சதத் ஹசன் மண்டோ

ஜூன் 01-15


என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது என்றார் சதத் ஹசன் மண்ட்டோ. 1912-ஆம் ஆண்டு மே 11-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம், பப்ரோடி கிராமத்தில் இஸ்லாமியத் தம்பதியருக்குப் பிறந்த இந்த உருது எழுத்தாளருக்கு இது நூற்றாண்டு.

இதழாளராக, வானொலி கதாசிரியராக, திரைப்பட திரைக்கதையாசிரியராக எழுத்தின் பல பரிமாணங்களைக் கண்ட மண்ட்டோ சிறந்த சிறுகதை எழுத்தாளர். கடந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் என்று உலக அளவில் ஒரு பட்டியல் போட்டால்  முதல் 10 இடங்களுக்குள் மண்ட்டோவின் கதை ஒன்று உண்டு. நாவல், கட்டுரை, சிறுகதை, குறுங்கதைகள், கடிதங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றாவற்றைப் படைத்திருக்கும் மண்ட்டோவின் படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. 1947-ஆம் ஆண்டு  இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மதம் ஆடிய கோரத்தாண்டவத்தினை மிகச் சரியாக எம்மதச் சார்புமின்றி படம்பிடித்தவர் மண்ட்டோ. சில்லிட்ட சதைப் பண்டம், திற, கருப்பு சல்வார் போன்ற அவரது சிறுகதைகள் என்றும் அவர் எழுத்துத் திறத்தை எடுத்துச் சொல்லும். இவரது படைப்புகள் தடைசெய்யப்பட்டு, வழக்குத் தொடுக்கப்பட்டு சிக்கல்களுக்குள்ளாக்கப் பட்டிருப்பினும் அவற்றை மீறி வெற்றி கண்டவர். 1955-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் மறைந்த சதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகள் நூலிலிருந்து அவரது சொற்சித்திரங்கள் இங்கே… (மொழியாக்கம்: ராமானுஜம், வெளியீடு: நிழல், புலம்)

 

சதத் ஹசன் மண்டோ

குறுங்கதைகள்

ஜவ்வு மிட்டாய்

காலை ஆறு மணிக்கு, பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் தள்ளு வண்டியில் ஐஸ் விற்றுக்கொண்டிருப்பவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். அவனின் உடல் ஏழுமணிவரை தெருவில் கிடந்தது. அய்ஸ் கட்டிகளில் இருந்து உருகிய தண்ணீர் அவன் மீது சொட்டிக்கொண்டே இருந்தது.

ஏழேகால் மணிக்கு போலீஸ் அந்தப் பிணத்தைத் தூக்கிச் சென்றது. உருகிக் கொண்டிருந்த அய்ஸும், இரத்தமும் மட்டும் தெருவில் கிடந்தன.

அவ்வழியே ஒரு டோங்கா வந்தது. ஒரு குழந்தை, அங்கே உறைந்து போய் பளபளத்துக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்தது. அந்தக் குழந்தையின் வாயிலில் எச்சில் ஊறியது. அம்மாவின் ரவிக்கையை பிடித்து இழுத்து, அம்மா அங்க பார் ஜவ்வு மிட்டாய் என்றது.

*******

தன்னடக்கம்

ஓடிக்கொண்டிருந்த ரயிலைக் கட்டாயப்படுத்தி நிறுத்தினார்கள். நிறுத்தியவர்கள் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் திட்டமிட்ட முறையில் பொறுக்கி எடுத்து வாளாலும், துப்பாக்கியாலும் படுகொலை செய்தார்கள். மற்றப் பயணிகள் எல்லோருக்கும் பாலும், அல்வாவும், பழங்களும் வழங்கினார்கள்.

இரயில் வண்டி புறப்படுவதற்கு முன், இந்த விருந்தோம்பலுக்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் தலைவன், பிரயாணிகள் முன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினான்; அன்புள்ள சகோதர சகோதரிகளே, இந்த ரயில் வருவது பற்றிய தகவல் எங்களுக்குத் தாமதமாகத்தான் கிடைத்தது- அதனால்தான், உங்களை இன்னும் சிறப்பாக உபசரிக்க முடியாமல் போனது.

*******

சோசலிசம்

அவனுக்குச் சொந்தமான எல்லா பொருட்களையும் ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்க்கொண்டிருந்த போது, ஒரு கூட்டத்தினரால் வழிமறிக்கப்பட்டான். பேராசை பிடித்த கண்களோடு அந்த வண்டியில் இருந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் இன்னொருவனிடம், அவனைப் பார். இவ்வளவையும் திருடிவிட்டு யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறான் என்றான்.

அந்தச் சொந்தக்காரன் பெருமையாகச் சிரித்து, அய்யா, இது எல்லாம் என்னுடைய தனிச் சொத்து என்றான்.
சிலர் உரக்கச் சிரித்தார்கள். எங்களுக்குத் தெரியும்… தெரியும்…

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் உரத்த குரலில், உங்களால் முடிந்ததை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். அவனைத் தப்பித்துப் போக விடாதீர்கள். அவன் ஏழைகளை ஏமாற்றி வண்டியில் சொத்தைச் சேர்ந்து வைத்திருக்கும் பணக்காரன் என்று சொன்னான்.

 

*******

பிழை

வயிற்றை மிகச் சுத்தமாகக் கிழித்துக்கொண்டு அந்தக் கத்தி சரியான நேர்க்கோட்டில் அவனின் தொப்புளுக்குக் கீழ் இறங்கியது.

அதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டது. கத்தயைப் பிடித்திருந்தவனிடமிருந்து, அந்த வார்த்தைகள் வருத்தத்தோடு வெளியேறியது: ச்சே… ச்சே… நான் தவறு செய்துவிட்டேன்.

*******

பிழை சரிசெய்யப்பட்டது

யார் நீ?

நீ யாரு?

ஹர் ஹர் மகாதேவ், ஹர் ஹர் மகாதேவ்,

ஹர் ஹர் மகாதேவ்

என்ன அத்தாட்சி இருக்கிறது?

அத்தாட்சி? என்னுடைய பெயர் தரம்சந்த்

இது அத்தாட்சியே இல்லை

சரி, வேதங்களிலிருந்து எதை வேண்டுமானாலும் கேட்கலாம்

எங்களுக்கு வேதங்கள் தெரியாது. எங்களுக்கு தேவை அத்தாட்சி

என்ன அத்தாட்சி வேண்டும்?

உன் பைஜாமா நாடாவை அவிழ்த்து விடு

அவன் தன் பைஜாமாவை இறக்கியவுடன், அங்கு பெரும் குழப்பம் உண்டாயிற்று. அவனைக் கொல்லு,

அவனைக் கொல்லு

கொஞ்சம் பொறுங்கள், தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள்… நான் உங்களில் ஒருவன். உங்களின் சகோதரன்… பகவான் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் உங்களின் சகோதரன்.

அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்?

நான வந்துக்கொண்டிருந்த பகுதி நம்முடைய விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், வேறு வழியில்லாமல் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று… வேறு எதற்குமில்லை. என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள… இது ஒன்றுதான் நான் செய்த தவறு. மற்றது எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது.

அந்தப் பிழையை வெட்டியெறிங்கள்.

அந்தப் பிழை வெட்டி யெறியப்பட்டது. அதுபோலவே தரம்சந்தும்.

கடவுள் உயர்ந்தவன்

அந்த இரவு ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வர அந்த தாசியின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிச் செல்லத் தொடங்கினார்கள்.

அந்த இளம் தாசியின் பாட்டு வாத்தியார் சந்தோஷத்தால் பூரித்துப் போய், நம்மிடமிருந்தது எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு, கையில் காசு இல்லாமல் இங்கு வந்து சேர்ந்தோம். ஆனால், கருணை உள்ளம் படைத்த இறைவன், சில நாட்களில் நம்முடைய செல்வத்தை நம்மிடம் திருப்பிக் கொடுக்க வைத்தான் என்றார்.

– மண்டோ படைப்புகள் என்ற நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *