– அம்பேத்கர் விளக்குகிறார்
11ஆம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் முதலாம் பாடம் 18ஆம் பக்கத்தில் அம்பேத்கர் நத்தையில் அமர்ந்து நத்தை வேகத்தில் சட்டம் எழுதியதாகவும், பார்ப்பன நேரு கையில் சாட்டை கொண்டு அடித்து விரைவுப்படுத்தியதாகவும் சித்தரிக்கும் ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளது.
(http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10) இந்த பாடபுத்தகம் 2006-லேயே வெளியிடப்பட்டிருந் தாலும், இது தொடர்பாக தற்போதுதான் எதிர்ப்பு கிளம்பியது. பார்ப்பன அதிகார வர்க்கம் எத்தனை நுட்பமாக இயங்குகிறது என்பதும், நம் ஊடகவியலாளர்கள் எத்தனை மெத்தனமாக இருக்கிறார்கள் என்பதும் தெளிவு பெறும். 11.-05.-2012 அன்றுதான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அந்த புத்தகத்தை தடை செய்யும் நிலை வந்திருக்கிறது. அம்பேத்கர் நத்தை வேகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை தொகுக்கும் பணியில் ஈடுபட்டாரா? நேரு சாட்டையெடுத்து சுழற்றுவதுபோல் விரைவுபடுத்தினாரா? இந்த கேலிச்சித்திரம் தவிர மட்டமான இந்துத்துவ பொதுப்புத்தியில் அவர் காங்கிரசுக்கு அடிபணிந்தார் என்பவர்களும் உண்டு. அரசியல் சட்டம் இயற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். படியுங்கள்.
ஏன் இந்த தாமதம்?
வரைவுக் குழுவைப் பொறுத்த வரை, அது அரசியல் நிர்ணய சபையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில் அது தன் முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30 ஆம் நாளிலிருந்து 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்த சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக, அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் 243 விதிகளையும் 13 அட்டவணை களையும் கொண்டிருந்தது. வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது அரசியல் சாசன வரைவில், 315 விதிகளும் 8 அட்டவணை களும் இருந்தன. பரிசீலனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. அதன் இறுதி வடிவத்தில் அரசியல் சாசன வரைவு, 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல் சாசன வரைவுக்கு முன் வைக்கப்பட்டன. இவற்றில் எதார்த்தத்தில் சபையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475 ஆகும்.
இந்தத் தகவல்களையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு கட்டத்தில், இந்தப் பணியை முடிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்று கூறப்பட்டது. அது, பொதுமக்கள் பணத்தை விரயம் செய்து ஆமை வேகத்தில் பணியாற்றுவதாகக் குறை கூறப்பட்டது. ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் பிடில் இசைத்ததைப் போன்றுள்ளது’ என்று பழி சுமத்தப் பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் உள்ளதா?
அரசியல் சாசனங் களை உருவாக்க மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய சபைகள் எடுத்துக் கொண்ட நேரத்தை நாம் பார்க்க லாம். சில எடுத்துக் காட்டுகள்: 1787 மே மாதம் 25 அன்று கூடிய அமெரிக்க கன்வென்ஷன், தன் பணியை 1787 செப்டம்பர் 17இல் அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசியல் சாசன அமைப்பு கன்வென்ஷன், 1864 அக்டோபர் 10 இல் கூடியது; 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும் அய்ந்து மாதங்களும் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனத் தயாரிப்பு அவை, 1891 மார்ச்சில் கூடியது; 1900 சூலை 9 இல் அரசியல் சாசனத்தை உருவாக்கியது. 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908 அக்டோபரில் கூடியது; 1909 செப்டம்பர் 20 இல் அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டுக்கால உழைப்பு தேவைப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம் அதிக காலம் எடுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை; ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக் குறைவாகவே நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் கால அளவை ஒப்பிடும் போது, இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான் ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில் 1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.
இரண்டாவது விஷயம் என்னவென்றால் – அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய சபை 2,473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மைகளை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு கடினமான பணியை, இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக, அரசியல் நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்… (25.11.1949ல் நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
உடலைத் தின்ற உழைப்பு
மூன்று ஆண்டுகள் கடின உழைப்பில் தொகுத்த அரசியல் சாசனம் எப்படியெல்லாம் அவரது உடல்நலத்தை தின்றுவிட்டிருந்தது என்பதை, அம்பேத்கரின் வரலாற்றை எழுதிய தன்ஞ்செய் கீர் குறிப்பிடுகிறார் கவனியுங்கள்..
அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி முடிவடைந்ததும் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்கிற அளவுக்கு அம்பேத்கரின் உடல்நலம் குன்றி இருந்தது. எனவே மருத்துவம் செய்து கொள்வதற்காக அம்பேத்கர் பம்பாய்க்கு வந்தார். 1947 ஆகஸ்ட் முதலே அம்பேத்கர் அவருடைய உடல்நலம் பற்றி கவலைப்பட தொடங்கினார். அவருடைய உடல்நிலை சீர்கெட்டு வருவதாக அவரே கூறினார். 1947 ஆகஸ்ட் மாதத்தில் அவர் எழுதிய கடிதம் ஒன்றில், கடந்த பதினைந்து நாட்களாக கண்ணிமைக்கும் நேரங்கூட நான் தூங்கவில்லை. என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இரவுகள் அவருக்கு அச்சமூட்டுவனவாயின.
நாள்தோறும் நரம்புவலி நள்ளிரவில் தொடங்கி விடியும் வரை நீடித்தது. அப்போது அவர் இன்சுலின் மருந்தையும், ஓமியோபதி மருந்தையும் பயன்படுத்தினார்; அவற்றில் எதுவுமே பயன்தரவில்லை. குணப்படுத்த முடியாத ஒரு நோயைத் தாங்கிக் கொள்ள பழகிட வேண்டியதுதான். என்று அம்பேத்கர் கூறினார். (பக்கம்:598, 599)
அண்ணல் அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுதிவிடமுடியாது. அவரது ஒவ்வொரு உழைப்பும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கே பயன்பட்டுள்ளது.இந்தியா முழுதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்து நிற்கிற அம்பேத்கரை இழிவு செய்யும் கேலிச்சித்திரத்தை பாடப்புத்தகத்தில் வெளியிட்டு மகிழ்வது கல்வியைக் காவி மயமாகத்துடிக்கும் இந்துத்துவத்தின் கோரமுகமே யாகும். அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின் அவரைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில்தான் தேசிய அரசியல் கட்சிகள் அம்பேத்கர் படத்தைப் போடுகின்றன.ஆனால்,பிறவி பேதம் கற்பிக்கும் இந்து மதத்தை விட்டு வெளியேறிய அம்பேத்கர் மீதான வன்மத்தை ஏதாவது ஒரு வகையில் அரசு நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவாக்கள் வெளிக்காட்டியபடியே இருக்கின்றனர்.அதன் ஒரு பணிதான் அம்பேத்கர் மீதான இந்தக் களங்கம் கற்பிக்கும் முயற்சி என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணரவேண்டும்.
– நன்மொழி-