வலைப்பூ சிந்தனை : மீனாட்சி அம்மன் கோவிலின் மறுமுகம்

ஜூன் 01-15


மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் 9வது வகுப்பு வரையில் நான் மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனதில்லை. பின் ஒரு கிறித்தவ வாத்தியார், “மதுரையில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலைப் பார்க்காமல் இருக்கலாமா? கண்டிப்பாக போ” என்றார். அவருக்காக ஒரு நெருங்கிய நண்பனைக் கூட்டிக்கொண்டு மீனாட்சியம்மனைப் பார்க்கச் சென்றேன். உள்ளே நடக்க நடக்க பிரம்மாண்டம் தலையின் மேல் விரிந்துகொண்டே சென்றது. ஒவ்வொரு சிற்பத்தையும் நான் நின்று பொறுமையாகப் பார்க்க நேரம் பிடித்ததால் நண்பன் ஒரு ஓரத்தில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான். அப்போதுதான் தென்பட்டன அந்த சித்திரவதைச் சிற்பங்கள்! குவென்டின் டாரன்டினோ என்ற ஹாலிவுட் இயக்குனர் கொடூர வன்முறையை எப்படி அழகியலோடு காட்சிப்படுத்துவது என்பதில் தேர்ந்தவர்.

அவரின் மூதாதையர் எவனோதான் அந்த சிற்பங்களை வடித்திருக்க வேண்டும். சமணத்துறவிகளையும், புத்தத்துறவிகளையும் அந்தகாலத்தில் எப்படியெல்லாம் சித்தரவதைப்படுத்தி, கொடும்வலிக்கு உள்ளாக்கி கொன்றிருக்கிறார்கள் இந்துமதவாதிகள் (சைவர்கள்) என ‘அழகாக’ எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன அச்சிற்பங்கள். மிக உயரமான தடித்த கூரிய ஊசிகளின் மேல் சமணர்களை அப்படியே உட்கார வைத்து ஆசனவாயில் ஊசி ஏற்றி தலைவழியாக ஊசியை வெளியே எடுத்து கொல்வது, சுண்ணாம்பை கொதிக்கவைத்து அதில் உயிருடன் போட்டுக் கொல்வது, இரு கைகளையும் ஒரு இயந்திரத்தில் கோர்த்து அப்படியே உடலை இரண்டாகப் பிய்த்தெடுப்பது போன்ற விதவிதமான கொலை-வகைகளை அழகாக(?) வடித்திருந்தார்கள்!

மீனாட்சியம்மன் என்னும் உலகை ஆளும்(?) பரம்பொருள் வீற்றிருக்கும் கோவிலில் தான் இந்த சிற்பங்கள்! முதன்முதலில் எனக்கு மதத்தின் மீதும் கடவுள் என்ற கருத்தியல் உருவாக்கத்தின் மீதும் மிகப்பெரும் வெறுப்பும், அருவெறுப்பும் வந்தது அப்போதுதான். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படுவதால் தான் இப்படியான கொடூரங்களைக் கூட கண்டுகொள்ளாமல் போயிருக்கிறார்கள், போகிறார்கள். நியாயப்படுத்த கூட சிலர் தயாராய் இருக்கிறார்கள், குஜராத் கலவரங்களை நியாயப்படுத்தும் கூட்டத்தைப் போல! இந்த சிற்பங்கள் எங்கோ ஒரு குகையில் காணப்படவில்லை.

அன்பே உருவமாக, உலகத்தை ரட்சிக்கும் அருள்மிகு மீனாட்சியம்மனின் ‘வீட்டில்’ இருப்பதுதான் வியப்பிலும் வியப்பு! மீனாட்சியம்மனே இப்படி இருக்கும்போது சாதாரண மனிதர்களான நம் அம்மாக்கள் நம் வீட்டில் ரத்தக்களறியாக ஒரு திரைப்படம் பார்ப்பதைக் கூட எதிர்க்கிறார்கள்!! என்ன மாதிரியான முரண் பாருங்கள்!!

அடுத்து இலவசமாக அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டும். காசு இருந்தால் 100, 500ரூபாய் என சீட்டுக்கள் வாங்கி சுலபமாக பார்த்துவிடலாம். முதல்நாள் முதல் காட்சியில் காசு அதிகம் கொடுத்து நாம் பார்க்கும் ரஜினி படங்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தன. ஒரு திரைப்படத்திற்கும் எல்லாருக்கும் பொதுவான கடவுளான அம்மனுக்கும் வித்தியாசம் இல்லையா? காசு கொடுத்தால் கடவுளை சீக்கிரம் பார்க்கலாம் என்றால் என்ன மாதிரியான கடவுள் இது, என்ன மாதிரியான பக்தி இது? இதைத்தான் இக்கியூ என்ற ஜப்பானிய கவிஞர் 1400லேயே “அர்ச்சகர்கள் கடவுளை பணக்காரர்களுக்கு கூட்டிக் கொடுப்பவர்கள்” என எழுதினார்.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் எத்தனையோ பேர் போகிறார்கள், அம்மனை கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் நம் குலதெய்வங்களான, முதாதையர்களான முனியாண்டி, கருப்பசாமி, மதுரைவீரன் ஆகியவர்களை வணங்குகிறார்கள். அவர்களின் பூசாரிகளாக பிராமணரல்லாதோர் இருக்கிறார்கள்! மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே எத்தனையோ பிற கடவுள்கள் இருக்கும்போது, ஏன் நம் மூதாதையர்களான இந்த கடவுள்களுக்கு கோவிலின் உள்ளே இடமில்லை? நம்மிடம் அஞ்சு பத்து என அர்ச்சனைத் தட்டில் வாங்கிக்கொள்பவர்கள் ஏன் நம் குலதெய்வங்களுக்கு பூசாரிகளாக இருப்பதில்லை? நம் ஆட்கள் ஏன் மீனாட்சியம்மன் இருக்கும் கர்ப்பக்கிரகத்துக்குள் போக அனுமதியில்லை? எதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார்கள்? அனைவரும் அர்ச்சகர் ஆனால் என்ன ஆபத்து நேரப்போகிறது? நம் மக்களிடையே வாழ்ந்து, மக்களைக் காத்து செத்தவர்களை சிறுதெய்வங்கள் எனவும், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்களை பெருதெய்வங்கள் எனவும் ஏன் பகுத்து வைத்திருக்கிறார்கள்? சமணர்களையும் மீனாட்சியம்மன் தானே படைத்திருக்கவேண்டும், அவளின் பேராலேயே அவர்களைக் கொன்று, அவள் இருப்பிடத்திலேயே சிலையாகவும் வடித்திருக்கிறார்களே ஏன்? இதுபோல் ஏராளமான கேள்விகள் உண்டு! நீங்கள் ஆத்திகர்களாக இருங்கள். சாமி கும்பிடுங்கள்.

மத நம்பிக்கையோடே இருங்கள். ஆனால் அடுத்தமுறை கோவிலுக்கு செல்லும்போது நேராக மூலக்கடவுளை கும்பிட்டுவிட்டு வராமல், சுற்றி இருப்பவற்றை கவனியுங்கள். சிந்தியுங்கள். கோவிலுக்கு செல்லும்போது கடவுளிடம் வேண்டுவதைத்தவிர நீங்கள் எதையுமே சிந்திப்பதில்லையென்றால் நீங்கள் கண்களை மூடியிருக்கிறீர்கள் என அர்த்தம். கண்களைத் திறங்கள். கடவுளைத்தாண்டி, மதத்தைத் தாண்டி கேள்வி கேளுங்கள்! சாமி கும்பிடுவதைவிட கேள்வி கேட்பது மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானது! கேள்வி கேளுங்கள்!

– டான் அசோக்
வானம் எனக்கொரு போதி மரம்…
வலைப்பூவிலிருந்து

www.donashok.blogspot.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *