பதினெட்டு என்ன கணக்கு சாமீ…?
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வேகமாக சங்கர சாஸ்திரிகள் வீட்டிற்கு வந்து சாமீ… சாமீ என்று அழைத்தார். என்னடா ஆறுமுகம் என்று கேட்டவராய் சங்கர சாஸ்திரிகள் வெளியே வந்தார். சாமீ எங்க தெருவிலே ஒரு பையன் ஒரு தவளையை கல்லால் அடித்துக் கொன்று விட்டான் சாமீ என்றான்.
அப்படியா! பெரும் பாவமாச்சுதே உயிர்க் கொலையைக் காட்டிலும் பெரும் பாவம் உலகில் வேறில்லை. அதன் பலாபலனை அவன் அனுபவித்தே தீர வேண்டும் வேறு வழியே இல்லை என்று சாஸ்திரிகள் திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கு பரிகாரமே இல்லையா சாமீ என்றான் ஆறுமுகம். இல்லாமலென்ன எப்படிப்பட்ட பஞ்சமாபாதகத்திற்கும் பரிகாரம் உண்டு. ஆனால் கொஞ்சம் செலவாகும் என்றார்.
ஆனால் என்ன சாமீ வசதியுள்ள வீட்டுப்பிள்ளை சாமீ அவன் என்ன செய்யனும்? எவ்வளவு செலவாகும் என்றான் ஆறுமுகம்.
18 வாழைப்பழம், 18 தலை வாழை இலை, 18 தேங்காய், 18 ரூபாய், 18 படி பச்சரிசி 18 படி… என நீட்டிக்கொண்டே போனார் சாஸ்திரிகள்.
போதும் சாமீ! மொத்தமா எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க! ஏன் சாமீ பதினெட்டு பதினெட்டு என்று சொல்லிக்கிட்டே போறீங்களே பதினெட்டு என்ன கணக்கு சாமீ எனக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னா தேவலை.
வாய மூடுடா அதிகப்பிரசங்கி அது தேவரகசியம் சொன்னால் புரியாது. சரிங்க சாமீ இந்த ஏழைக்கு நாலு எழுத்து படிக்கத் தெரியாதவனுக்கு இதெல்லாம் எப்படி புரியும் சாமீ. மொத்தமா ஆகுற செலவைச் சொல்லுங்க சாமீ!
எழுபத்தைந்து ரூபாய் ஆகும் ஆறுமுகம் போய் இப்பவே கொண்டு வரச் சொல்லு. சரிங்க சாமீ நாளைக்கே பரிகாரத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்யுங்க சாமீ நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு ஆறுமுகம் புறப்படத் தொடங்கினான்.
டேய்! டேய்! நில்லுடா பணம் கொடுக்காமல் போறீயேடா கொடுத்துவிட்டுப் போ.
நான் ஏன் சாமி கொடுக்கணும்? தவளையைக் கொன்றவன் உங்க பையன்தான். பாவமெல்லாம் உங்க பையனுக்குத்தான் நீங்கதானே அந்த பரிகாரத்தைச் செய்யனும். ஏதோ நமக்குத் தெரிந்தவர்களாச்சே என்று விவரத்தை சொல்ல வந்தேன் சாமீ.
ஆறுமுகம் பேச்சைக்கேட்டு சாஸ்திரிகள் முகத்தில் கோபக்குறி தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டாதவராய் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். சற்று நேரத்தில் மனம் தெளிந்தவராய் ஆறுமுகத்தைக் கூப்பிட்டார். ஆறுமுகம் இங்கே வா.
இந்தப் பாவத்தை ஒரு பிராமணப் பையன்தானே செய்தான். பிராமணப் பையன் இப்படிச் செய்தால் அவனை கூப்பிட்டு டேய் தம்பி இனிமேல் இப்படி செய்யக் கூடாதேடா என்று சொல்லி ஆண்டவன் திருநாமத்தை 50 தடவை ஸ்தோத்திரம் பண்ணினால் தோஷமெல்லாம் நீங்கி பரிசுத்தமாயிடுவாண்டா மண்டூ மண்டூ என்று கூறி முடித்தார் சாஸ்திரிகள்.
ஏன் சாமீ உங்க ஜாதிக்கென்று ஒரு நீதி எங்க ஜாதிக்கென்று ஒரு நீதியா போ சாமீ என்று கூறிக்கொண்டே ஆறுமுகம் போய்க் கொண்டே இருந்தான். சாஸ்திரிகள் வெல வெலத்துப் போய் அவன் போவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
புலவர் ரா.சுரேந்திரன் எழுதிய மேடைத் துளிகள் என்ற நூலிலிருந்து…
– காஞ்சி தி.இரமணன், சென்னை -81.