விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை வேறு. இந்த மூடநம்பிக்கையில் விழுந்து போன குழந்தை இல்லாத 58 வயதுடைய ஒருவர் கண்மூடித்தனமாக 14 ஆயிரத்துக்கு அதை வாங்கியுள்ளார்.
அடமூடர்களே எலுமிச்சம் பழத்தால் குழந்தையும் வராது குரும்பையும் வராது என்பதை நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் கண்டுபிடிக்கும் வழிமுறையை கண்டறிந்து அதை ஊடகங்களிலும் விளக்கிக் கூறியிருக்கிறான்.
பக்தி மனிதனை சூன்யத்துக்குள் இழுத்துச் செல்கிறது. பகுத்தறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. விருத்தாச்சலத்தை அடுத்த காணாது கண்டான் கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்கவும் பிறந்த குழந்தைகள் நோயில்லாமல் வாழவும் தங்களது தாலிகளைக் கழற்றி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினார்களாம். இன்னும் சில பெண்களோ குழந்தை வேண்டியும் இப்படிச் செய்தார்களாம்.
அடுத்து திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் தேவாலயத்தில் பருக்கள் – தேமல் – சிரங்கு போன்ற தோல் நோய்கள் வராமலிருக்க விளக்குமாறை நேர்த்திக் கடனாக வழங்கினார்களாம். பக்திக்கும் மாயைக்கும் அடிமை ஆகிப்போன இந்த பதர்களோடு ஒரு கேள்வி. உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கிற ஆடு, மாடு, நாய், பூனை, கோழிகள் எல்லாம் சுகமாகப் பிரசவித்து அதன் குட்டிகளும் நன்றாகத்தானே வளர்கின்றன.
அப்படியே அந்தப் பிராணிகளுக்கு நோய் வந்தாலும்கூட நீங்கள்தானே காரிலோ, கால்நடையாகவோ அவைகளுக்கான மருத்துவ மனைகளுக்கு கொண்டுபோய் சிகிச்சை அளிக்கச் செய்கிறீர்கள்.
நான்கறிவு, அய்ந்தறிவு உள்ள உயிர்கள் கூட உலகில் அறிவு சார்ந்து மதிப்புடன் வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனிதர்களே பதில் சொல்லுங்கள். பக்தி எனும் அஞ்ஞானக் குப்பைக்குள் விழுந்து பாழாகுவது பரிதாபத்திற்-குரியதல்லவா?