பொருளாதாரச் சரிவுக்கு காரணம் “வாஸ்து” வா?

ஜூன் 16-30

விவசாயிகள் புதிய ரக விதைகளைத் தேர்வு செய்து, நட்டு, பெரும் மகசூல் பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். பெரிய மகசூல் பெறும்போது அதிக இலாபம் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் தொடர் முயற்சிகள் நடக்கும்.

மதவாதிகள் இதைப்போலவே தொடர்ந்து மக்கள் மத்தியில் புதிய நச்சுக் கருத்துக்களை நட்டு, பரப்பி, பயத்தை ஏற்படுத்துவார்கள். பின்னர் பயத்தை நீக்க பரிகாரம் செய்கிறோம் என்று மக்களை ஏய்த்து சம்பாதிப்பார்கள். அந்தப் போக்கில் சமீப காலங்களில் பெருத்த பணம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் துறையில் மதவாதிகள் வாஸ்து என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி கொழுத்த இலாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

மக்கள் மனதை மூடநம்பிக்கையால் சிதைத்து, அதன்மூலம் வாழும் சாணி யுகத்து மேதைகள் வரிசையில் புதிதாய் சேர்ந்துள்ளவர் ராஜ்குமார் ஜான்அரி. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் சம்பந்தம் உண்டு என்ற முட்டாள்தனமான வாதத்தை முன் வைக்கிறார். வாஸ்து என்னும் பொய் நம்பிக்கையைக் கையில் எடுத்துக்கொண்டு ரூபாய் சின்னத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறுகிறார். அதனால் ரூபாய் மதிப்பு சரிவடைந்து உள்ளதாகக் கூறுவது நகைப்புக்கு உரியது.

அன்னிய செலவாணி துறையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமே ரூபாய் மதிப்பின் ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது.

தேவை (DEMAND) மற்றும் அளிப்பு (SUPPLY) என்பதின் அடிப்படை கட்டுமானத்தில்தான் நாட்டின் பொருளாதாரம் இயங்குகிறது. 1990க்கு முந்தைய பொருளாதார சூழல் இந்திய அரசு இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. அன்றைக்கு ரிசர்வ் வங்கியின் தலையீடுகள், ரூபாய் மதிப்பை கட்டுக்குலையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் அமைத்திருந்தது. இன்றைய சீன நிலைமை அதுதான்.

ஆனால் 1990க்குப் பின்பு பின்பற்றப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. L-P-G என்று பெயரிடப்பட்ட தாராளமயமாக்கல் (Liberalisation), தனியார்மயமாக்கல் (Privatisation),  உலகமயமாக்கல் (Globalisation)  கொள்கையில் அரசின் கட்டுப்பாடுகள் பெரும்பலன் அளிக்காது.

உதாரணத்திற்கு: பழைய பொருளாதார சூழலில் பெட்ரோல் விலையை அரசு நிர்ணயம் செய்யும். சர்வதேச சந்தையில் உள்ள விலை குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை. மக்கள் நலன்களை முன்னிறுத்தி அரசு விலை நிர்ணயம் செய்தது. இன்றைய சந்தை பொருளாதாரத்தில் பெட்ரோல் விலை கடந்த இரண்டு வருடங்களில் 25க்கு மேல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளது. அரசு செயலற்று உள்ளது.

சந்தைப் பொருளாதாரம் என்ற முறையில் அன்னிய செலவாணியின் தேவை (Demand) மற்றும் அளிப்பை (Supply) பொறுத்தே ரூபாய் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு முட்டை விலை ரூபாய் ஒன்று என்று வைத்துக்கொள்வோம். சில மாதங்களுக்கு முன்பு 45 முட்டைகளை ஏற்றுமதி செய்த நம்மூர் வியாபாரி 1 அமெரிக்கன் டாலரை பெற்றார். இன்று அவர் அதே ஒரு டாலர் பெறுவதற்கு 55 முட்டைகளை ஏற்றுமதி செய்யவேண்டும்.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு என பொருளாதார துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் காரணங்கள் சில உண்டு.

அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சரிவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர்களில் தங்கள் சேமிப்புகளை அதிகரித்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தையில் பெரும் தொகை முதலீடு செய்த முதலீட்டாளர்கள் டாலர்களை திரும்பப் பெறுவது.

உள்நாட்டு பொருளாதாரத்தில் காணப்படும் விலைவாசி உயர்வு; பணவீக்கம்; மத்திய, மாநில அரசுகளின் வருவாய்க்கு மிஞ்சிய செலவு; பட்ஜெட்டில் விழும் துண்டு போன்ற காரணிகள்.

இந்தியப் பொருளாதார துரித வளர்ச்சியின் போக்கின் காரணமாய் மதமைப்படும் வெளிநாட்டு கடன்கள்.
நம்மூர் வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்கள்.

அரசியலில் காணப்படும் உறுதியற்ற சூழல்; மக்கள் ரூபாய் மீது நம்பிக்கை இழப்பு போன்ற காரணங்கள் உண்டு.

இந்திய ரூபாய் மதிப்பு உயரும்போது ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள். ரூபாய் மதிப்பு சரியும்போது இறக்குமதியாளர்கள் உவகை கொள்வார்கள். இரவும் வரும்; பகலும் வரும். உலகம் ஒன்றுதான் என்பதுபோல ரூபாய் மதிப்பில் ஏற்றமும், இறக்கமும் வருவது சந்தைப் பொருளாதாரத்தில் இயல்பானது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் வாஸ்து மூடநம்பிக்கையாளர்கள் குறித்து மக்கள் விழிப்போடு இருக்கவும்.

 

மூடநம்பிக்கைகள் பல ரகம்

சிறந்த எழுத்தாளராக விளங்கிய பெஞ்சமின் டிஸ்ரேலி என்னும் அறிஞர் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதமராகவும் பணியாற்றியவர். அவர் அரசியல்வாதிகள், பொய்களை மூன்றாக விடுத்துள்ளார். அவர் மொழியில் கேட்போம்:

பொய்கள் மூன்று வகைப்படும்: முதல் வகை சாதாரணப் பொய்; இரண்டாவது, வெறுப்பை உண்டாக்கக் கூடிய பொய்; மூன்றாவது (பொய்யான) புள்ளி விவரங்களுடன் கூறப்படும் பொய் அன்றைய மொழி இன்றைக்கு பொருந்தும். இந்திய சமூகத்தை ஏமாற்றும் மூடநம்பிக்கை பரப்பாளர்களை பெரியார் பார்வையில் நாமும் மூன்றாக அவர்களை பிரிக்கலாம்.

முதல் ரகம்: பாமரர்கள் நம்பும் கைரேகை, எலி சோதிடம், கிளி சோதிடம், சோழியை உருட்டி காட்டும் சோதிடம் போன்றவை.

இரண்டாம் ரகம்: பெயர் மாற்றம் மோசடி, எண் கணித சாஸ்திர மோசடி, அதிர்ஷ்ட கல் விற்பனை மோசடி போன்றவை. இது மத்திய வர்க்க மக்களை குறிவைத்து செயல்படுகிறது..

மூன்றாம் ரகம்: வான சாஸ்திரம் தத்துவங்களின் அடிப்படையில் உருவானது என்று சொல்லி செயல்படும் சோதிட மோசடி கட்டிட கலை துறை (ஆர்க்கிடெக்ட்) தத்துவங்களின் அடிப்படையில் உருவானது என்று கூறி பணம் பறிக்கும் வாஸ்து மோசடியாகும். இதில் மத்திய வர்க்கத்தையும், மேல்தட்டு வர்க்கத்தையும் குறிவைத்து செயல்படுகிறது.

மூடநம்பிக்கை இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமில்லை என்று அய்யா சொல்வார். இந்தியாவில் வாஸ்து நம்பப்படுவது போல சீனாவிலும் அதை நம்புகிறார்கள். சீனாவில் வாஸ்துவுக்கு ஃபெங்_சூய்(FENG-SUI) என்று பெயர். ஆனால் இவர்கள் சண்டை போட்டு கொள்கிறார். இல்லாத பொருளை காட்டுவதில் மதங்கள் சண்டையிடுவதுபோல் இவர்களின் முரண்பாடும் இந்த மூடத்தன பரப்பிலும் உள்ளது.

இந்திய பொருளாதார நிலை தொடர்ந்து ஏற்றம் பெற்று வரும் காலகட்டம் இது. மரத்து நிழலில் சோதிடம் பார்த்த நிலை மாறி இன்று வாடகை எடுத்து பொருளாதார நிலையில் உள்ளார்கள். இதை மூடநம்பிக்கை பரப்பாளர்கள் அறியாமை, பேராசை கொண்ட மக்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைப்பது; பயத்தை உருவாக்குவது. பின்னர் பயத்தைப் போக்க பரிகாரம் செய்வதாகச் சொல்லி பணம் பறிப்பது என்ற மூடநம்பிக்கை பரப்பாளர்களை எதிர்கொண்டு களையெடுக்கும் பொறுப்பு பகுத்தறிவாளர்களுக்கு உண்டு. விஞ்ஞான பூர்வமானது என்ற தோற்றத்தில் வாஸ்து என்ற பெயரால் புதிய மூடநம்பிக்கை பரப்பும் போக்கு கண்டிக்கத்தக்கது.

புதிய நோய்கள் வரும். மருத்துவர்களுக்கு அதை எதிர்கொள்ளும் முறை தெரியும். வாஸ்து எனும் தொழுநோயை ஒழிக்க பகுத்தறிவாளர்கள் தயார் நிலையில் இருக்கவும்.

– சி. சுகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *