1997இல் தமிழ்த்திரைப்பட உலகம் சந்தித்த சறுக்கல்களுக்கு மதராஸ் என்பதை சென்னை என்று பெயர் மாற்றியதுதான் காரணம் என்றார்கள் நேமாலஜி கம்பெனியார்கள். அதன் பிறகு தமிழ்த்திரை உலகம் பன்னாட்டு அளவில் பேசப்பெற்றது. வணிகம் பெருத்தது. சென்னை என்ற பெயர் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்திய நாடாளுமன்றம் வட்டமாக இருப்பது வாஸ்துசாத்திரப்படி தவறு. அது கிணற்றைப் போல இருக்கிறது. அதனால்தான் இந்தியாவின் அரசியல் நிலையற்றதாக இருக்கிறது என்று 1996 முதல் 99 வரையிலான காலத்தில் சொன்னார்கள். இன்னும் இந்திய நாடாளுமன்றம் வட்ட வடிவத்தில் தான் இருக்கிறது. அதன் பிறகு பி.ஜே.பி 5 ஆண்டுகளும், காங்கிரஸ் 8 ஆண்டுகளுக்கும் மேலாகவும் தொடர்ந்து ஆண்டு வருகின்றன. கிணற்றைப் போல இருக்கிறது என்றவர்கள் கிணற்றில் விழுந்து சாகவில்லை. ஏதாவது ஒன்று நடந்து முடிந்தபிறகு இதற்கு அதுதான் காரணம் என்றெல்லாம் தங்களுக்கேற்ப வளைத்துக் கொள்வது இந்த வகையறாக்களின் பண்பு.
‘சூரிய கிரகணத்தையொட்டி சுனாமி வரும்; பின் மண்டையில் மயிர் குறைந்தால் பினாமி வரும்’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அடித்துவிடுவதில் ஏதாவதொன்று நடந்து விடாதா? அதை வைத்துக் கொண்டு பிழைத்து விட மாட்டோமா என்பது அவர்களின் கணக்கு. அப்படிப்பட்டது தான் இந்திய பொருளாதாரச் சரிவுக்குக் காரணம், கத்தியைக் கொண்டு அறுக்கும் ரூபாய் குறியீடு என்று சொல்வதும்! ஜப்பானிய ‘யென்’ வடிவமும், அமெரிக்க டாலர் வடிவமும் இந்த கூழ்முட்டைகளின் கண்ணில் படவில்லையோ? கிரீசின் பொருளாதாரச் சரிவு தான் யூரோ நாணய மதிப்பு குறைவிற்குக் காரணம் என்று யாராவது சொன்னால், இல்லையில்லை யூரோ நாணயம் ‘ஈஈ’ என்று இளித்துக் கொண்டி ருப்பதுதான் காரணம் என்று சொல்வார்கள் இந்த வாஸ்துவீணர்கள். – சமன்