத்துவ அத்தியாயத்தில் காந்திய பிரமிப்பு என்று ஒன்றுமில்லை. இங்கே இரண்டு செய்திகளைச் சொல்ல விரும்புகிறோம்.
காந்தி எனிமா கொடுத்துக் கொள்ளுவது – மலக்குடலைக் கழுவிக் கொள்வது, கறிகாய்களை, கனி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவது, இயற்கை மருந்துகளைத் தயாரித்து அருந்துவது என்கிற பழக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்த மறைமலையடிகளுக்கும் இருந்தது. அவரது நாள் குறிப்புகளைப் பார்த்தால் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
மறைமலையடிகள் இந்தியாவில் வாழவில்லை. அவர் ஒரு குழுவின் தலைவர்; அவர் இந்தியத் தலைவரும் இல்லை அல்லவா? அதனால் அவரது இயற்கை மருத்துவ முறைகள் ஜெயமோகனுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது. இது ஒரு செய்தி.
இன்னொரு செய்தி. வேலூரில் கிரிக்கேரி எனும் ஊரில் வாழ்ந்து வந்த ஒரு துறவியைப் பற்றியது.
இவரது இயற்பெயர் இன்னதென்று யாருக்கும் தெரியாது. 20ஆம் நூற்றாண்டின் மூன்றாம் பத்துகளில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் கிரிக்கேரி சாமியார் என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் பெற்றோர் யார்? ஊர் எது? என்கிற விவரம் யாருக்கும் தெரியாது.இவர் நாமதாரியோ, விபூதி பூச்சாளரோ இல்லை. இவர் கடவுளைப் பற்றி எதுவும் சொல்வது இல்லை; எழுதுவதில்லை.
இவர் யாரோடும் பேசுவதும் இல்லை. இவரிடம் ஏதாவது கூற வேண்டுமானாலும் இவர் மற்றவர்களிடம் ஏதாவது தெரிவிக்க விரும்பினாலும் மணலில்தான் எழுதிக் காட்டுவார்கள். அந்தச் சாமியார் பேய்போல் திரிந்து நாய்போல் உழன்றவர். மேலுக்கும் கீழுக்கும் இரண்டு முண்டுகள்; இதுதான் அவர் உடை! இவர் அந்த மாவட்டத்தில் மக்கள் பணி ஆற்றி வந்தார்.
1930களில் காந்தி வட ஆர்க்காடு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். வேலூர் காங்கிரசார் கிரிக்கேரி சாமியாரைக் காந்திக்கு அறிமுகம் செய்தனர். அதற்குப் பதிலாகக் கிரிக்கேரியார் காந்திக்கு வணக்கம் தெரிவித்தார். அதோடு சரி. வேலூரிலிருந்து குடியாத்தம் வரை காந்தி சென்ற மோட்டாரில் பயணம் செய்தார் கிரிக்கேரியார்.
காந்தியோடு எதுவும் பேசவில்லை. காந்தியும் பேசவில்லை. குடியாத்தம் வந்தவுடன் காந்திக்கு ஒரு வணக்கம் தெரிவித்துவிட்டு கிரிக்கேரியார் மோட்டாரிலிருந்து இறங்கிக் கொண்டார். மோட்டாரில் கிரிக்கேரியார் ஏன் அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் அந்தக் காலத்தில் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க பேசாத சாமியாராக அவர் இருந்தார்.
மக்கள்பணி மூலம் அந்த ஊமைச் சாமியார் ஒரு கிராமத்தையே எழுதப் படிக்கச் செய்தார். இவர் குளித்து யாரும் பார்த்தது இல்லை. பசிக்கிறபோது ஓர் உருண்டைக் குழம்பு சோறு இரு கரத்தில் வாங்கி நண்பகலில் பசியாறுவது மட்டுமே கிரிக்கேரியார் சாப்பிடுவது! அதனையும் எவர் வீட்டு முன்னும் நின்று பெற்றுக் கொள்வார். அவருக்கென்று உடைமை எதுவுமில்லை. ஒண்ட ஓர் குடிசை; மாற்ற முண்டுகள் மூன்று!
இவரைத் திரு.வி.க.வும் டாக்டர் மு.வ.வும் ஒருமுறை சந்திக்கச் சென்று பார்த்துப் பேசினர். அவர் விடைகளை மணலில் எழுதிக்காட்டி இருக்கிறார். அப்போது அவர்கள் இதுவரை சாமியார் குளிக்காததைப் பற்றி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர் குளிக்க வெந்நீர் வைக்கச் சொல்லுகிறார். கிராமத்து மக்கள் பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைக்கிறார்கள். அதற்காக விறகை எரியூட்டுகிறார்கள். வெந்நீர் கொதிக்கத் தொடங்குகிறது.
கிரிக்கேரியார் பச்சை மிளகாயை நிரம்ப கொண்டு வந்து அம்மியில் அரைத்து உண்டையாக்கச் சொல்லுகிறார். கொதித்த வெந்நீரைத் தண்ணீர் கலக்காமல் அப்படியே தலையில் ஊற்றச் சொல்லி, தலைக்குப் பச்சை மிளகாய் உருண்டையைக் கொண்டு தேய்க்கச் சொல்லுகிறார்.
சாமியாரும் தேய்த்துக் குளித்தார். இதை மக்கள் பார்த்துப் பெருவியப்பு அடைந்தனர். சுடு நீரும், பச்சை மிளகாயும் உடம்பை என்ன பாடு படுத்தியிருக்க வேண்டும். கிரிக்கேரி சாமியாரிடமிருந்து ஒரு முக்கல், முணுமுணுப்பு கூட இல்லை. இது கடவுள், மகிமை, மந்திரம், தந்திரம் போன்றவற்றால் நிகழ்ந்தது இல்லை.
இது உடற்பயிற்சி, மருத்துவ குணத்தின் மாற்று அறிந்த நிலையால் நிகழ்ந்தது. ஆகவேதான் கிரிக்கேரியாரால் அப்படிச் செய்ய முடிந்தது. எனவே, காந்திய மருத்துவம் போல ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சோதனை செய்து கொள்ளுவது நடைமுறையில் இருந்து இருக்கிறது. அதில் பிரமிப்பு தோன்றுவதற்கு ஒன்றும் இல்லை.
__
திராவிட இனவாதம் இங்கே பிரிவினைத் தேசியமாக முன் வைக்கப்பட்டது என்கிறார் ஜெயமோகன். திராவிட இனவாதம் என்பது தமிழ்த் தேசிய இனவாதம்தான். தென்பகுதி முழுவதும் சென்னை இராஜதானியாக, மாகாணமாக வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது. அது பழந்தமிழ்நாட்டின் நிலப்பகுதி. அந்நிலப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர் மட்டுமின்றி தமிழிலிருந்து திரிந்த மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியினரும் வாழ்ந்தனர். அவர்களையும் உள்ளடக்கி திராவிட நாட்டைக் கேட்டனர் திராவிட இனத்தினர்.
வரலாற்றை உண்மையாக அறிந்த டாக்டர் டி.எம்.நாயர்தான் திராவிட நாடு கொள்கைக்கு மூலவர். அவருடைய திடீர் மரணம் அதனை மறக்கச் செய்துவிட்டது. மீண்டும் அது 1940இல் கிளர்ந்தெழுந்தது.
திராவிட நாடு சாத்தியமில்லாதபோது தமிழ்நாடு மட்டும் தனியாக இருப்பது தவறு ஒன்றும் இல்லை என்றும் பேசப்பட்டது. இக்கோரிக்கையை எழுப்பியதற்காகவும் ஒத்தி வைத்ததற்காகவும் வெட்கப்பட வேண்டியது இல்லை. அரசியல் நடவடிக்கைகளில் நீக்குப் போக்குகள் இருக்கும்.
தனிநாட்டில் பிறமொழியாளர்களும் இருப்பார்கள். இதற்கு மக்கள் தொகைக் கணக்கு அவசியமில்லை. நிலப்பரப்பு யாருக்குச் சொந்தமாக இருக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதை ஜெயமோகன் பார்க்க மாட்டார். பார்ப்பனர்கள் இரு பிறப்பாளர்கள் என்றால் ஜெயமோகன்கள் மூன்று பிறப்பாளர் ஆவர்.
பார்ப்பனர்களுக்குத் தாய்மொழி எது? _ என்று ஜெயமோகன் கூறுவாரா? சமஸ்கிருதம் அவர்களின் தாய்மொழி என்று சொல்லமுடியுமா? தாய்மொழி சமஸ்கிருதமா ஆனால் அது பேச்சுமொழியாக இருந்திருக்கும். சமஸ்கிருதம் பேச்சு மொழி அல்ல. ஆகவே, சமஸ்கிருதம் தாய்மொழியாக இருக்க முடியாது. பார்ப்பனர்கள் இந்தியா முழுமையும் இருக்கிறார்கள்.
ஆங்காங்குள்ள நாட்டு மொழிகளைத்தான் அவர்கள் தாய்மொழி என்று கூறுகிறார்கள். உண்மையில் அவர்களுக்குத் தாய்மொழி என்று ஒன்று இல்லை. ஆகவே, அவர்கள் நாட்டு மொழிகளை தாய்மொழியாக ஏற்று அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டு இருக்கிறார்கள். மறுமலர்ச்சிக்கு உரியதைச் செய்து இருப்பார்கள். ஆனால், சமஸ்கிருதத்தைக் கைவிடவில்லையே.
அது ஏன்? பாதிப் பார்ப்பனரும் மூன்றாம் பிறப்பாளருமான ஜெயமோகனுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது.