ஆன்மீகவாதிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் வழிபடும் கடவுள்கள் பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை. அவர்கள், அதற்காக பயன்படுத்தும் சொல்லாடல்களைப் பற்றியும் சிந்திப்பதில்லை. செக்கு மாடு போல சுற்றி சுற்றி வருவதைத் தவிர, வேறெதுவும் தெரியாது. மன்னிக்கவும் ஒன்றே ஒன்று தெரியும்.
பகுத்தறிவுக்காரர்கள் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கைகளை சமுதாய மேம்பாட்டின் பொருட்டு, ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லும்போது, ஆஹா… எங்களது மத நம்பிக்கை உணர்வை புண்படுத்துகிறாயே! என்று பொருளில்லாமல் புலம்பத் தெரியும். அவ்வளவுதான்.
இப்போது வழக்கத்திலிருக்கிற எல்லாவற்றையுமே ஆய்ந்தாய்ந்து சொல்லப்பட்டு வருகின்றன என்றாலும் அந்த வரிசையில் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற சொல்லாடலின் பொருள் என்ன? முப்பத்து _ என்றால் மூன்று பத்து. அதாவது மூன்று பத்து = முப்பது. சரி, இது நன்றாக விளங்கி விடுகிறது. முக்கோடி என்றால் மூன்று கோடியா? அவசரப்பட வேண்டாம்.
முக்கோடி _ என்பதற்கு தமிழ் எண்கள் வரிசைப்படி ஒன்று, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கற்பம், நிகர்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நிலம், அர்ட்டம், பரர்ட்டம், ஊரியம், முக்கோடி, மகாயுகம் _ என்று போகிறது. இதில் நமக்குத் தேவையான முக்கோடி _ பத்தொன்பதாவது வரிசையில் வருகிறது.
இதை எப்படி எழுதுவது. அதாவது முக்கோடி = கோடி கோடி கோடி இதையும் விரிவாக்கிக் காட்டினால் எப்படி எழுதுவது?
அதாவது: 1,000,000,000,000,000,000,000 _ இதையும் 30ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
தலை சுற்றுகிறதல்லவா? முப்பதுக்குப் பின்னால் 21 சுழியம் எழுத வேண்டும். இதைத்தான் முக்கோடி என்று சொல்வது. அல்லது கோடி கோடி கோடி என்றும் சொல்லலாம்.
சரி, இப்போது விசயத்திற்கு வருவோம். பக்தர்கள், இன்று வரையிலும் கையாளும் சொல்லாடல், தனக்குத் தெரிந்த வரையிலும் கடவுள்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு, அதன்பிறகு, சகல முக்கோடி தேவாதி தேவர்களே! என்று முடித்துக் கொள்வார்கள்.
நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள்!
இந்த வழிபாடு இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய உலக மக்கள் தொகை 700 கோடி. இந்த ஆண்டு மலையாள மனோராமா ஆண்டு மலரில் கொடுக்கப்பட்டிருந்த புள்ளி விபரப்படி இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி.
அப்படி என்றால்?
முப்பத்து முக்கோடியை, இந்துக்களின் எண்ணிக்கையான 90 கோடியில் வகுத்தால் வரும் விடையென்ன?
அதாவது,
30,000,000,000,000,000,000,000
90,0000,000
= 3.3 லட்சம் கோடி
ஆக, ஒரு இந்துவுக்கு, 3.3 லட்சம் கோடி கடவுள்கள்???
எப்படி இருக்கிறது கதை…
ஒரு பக்தனுக்கு ஒரு கடவுளே என்று சொன்னால் கூட பயனில்லை. காரணம் கடவுளே இல்லை. அப்படியென்றால், பக்தர்களின் கருத்துப்படி பார்த்தாலும் ஒருவருக்கு 3.3 லட்சம் கடவுள் என்றால், உடம்பிலிருக்கும் ஒவ்வொரு மயிருக்கும் ஒரு கடவுளா?
கடவுள் என்கிற கருத்தை பகுத்தறிவாளர்களா கொச்சைப்படுத்துகிறார்கள்? பக்தர்கள் சிந்திப்பார்களா?