அசுரர்களை அழிக்கவே அவதாரங்கள்
– கி.வீரமணி
தந்தை பெரியார் அவர்கள் கடவுள் அவதாரக் கதைகள்பற்றிக் கூறுகையில்,
அவதாரக் கதையில் சொல்லப்படும் அவதாரங்களில் மீன் (மச்ச) அவதாரத்தைப் பார்ப்போம். ஒரு அரசன் வேதத்தைத் திருடிக் கொண்டு போய்க் கடலில் ஒளித்து வைத்துவிட்டானாம். அதை மீட்பதற்காகக் கடவுள் மச்ச அவதாரம் எடுத்துப் போய் மீட்டு வந்தார் என்பது கதை. இதை எங்காவது நம்ப முடியுமா? முதலில் வேதத்தை எவனும் திருட முடியாது. காரணம் அது ஒலி வடிவில் உள்ளது ஆகும். அப்படியே போனலும் இன்னொரு தடவை வேதத்தை ஓதி எழுதிக் கொண்டிருக்கலாமே!
என்ன நடந்திருக்கும் என்றால், அந்த அரசன், எவனும் தன் நாட்டில் வேதம் ஓதக் கூடாது என்று கூறியிருப்பான். அதனால் பார்ப்பனர்கள் அவனை ஒழித்து விட்டார்கள்.
புத்தர் காலத்தில் வேதத்திற்கும், சாஸ்திரத்திற்கும், பார்ப்பானுக்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது.
இவர்கள் மீண்டும் எப்படித் திரும்பினார்கள் என்பதுதான் படிப்படியாகப் பத்து அவதாரக் கதைகளாக வந்துள்ளன. பத்து அவதாரக் கடவுள்களும் ராட்சதர்களைக் கொன்று குவித்தவைதான்!
அதுமட்டுமா?
சமுதாய சம்பந்தமான, மதச் சம்பந்தமான ஆதாரங்களை, புராணங்களை எடுத்துப் பார்த்தால், தசாவதாரம் என்கிறவைகளில் உள்ள அவதாரங்கள் என்பவைகள் யாவும் சமுதாய சம்பந்தமான திருத்தப்பாட்டிற்குத் தொண்டு செய்தவனைக் கொலை செய்ததை விளக்குவதற்காகவே எழுதப்பட்ட கதைகள் ஆகும் என்கிறார்.
இதற்கு பாகவதம் துவக்கமே சரியான ஆதாரம் ஆகும்!
ஸ்ரீவேத வியாசர் அருளிச் செய்த ஸ்ரீமஹா பாகவதம் (சித்திரப் படங்களுடன்) திருவனந்தபுரம் பாகவத சிரேஷ்டரான வேணுகோபாலாசார்யர் அவர்களால் ஸம்ஸ்க்ருத காவ்யத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. வெளியிட்டவர் பி. இரத்தின நாயகர் ஸன்ஸ் திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1955.
முதலாவது அத்தியாயம் இப்படித் துவங்குகிறது.
(பூமி தேவி பசுரூபியாய் பிரம்மாவைச் சரணடைந்து, அவர் திருப்பாற்கடலிற்கு தேவர்களுடன் சென்று பகவானை சரணமடைதலும், அப்போது அஸரீரி வாக்குண்டானதைப் பற்றியும் சொல்லப்படுகின்றன).
ஸ்ரீ கோவிந்தனது பாதங்களில் மனதை நிறுத்திய செல்வனே கேட்பாயாக! பொறுமையிற் சிறந்த பூமிதேவியானவள், மஹா கர்வத்தையடைந்து அரசர்களென்று பெயர் பெற்ற கொடிய அசுரர்களினது அநேககோடி சேனா சமுத்திரங்களின் செய்கைகளினால் உண்டாகின்ற பாபமாகிற பாரத்தினால் வருந்தப் பட்டவளாகி, கோ ரூபத்தைத் தரித்து, மிகுந்த துக்கத்தை யடைந்து, சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமாவைச் சரணமடைந்து, கண்களில் ஜலத்தைப் பெருக்கி தனது வியாகூலத்தை முறையிட்டனள். அம்முறையைக் கேட்ட பிரமதேவர் உருத்திர பகவான் முதலியவெல்லா தேவர்களுடன் அந்நிலமகளை யழைத்துக்கொண்டு க்ஷீராப்தி தீரத்தைச் சேர்ந்து, அவ்விடத்தில் சர்வ நியந்தாவாயும், பரிபூரணராயும், ஜகந்நாதராயு மிருக்கின்ற ஸ்ரீ வாசுதேவரை புருஷசூக்த மந்திரங்களால் ஒரே மனதாக யாவரோடுந் துதி செய்தார்கள். அப்பொழுது அவ்விடத்தில் உண்டான அசரீரி வாசகத்தைப் பிரமா கேட்டு, தேவர்களைப் பார்த்து, நீங்கள் யாவரும் ஸ்ரீ பகவ தாக்கினையின்படி விரைந்து செய்யக்கடவீர்கள். அஃதென்னவெனில், முன்னமே ஸ்ரீ பகவான் பூமிதேவியினது விசனங்களை யறிந்து, தமது வியாபகத்வமாகிற காலரூப திவ்விய சக்தியைக் கொண்டு, பூமிபார நிவர்த்தியின் பொருட்டு, இப் பிரபஞ்சத்தில் வசுதேவர் கிருகத்தில் அவதாரஞ் செய்யச் சங்கற்பித்திருக்கின்றார். ஆகையினால் நீங்கள் யதுவம்சத்தில் ஜனிக்கக் கடவீர்கள். ஸ்ரீ வாசு தேவாம்சத்தி லுண்டான அனந்தர் அந்த ஸ்ரீமந் நாராயணனுக்கு முன்னே அவதரிக்கப் போகின்றார். சர்வ ஜகத்தையு மோகிக்கச் செய்கிற பகவன் மாயையானது ஸ்ரீ ஹரியின் திவ்வியாக்கினையால் காரியார்த்தமாக ஸ்ரீ யசோதா பிராட்டியினிடத்தில் அவதரிக்கப் போகின்றது என்று கட்டளையிட்டு, பின்பு அந்தப் பூதேவியை நோக்கி,
பசுமையான துழாய் மாலையை அழகுபெறத் தரித்த முதற் கடவுள் உன்னை வந்து காப்பாற்றுவான். நீ வருந்துதல் வேண்டாம் என்றுரைத்து, கடலை உடையாய்த் தரித்த நிலமகளை விட்டு, இதழ்களால் நிரம்பப் பெற்ற தாமரை மலரி லுதித்த பிரமதேவன் தனது பெருமையில் சிறந்த சத்திய லோகத்தை யடைந்தான்.
இதன்படி அசுரர்களான (திராவிடர்களை) அழிக்கவே கடவுள் அவதாரங்கள் உருவாக்கப்பட்டன என்ற தந்தை பெரியார் கருத்து நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா?
(தொடரும்)