புதுப்பாக்கள்

ஜூன் 01-15

குறைந்தபட்ச விதி

எந்த தேசத்தை வேண்டுமானாலும்
அமைதியான பூமியென்று அழைக்கலாம்.
முதலில் அங்கே நடந்த கலவரங்களையும்
மனிதஉரிமை போராட்டங்களையும்
மறைக்க வேண்டும்.

தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள்
யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது.
பட்டினிச் சாவுகளின் ஓலங்கள்
பஜனை பாடல்களில் கலந்துவிடாமலிருக்குமாறு
உத்திரவிட வேண்டும்.
எந்த நாட்டையாவது
மனித உரிமைகளை மதிக்கும் நாடென
சொல்ல வேண்டுமென விரும்புகிறீர்களா
முதலில் சிறையிலிருக்கும்
மனித உரிமை போராளிகளை
கண்காணாத இடத்திற்கு
கடத்திவிட வேண்டும்.
துப்பாக்கி சூடுநடத்தி ரத்தம் சிந்தப்பட்ட
நாட்களை வரலாற்றிலிருந்து
கழற்றிவிட வேண்டும்.
நேர்மைக்காக போராடிய அதிகாரிகளை
கொன்றுகுவித்த ரவுடிகளின் புகைப்படங்களை
மக்களின் கண்களில் படாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதிகாரத்தை கேள்வி கேட்டவர்கள்
காணாமல் போன பட்டியலை
மறைத்துவிட வேண்டும்.
சிறைகளில் சித்ரவதை தாங்காமல்
இறந்துபோன கைதிகளின்
சடலத்தை யார் கண்ணிலும் காட்டாமல்
எரித்துவிட வேண்டும்.
நாட்டில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?
நடந்துமுடிந்த ஜாதி மோதல்களை
அழித்துவிட வேண்டும்.
காவல்துறைக்கும் குற்றவாளிகளுக்கிடையேயான
உறவின் மீது ஆசிட் ஊற்றி
அழித்துவிட வேண்டும்.
எல்லா அத்துமீறல்களையும்
பழைய சோப்புகளின் நடுவே
மறைத்துவிட வேண்டும்.
ஒரு பொய் பேசும்பொழுது
அங்கிருக்கும் உண்மைகளை
முதலில் அப்புறப்படுத்த வேண்டுமென்பது
குறைந்தபட்ச விதியென்று புரிந்துகொள்ளுங்கள்.

– கோசின்ரா

எத்தனை தெய்வமடா?

உனக்கொரு தெய்வம்;
எனக்கொரு தெய்வம்;
ஊரார்க் கெத்தனை தெய்வமடா;
உலகோர்க் கெத்தனை கதைகளடா!

கோயில் வாயிலில் காவல்தெய்வம்!
கோபுரம் எங்ஙணும் காமதெய்வம்
காவல் அறையினில் மூலதெய்வம்
மூலத்தில் உறைவதோ காதல் தெய்வம்!

குளியாத் தெய்வம் குளிப்பதற்கே
பழத்தொடும் சந்தன பால்குடமோ?
நிருவாண தெய்வம் அணிவதற்கே
நல்லாடை அளிப்பதும் மேலிடமோ?

ஊரினைக் காக்கும் தெய்வத்திறகும்
உதவுவார் காவல் துறையினரோ?
தேரினை இழுக்குங் கைகளுக்கும்
தெம்பினைத் தருவார் உறவினரோ?

கருவறை தன்னிலும், பிழுக்கைநாறும்
அருமறை இடங்கள் யாவற்றினும்
திருமுறை கொள்ளா ஆரியத்தின்
திருவிளை யாடலை உணர்கிலரோ?

சிந்தையே குழம்பி வாக்கிழந்தும்
செய்வ தறியாது போக்கிழந்தும்
சிதைவோர் குழுமும் கோயிலெலாம்
சிவப்பு விளக்குகள் ஆயினவோ?

– கவிஞர் கோ.கலைவேந்தர், குத்தாலம்

கல்

மண் தோன்று முன்
தோன்றிய கல்
படிமங்களின்
மூலப்பொருள்.
காவல்-அரண்-கல்.
சிரம் ஏறும்
கோகினூர் கல்
தாவீது கைப்பட்ட
ஆரம்ப ஆயுதம் கல்
எல்லார் கையிலும்
கூடாது என்றே
கட்டிப்போடப்பட்டது கல்
அசையாத கற்களே
வியக்கப்படும் மலைகள்
தோள்மீது பனிச்சுமை
பெருமித நீர்க்கடன்
குகை வீடுகள்
சீசேம் வாயில்கள்
கனக விசயருக்குக் கல் மருத்துவம்
நாகாக்கக் கல் – எனும்
கல் எறிக எனும் ஒரு கூட்டம்
எறியாதீர் தூயோர் அல்லார்
எனும் ஓர் கூட்டம்
கைக்குத் தக்கவாறு
கல் பயன்படும்
தொடர்கிறது இன்னும் கற்காலம்.
அவர்கள் கல் மனம்
உறுதியின் இலக்கணம்
கல்லுக்குள் பெண் இடல்
அக்பர் வீரம்.
பெண்னுள் கல் இடல்
வீரர் சீலம்.
அதிகாரக் கொள்கை
அனுமதி பல்வகை
அரசியல் சட்டம் ஏராளம் பக்கம்
நுதலியது யாதோ?
அறிஞரே அறிவர்.
காந்தி நாட்டில்
கல்லுக்குச் சிறப்பிடம்
கல்லார்க்குக்
களிப்புதரும்
பதக்கம்.

– நீலமணி

விதிகளை விரட்டுவோம்
என் விதி
என் தலையெழுத்து
இவை வராத
வாய்களில்லை.
பொன்னுக்குச் சமமான
பொருளிதுவோ?
வேலை தேடும் நேரத்தில்
வியாபாரச் சிந்தனையில்
பொறியைத் தட்டியது.
வாங்கி விற்கலாமென
தெருவில் இறங்கி கூவுகிறேன்.
பைத்தியமாய் தெரிகிறேன்
மற்றவர்களுக்கு.
வாங்க ஆளுமில்லை
விற்க எவருமில்லை
விளக்கமும் சொல்லவில்லை.
குப்பைகளைக் கட்டிக்கொண்டு
இதயத்தை அழுத்திக் கொண்டும்
பாரஞ்சுமக்கிறவர்கள்
தூக்கியெறியத் தயாரில்லை.
தேவையில்லாததைத்
தூக்கியெறியத் தயாரில்லை.
எதற்குத் தான் இதற்கு
வலிமையூட்டினார்களோ?
பாரத்தை உருவாக்கிக் கொண்டு
காலத்தைப் பாழாக்க
பழமையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கம்ப்யூட்டர் காலத்தில்
கம்ப்யூட்டருக்கும் விதித்திருக்கிறார்கள்
விதியை.

– வேதாரணியம் வாசுபாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *