– வீ. மீனாட்சி
ஒரு நகரத்தைத் தாண்டி 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கிராமம். அது ஒரு மாலை நேரம். வாசலோரத்தில் நீரை இரைத்து முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தாள் தனம். தூரத்தில் அவளுடைய அண்ணன் வேலப்பனும், அவன் மனைவியும், அவர்களின் 6 வயது மகன் ராசுவும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். தனத்தின் முகத்தில் மகிழ்ச்சியின் ஒளி வீசியது.
முகத்தை சேலையால் துடைத்துக் கொண்டே அவர்களை எதிர்கெண்டு, வாங்க, வாங்க என்று வரவேற்றாள். வீட்டின் முற்றத்தில் சுருட்டி வைத்திருந்த பாயை எடுத்து விரித்து, உட்காருங்க என்று கூறினாள்.
வேலப்பன், தன் கையில் வைத்திருந்த மஞ்சள் பையை அவளிடம் நீட்டியபடி, எங்கே… வீட்டில் ஒருத்தரையும் காணலை? என வினாவினான்.
அதுவா… எ மாமா, அத்தை, கொழுந்தியா மரகதம், எ மவன் பாவு.. எல்லோரும் இதோ, அடுத்த தெருவுல இருக்கிற மாரியாத்தா கோயில்ல காட்ற பொம்மலாட்டத்தைப் பார்க்கப் போயிருக்காங்க…; என் வூட்டுக்காரன் பஸ் ஸ்டாண்டுக்குப் பழ வண்டி தள்ளிட்டுப் போயிருக்கு என்றாள் தனம்.
வேலப்பனின் மனைவி, நாங்க பஸ் ஸ்டாண்டல பாக்கலையே! என்று கேட்டுக் கொண்டே பாயில் உட்கார்ந்தாள்.
தனம் ஊரிலுள்ள தன் சொந்தக்காரர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும்போது பாவுக்கு… இப்போ வயசு பத்து இருக்கும்னு நினைக்கிறேன் என்றான் வேலப்பன்.
ஆமாண்ணே… பக்கத்திலேயிருக்கும் பள்ளிக்கூடத்திலேதான் படிக்கிறான். படிப்பே வரமாட்டேஙன்குது; என்ன பண்றது? நானும் மூனாங்கிளாசு, அவ அப்பனும் அஞ்சாங்கிளாசு என்றாள்.
சித்த இருங்க… உலையில அரிசி போட்டுட்டு வந்துட்றேன்; என சொல்லிக் கொண்டே அதே அறையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அடுப்பிற்கு அருகில் போய் அமர்ந்து சமைக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்குள், கோயிலுக்குச் சென்றிருந்த அனைவரும் வந்துவிட்டனர். தனத்தின் மாமியார் ஓ! வாங்க… வாங்க. எப்ப வந்தாப்பல? என்று ஒரு ஏளனப்பார்வையுடனும், மாமியாருக்கே உரிய தோரணையுடனும் வரவேற்றாள்.
தன்னை ரொம்ப நாட்கள் கழித்து பார்க்க வந்த அண்ணனை சொற்களால் சாட்டையடி அடிக்கும் மாமியாரைத் தட்டிக் கேட்கத்தான் நினைத்தாள் தனம். ஆனால் தனத்தின் கணவன் மாறன், தன் அம்மாவின் மேல் கொண்டுள்ள முரட்டுத்தனமான அன்பு அவளை ஊமையாக்கியது.
சற்று நேரம் மௌனம் அங்கே பேசியது. தனம் அதை உடைக்க விரும்பி, மரகதத்தை அழைத்து, இந்தா மாம்பழம், சாப்பிடுங்க என்று மாம்பழத்தைக் கொடுத்துக் கொண்டே பாவு, மாமனார், மாமியார் ஆகியோருக்கும் பழத்தைக் கொடுத்தாள். இம்… பெர்ர்..ய மாம்பழம் எனக் கூறிக்கொண்டே, அதை வாங்கி சாப்பிட்டாள் தனத்தின் மாமியார். தனம் மனதிற்குள் பூத்தாள்.
சரி, எல்லாரும் வந்து சாப்பிட் வாங்க என்று கூறிய தங்கச்சிக்காக, வேலப்பன் சாப்பிட அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மாறன் வர, வாங்க மாப்ள என்றழைத்தான் வேலப்பன்.
மாறன் பழவண்டியை வீட்டின் வெளியே நிறுத்தி, அது நகராமல் இருக்க சக்கரத்தின் அடியில் கல்லை வைத்துக் கொண்டே, எப்போ வந்தாப்ல? என்று அவனும் பதிலுக்குக் கேட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தான்.
விசாரிப்புகள் முடிந்தவுடன் வேலப்பன், நாங்க கௌம்பறோம். கடைசி பஸ்ஸைப் பிடிச்சு ஊர் போய்ச் சேர்ந்து விட்டால், விடியல்ல எந்திருச்சு நம்ம வேலையைப் பார்க்கலாம் என்றான்.
இரு அண்ணே, இரவு இருந்துட்டு, நாளைக்கு போலாம் என்றாள் தனம். தனத்தின் வீட்டார் எதுவும் பேசவில்லை. வேலப்பன் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான் தன் குடும்பத்துடன்.
மறுநாள் அதிகாலையில் மாறன் எழுந்தவுடன், இந்தப் பழவண்டியை வைத்துக்கொண்டு, என்ன பெருசா சம்பாதிக்க முடியுது? நாலு காசு பார்க்க முடியல… இப்போ மளிகைக் கடையிலேயே பழக்கடையையும் வைச்சு, என்னமோ டிப்பாட்டுமெண்டல் கடை என்கிறானுக…
அங்கதா எல்லா சனமும் பொருள் வாங்குறாக… நம்ம கிட்ட வரவங்க… வர வர ரொம்ப கொரஞ்சுகிட்டே வருது… என்று புலம்பிக் கொண்டே, தன் தந்தையின் தொழிலை நடத்தி வந்தான்; மனைவி தனத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் மிகுந்தஅக்கறை கொண்டவன்.
காப்பித் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்த மாறனின் அம்மா, பேசிக்கிட்டே இருக்காதே, பொழப்ப பார்க்குற வேலையைப் பாரு… கொஞ்ச நாள் போனா மரகதத்துக்கு கண்ணாலம் செஞ்சாகனும், காசு சேர்க்கற வழியத் தேடு என்றாள்.
மாறனும், ஆமா… ஆமா… என்ன பேசி என்ன செய்ய, இதைவிட்டா வேற வழியும் தெரியல என்று கூறிக்கொண்டே தனத்தை அழைத்து, மத்தியானத்துக்கு சோத்தை கொண்டாந்துரு அந்தக் கரண்டு கம்பத்து நிழலிலே வண்டியை நிறுத்தியிருப்பேன்…
மரத்துநிழலுக்கு எங்க போறது? இருக்கிற மரத்தையெல்லாந்தான் பெரிய ரோடு போடுறோன்னு… வெட்டிப் புட்டாங்களே என்னும் புலம்பலோடும் இப்பவே மணி அஞ்சு ஆச்சு… போய் சேர மணி ஏழு ஆயிரும் எனக் கூறிக்கொண்டு வண்டியை நகர்த்த ஆரம்பித்தான்.
அவன் சென்றதும், தனம், மகன் பாவுவை குளிக்க வைத்துவிட்டு, இரவு மீதமான உணவை அவனுக்கும், மாமாவுக்கும், அத்தைக்கும் கொடுத்துவிட, தனக்கு இல்லை என்று கவலைப்படாமல் மற்ற வேலையைப் பார்த்துக் கொண்டு பாபு கொண்டு பாபு பள்ளிக்குச் செல்லும்போது, மத்தியானம் பள்ளிக்கூடத்தில் கொடுக்கிற சத்துணவை வாங்கிக் சாப்பிடு, கீழேக் கொட்டிவிடாதே என்றாள்.
பிறகு வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு மாறனுக்கு மத்தியான உணவை சமைத்து, எடுத்துக் கொண்டு போனாள். மாறன், நா போயி பழக்குடோனிலிருந்து பழம் எடுத்துட்டு வந்துட்றேன் …. வண்டியைப் பார்த்துக்க … எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
சிறிதுநேரம் கழித்து வந்தவனிடம், வியாபாரத்தை நானும் பார்த்துக்கிறேன் என்ற மனைவியிடம், அதெல்லாம் ஒன்னும்வேணாம்… பொம்பளைங்க சம்பாரிச்சு சாப்பிடனும்னு தலையெழுத்து எனக்கில்லை… போ… போ… இனிமேல் சாப்பாடு கொண்டு வர வேண்டாம் எனத் திட்டினான்.
இதுபோல் பலமுறை வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தாலும் தனத்திற்கு எப்பொ-ழுதும் தோல்விதான் மிஞ்சும்.
இப்படியே மாமியாரின் வசை, மாமனாரின் மௌனம், மாறனின் பழ வியாபாரம், தனத்தின் அன்றாட வீட்டு வேலையென்று நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
ஒரு நாள்தனம், மாறனுக்கு உணவு எடுத்துக் கொண்டு, பேருந்தில் வரும்பொழுது, அருகில் நின்று கொண்டிருந்த பெண்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ஆச்சரியம் கொண்டாள். பெண்கள் சுயநிதிக்குழு அமைத்து அதில் சேர்ந்துள்ள அனைவருக்கும் நல்ல பயன் கிடைத்துள்ளது என்பதுதான் அது.
அன்று இரவு தனம், மாறன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது… ஏதோ… பெண்கள் சுயநிதிக் குழுவாம்… குழுவில் சேர்ந்தபின், கடன் கேட்டா தருவாகளாம்… அதை வாங்கி ஒரு பழக்கடையை வீட்டோரம் வைச்சுக்கலாமா… நாலு காசு சேர்ந்தா… நமக்குத்தானே நல்லது.
ஏஏ… நா காசு சேர்க்குறது பத்தலையா உனக்கு, இனிமே மறுபடியும் இந்த மாதிரி பேசிகிட்டு இருந்தா… என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது… சாப்பிட்டிலேயே கையை கழுவிட்டு, கோபமாக மாறன் எழுந்துவிட, தனம் அப்பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.
இது நடந்து ஒரு ஆறு மாதம் கழித்து, ஒரு நாள் இரவு மாறன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் ஒரு லாரி அவன் மீது மோதிவிட்டு சென்றது.
நிலைகுலைந்த மாறனின் ஒருகால் முறிந்துவிட்டது. எங்கும் நகர முடியாமல் படுத்த படுக்கையாயிவிட்டான். தனத்திற்கு கையும் ஓடவில்லை; காலும் ஒடவில்லை.
மாறனின் கால் முறிவை சரி செய்ய சேர்த்து வைத்திருந்த எல்லாப் பணமும் செலவழிந்துவிட, மாறனின் தாய், தனம் நீ உன் அண்ணனிடம் செலவிற்கு பணம் கேள் என்றாள். வேலப்பனும் தன்னால் இயன்ற பணத்தைக் கொடுத்தான். அதுவும் தீர்ந்துவிட்டது. பழவண்டியையும் விற்றாகிவிட்டது.
மாறன் நடக்க ஆரம்பித்தாலும் வேலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் வாங்கியாயிற்று. இச்சூழ்நிலையில் மாறன் குடிக்க ஆரம்பித்தான்.
கையில் காசு இல்லாததால் அடுப்பு பற்ற வைக்க வழியில்லை. தனம் வேலைக்குச் செல்ல முடிவு எடுக்க, சித்தாள் வேலைக்கு ஆள் தேவை எனப் பக்கத்து வீட்டு பரிமளம் சொல்ல, மாறன் இல்லாத நேரம் பார்த்து புறப்பட்டாள். இது தனத்தின் மாமியாருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் பசியென்ற ஒன்று இருக்கின்றதே, அதனால் அவளும் அடங்கிப் போனாள். தனம் பயந்து கொண்டே வேலைக்குச் சென்றாள்.
மாலை வீடு திரும்பிய பின்தான் தெரிந்தது, மாறன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டானென்று; வேலையைவிட்டு வரும்பொழுது வாங்கி வந்த அரிசியைப் போட்டு கஞ்சி வைத்து பாபு, மரகதம் உள்ளிட்ட அனைவருக்கும் கொடுத்துவிட்டு, அக்கம்பக்கமெல்லாம் மாறனைத் தேடிப்பார்த்தாள்; கேட்டுப் பார்த்தாள்.
எங்கும் காணவில்லை. இப்படியே பல நாட்கள் ஓடிவிட்டன.
கிழிந்த உடை, கண்களில் வறட்சி, எண்ணெயைப் பார்க்காத காய்ந்த தலைமயிர், மண்ணால் பூசப்பட்ட உடல் _ இவைதான் தனம். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்ல நகரப் பேருந்தில் அமர்ந்திருந்தாள்.
எல்லா நடக்கட்டும்… பொம்பளைங்க ராஜ்ஜியம் நடக்குது என்ற சத்தம் கேட்டது. மாறன் தனம் அமர்ந்திருந்த சீட்டிற்கு அருகில் கீழே நின்று கொண்டிருப்பதையும், குடிபோதையில் தனத்தைப் பார்த்துத்தான் திட்டிக் கொண்டிருந்ததையும் கண்டு, மனம் பதைபதைத்தாள்; இருந்தும் மகிழ்ச்சியடைந்தாள்; ஒரு அய்ம்பது ரூபாய் நோட்டை எடுத்து, இந்தா புடி என்றாள்.
யாருக்கு வேணும் இந்தக் காசு… வாங்க மறுத்து, கண்டபடித் திட்டினான். பேருந்தில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க, தனம் உடம்பைக் குறுக்கிக் கொண்டு நெளிந்தாள்; உனக்கும் டிக்கெட் எடுத்துட்டேன், பஸ்ஸில் ஏறு; என்றாள்.
நான் எதற்கு வரணும்… இவ்வளவு நாளா நான் சம்பாதிச்சு என் ஆத்தா முதல் புள்ள வரைக்கும் நாக்கைத் தொங்கப் போட்டு இத்தனை நாள் கொட்டிக்கிட்டு… இப்போ நான் கையால் ஆகாதவனாகிட்டேன் உங்களுக்கு… வேறு எதுவும் பேசாத தனம், வீட்டிற்கு வா… என்றாள்.
நீ சம்பாதிக்கிறதை, நீயே செலவு செய்யுற… யாரை கேட்கணும் உனக்கு? வூட்டுக்கு வந்தா… பெத்த மகன்கூட மதிக்கிறதில்லை என்று கூறிக்கொண்டே, அடிக்க கையை ஓங்கினான் கீழே நின்றபடி.
பேருந்து புறப்படப் போவதை அறிந்த தனம், கீழே இறங்கி அவன் கையைப் பிடித்து இழுக்க… கையை உதறிய மாறன். பேருந்தைவிட்டு விலகி எதிர்ப்புறமாக தள்ளாடியபடி நடக்க ஆரம்பித்தான்.
கண்களில் கண்ணீர் மல்க அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில் பேருந்து புறப்படும் ஒலி கேட்க, மகனின் பசிக்கதறல் அதைவிட ஒலிக்க, ஓடிவந்து பேருந்தில் ஏறினாள்.
எவ்வளவோ துன்பங்களை சகித்து, கண்ணீரில் கழுவி, பொறுமையுடன் கணவனுக்கும், அவனது குடும்பத்தாருக்கும் அடங்கி நடந்த தனத்திற்கு பஸ் ஸ்டாண்டில் எல்லோரும் வேடிக்கை பார்க்க, மாறன் தன்னிடத்தில் நடந்து கொண்ட செயலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சுண்ணாம்புக் கல்லில் நீர் விட்டால் எப்படி கொதிக்குமோ அதுபோல் தனத்தின் மனம் கொதித்தது. அப்போத பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. அந்த நிறுத்தத்திற்கு அருகில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் பெண்களின் உரிமை என்னும் தலைப்பில் பேசினார்.
பெண்களைப் புருசனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல் மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், கீர்த்தி புகழ்பெறும் பெண்மணியாக ஆக்கவும் வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படி நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு _ தாழ்வு ஏன்? என்ற எண்ணம் எழ வேண்டும். என் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படக் கூடாது:
அவர்கள் புது உலகத்தைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான் என்று பல வருடங்களுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் சொன்னது என்று அழுத்தமாக தன் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
இதைக் கேட்பதற்காகவே பேருந்து சிறிதுநேரம் நின்றதுபோலிருந்தது தனத்திற்கு. அந்த சொற்பொழிவைக் கேட் மாத்திரத்தில் அவளது மனம் ஒரு தெளிவு பெற்றது போலிருந்தது.
சொன்னால் கேட்காத, வீரார்ப்பு பேசும், நடைமுறை வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாத கணவனைவிட, புள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்று எண்ணிய மாத்திரத்தில், இரவு எப்பொழுது கழியும்? காலைப்பொழுது எப்பொழுது மலரும்?… சுயநிதிக் குழுவில் எப்பொழுது போய் சேரலாம்? என்ற எண்ணம் அவள் வழியில் தெரிந்தது.
தனத்தின் விடியல் இன்னும் சில வினாடிகளில். இவளைப் போன்ற மற்றப் பெண்களுக்கு?… விடியல் வெகுவிரைவில்.