இரண்டாயிரம் வருடத் தமிழ் அறிவின் சாரமான திருக்குறளை, அதன் கவித்துவத்தைக் கெடுத்து, அதன் அறவியல் நோக்கத்தை உதறிவிட்டு, வெறுமனே மனப்பாடப் பொருளாக நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். தமிழ் இலக்கிய ரசனை இந்த அளவில்தான் இருக்கிறது.
– கவிஞர் மனுஷ்யபுத்திரன்
கடின உழைப்பும் இலட்சியத்தில் உறுதியும் இருந்தால் யாருக்கும் வெற்றி எளிதுதான். அறிவியல் துறையில் ஆண்_பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கே திறமைக்குத்தான் மதிப்பு. எனக்களிக்கப்பட்ட பொறுப்புவாய்ந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டேன்.
– விஞ்ஞானி வளர்மதி, ரிசாட் 1 – செயற்கைக்கோள் திட்ட இயக்குநர்
நான் ஒரு மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமானவன் அல்ல. இந்தியா என்பது பல மாநிலங்கள் அடங்கிய ஒரு நாடு. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த நான், ஒரு மாநிலத்துக்காக மட்டும் பிரதிநிதியாக செயல்பட முடியாது – கேரளாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்
கொலம்பியா காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே.வின் விழிகளில், சிறுநீருக்கு பைப் வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில், வாட்டர் பாட்டில் கம்பெனிக்கு வயலை விற்க மாட்டேன் எனத் தனி ஆளாக மல்லுக்கு நின்ற வேலுச்சாமியின் வைராக்கியத்தில், தன்னைப் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் போராடி தண்டனை வாங்கித் தந்த ரோசினியின் உறுதியில் இருப்பதற்கு எல்லாம் பெயர் என்ன? அற்பத்துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம்? அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்த தேசத்தில். – பத்திரிகையாளர், எழுத்தாளர் ராஜூ முருகன்
தொழில்நுட்ப சட்டம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இணையதளங் களைக் கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.
– மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜீவி
கணவன் என்பவன், உயரத்தில் இருப்பவன், அவன் வழிபடப்பட வேண்டியவன் என்ற நினைப்பை நாம் எப்போது மாற்றிக்கொள்ளப் போகிறோம். திருமண பந்தம் என்பது ஒரு துணை, ஒரு உறவுப் பாலம் என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்? கனவர்களை பெண்களின் பாதுகாவலர்களாகவும், திருமணம் பெண்களுக்கான சரணாலயம் என்றும் நாம் இன்னும் ஏன் பார்க்கவேண்டும்? நாம் இதைக் கடந்து செல்ல வேண்டும். இரண்டு பேர் ஒன்றாக இருக்க விரும்புவதால், அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற பார்வைக்கு நாம் வரவேண்டும். ஒன்றாக வாழலாம் என்று முடிவெடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இருவர், அந்த உறவு தொடருவதி சிரமம் உள்ளது என்று உணரும்போது, அந்த உறவை முறித்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது.
– மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்,கவிஞர் கனிமொழி