கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப்பட்டது – நீண்ட ஆலோசனைக்குப் பிறகு.
ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத்தறிந்தோ – இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது.
இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு – தி.மு.க. அரசு எதிர்த்து அதை ஒழித்து தனி ஏற்பாட்டினை சட்ட ரீதியாக செய்தும், அது உச்சநீதிமன்றத்தால்கூட ஏற்கப்பட்டது.
இப்போது கபில்சிபல் பிடிவாதமாக இதை அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்; கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன!
மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாச்சாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது!
இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது – கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும்!
தமிழ்நாடு அரசுக்கும் இதில் முக்கிய கடமை உள்ளது. முதலமைச்சர் அவர்களும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார் எனினும், இப்போது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்து, தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டி, இந்தப் புதிய சதித் திட்டத்தை ஒழிக்க முன்வரவேண்டும்!
கி.வீரமணி,
ஆசிரியர்