நம்மளோட அறியாமைக்கு என்னென்னமோ கணக்குப் போட்டுக்கிறோம்
– திரைப்பட இயக்குநர் பாலு மலர்வண்ணன்
பேய் பிசாசு கற்பனைகளைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் சினிமா உலகில், பேய் பிசாசு இல்லை என்று தைரியமாகச் சொன்னதோடு கடவுள் மறுப்புக் கொள்கையை யும் தூக்கி பிடித்திருக்கிறது சமீபத்தில் வந்த ஒத்த வீடு என்கிற திரைப்படம்.
மகளை சாமி அடித்துவிட்டதாக நினைத்து கோவில் கோவிலாக அழைத்துச் சென்று அவளை காப்பாற்ற நினைக்கும் ஒரு அபலைத் தாயின் கதை. பிறகு உண்மை தெரிந்த பிறகு கொதித்துப் போகிறாள். தன் அறியாமையினாலேயே தனது மகளைக் கொன்று விட்டதாக நினைத்து பதறுகிறாள். நல்லா படித்திருந்தால் ஒழுங்கா வைத்திருப்பேனே என்று புலம்புகிறாள். அப்படிப்பட்ட தாயின் மனநிலையோடு படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலு மலர்வண்ணன்.
“சாமி எப்படிப்பா மனுஷனை அடிக்கும்… நம்மளோட அறியாமைக்கு சாமி மேல பழிய போட்டு எஸ்கேப் ஆகக் கூடாது…” என்று இவர் எழுதிய வசனங்கள் அத்தனையும் இயல்பும், அழுத்தமும் கொண்டவை. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள பாலு மலர்வண்ணனை உண்மைக்காகச் சந்தித்தோம். தங்களின் பின்னணி பற்றி கூறுங்கள்?
எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி, நாடகங்களை பார்த்து; பின் அதே மாதிரி நாடகங்களை நடத்திப் பார்ப்பேன். பத்தாவது படிக்கிற போது சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்தது, அதன் பிறகு சினிமா மீது ஆர்வம் கொண்டேன். நான் பார்த்த சம்பவங்களை, வாழ்க்கை முறைகளை சினிமாவில் படமாக்க வேண்டும் என்று ஆசை. அதனால் சினிமா உலகிற்கு வந்தேன். சரியான வாய்ப்புகள் அமையாததால் உதவி இயக்குநராக சேர முடியவில்லை, அதனால் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் டம் உதவியாளராக சேர்ந்தேன். பிறகு பல படங்களில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன். அந்த அனுபவம் என்னை தற்போது படமாக்க வைத்தது.
பேய் மூடநம்பிக்கை குறித்து இப்படத்தில் கதை அமைத்தது ஏன்?
கற்பனையைவிட உண்மைக்கு வலிமை அதிகம் என்பார்கள். அதனால் நான் கேள்விப்பட்ட விஷயங்களை கதையாக உருவாக்கினேன். சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியம் என்றாலும், அதில் நல்ல விஷயத்தை சொன்னால் பெரிய ரீச் ஆகும் என்கிற நம்பிக்கைதான். அடுத்தது நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறுவயதிலேயே எனக்குள் கலை ஆர்வம் இருந்ததால் அதில்தான் அதிகம் கவனம் செலுத்தினேன். சினிமாவுக்காக முயற்சி செய்யும் போதுதான் நான் கருத்துள்ள நாவல்களையும் புத்தகங்களையும் படிக்கிற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். கம்யூனிஸ்ட் கட்சி -_ பொதுவுடமை கட்சி என்பதே பிறகுதான் தெரிந்தது. அது வரை அது ஒரு கூலிக்காரன் கட்சி என்றுதான் நினைத்திருந்தேன். அதே போல பக்தி அதிகமுள்ள குடும்பத்தை சேர்ந்தவன். அதனால் பெரியார் என்றாலே எதிரியாக நினைத்தேன். பிறகு அவரைப் பற்றி படிக்கிற வாய்ப்பு கிடைத்து. அவரைப் பற்றியும் அவரது போராட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். மக்களைப் பற்றி, அவர்களின் அறியாமைப்பற்றி சிந்திக்க வைத்தது அவரது எழுத்து.
அதன் பிறகு என் படைப்புகள் பெரியார் கண்ணாடி கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதனால் நான் எழுதும் சிறுகதையானாலும், நாவல்களா னாலும் சிந்தனை சார்ந்தே வெளியானது. அதே போலத்தான் இந்தப் படமும் பகுத்தறிவு சிந்தனையை உணர்வுபூர்வமாக சொன்னது.
இக்கதை ஏதேனும் உண்மைக் கதையை அடித்தளமாகக் கொண்டதா ?
உண்மைக் கதைதான். நான் பார்த்த சம்பவங்களும், கேட்ட செய்திகளும் தான் இந்தப் படம். கடவுளை வணங்குகிற போது, இது துஷ்ட தெய்வம். அடிச்சிடும் என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் அப்படியென்றால் அந்த கடவுளை ஏன் வணங்குகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில். இது எங்க சாமி. எங்களை ஒண்ணும் பண்ணாது. மத்தவுங்களை தான் அடிக்கும்.
சாமி ஏன் மத்தவுங்களை அடிக்கனும். அது காப்பாத்தத் தானே இருக்கு. இதுல நம்ம சாமி அடுத்தவுங்க சாமின்னு ஏன் பிரிக்கனும் என எனக்குள் கேள்வி எழுந்தது. நம்மளோட அறியாமைக்கு என்னென்னமோ கணக்கு போட்டுக்கிறோம் என்று யோசித்தேன். இதை அடிப்படையாக வைத்து ஏன் கதை எழுதக்கூடாது என்று இறங்கிய போது, தன் அறியமையால் மகளை இழந்த ஒரு தாயின் கதையையும் கேள்விப்பட்டு, அதை இணைத்து கதையாக எழுதினேன். இது கண்மணி இதழில் நாவலாக வந்தது. அதைத்தான் இப்போது படமாக்கினேன்.
.தங்களின் அனுபவங்கள் கதையானதா?
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்ந்து வாழ்ந்து எழுதினேன். அதனால் அனுபவம் நிறைய உள்ள கதை. இது வழக்கமான படமும் கிடையாது. வாழ்க்கையை அதன் போக்கில் சொல்ல வேண்டும் என்று எடுத்தேன். அதற்கு “தி வே ஹோம்” என்கிற கொரிய படம் ஒரு தூண்டுகோள். அது ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள பாசத்தை சொன்னது. இது ஒரு தாயின் அறியாமையின் போது எடுக்கிற முடிவும், புரிதலின் போது எடுக்கிற முடிவையும் சொன்னது. நாம்தான் கமர்சியல் என்று எதைஎதையோ படமாக்குறோம். நல்ல சினிமாவும் நமது ரசிகர்களுக்கு பிடிக்கும்.
முதல் படத்திலேயே மூடநம்பிக்கை குறித்து கதை அமைக்கக் காரணமென்ன? இந்த எண்ணம் உருவாகும் அளவுக்கு தங்களை பாதித்த சம்பவம் அல்லது மனிதர் பற்றி…?
மன நிலை பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்ணீரும் ஏக்கமும் வேதனையும் என்னால் கவலையோடு பார்க்க வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தி பேதலித்த பெண்ணுக்கு பின்னாலும் ஒரு பெரிய கதை இருக்கிறது. அந்த கதையையில் வில்லன்களும் வீரன்களும், கருப்பண்ணசாமிகளும், முனியும் இருக்கிறார்கள். அதில் பெரிதாக தெரிவது அறியாமை. அதை மனதில் ஏந்திதான் இந்த கதையை எழுதினேன். எல்லையை காக்கும் கடவுள்கள் ஏன் தப்பு செய்யனும். தப்பு செய்வது மனிதன் மட்டுமே. அதில் ஒருவருடைய கதையை உணர்ந்தேன். அதை அப்படியே படமாக்கினேன். பிரச்சாரம் எதுவும் இல்லை. ஆனால் கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமே என்கிற வேதனையின் வெளிப்பாடுதான் இந்த கதையை உருவாக்கக் காரணம். படத்திற்கு வணிகரீதியான வரவேற்பு எப்படி இருந்தது? 24 நாளில் 48 லட்சத்தில் பிலிம்ல இந்தப் படத்தை இயக்கினேன். நான் பெரிய அளவில் செலவு வைக்க வில்லை. அதே சமயம் மோசமான படத்தை கொடுக்கவில்லை. பார்த்தவர்கள் அனைவரும் சோகமாக இருக்கு. இருந்தாலும் நல்லா இருக்கு என்றுதான் சொன்னார்கள். கோடி கோடியாய் கொட்டி முதல் நாளே குப்பை என்று வர்ணிக்கப்படும் படங்களுக்கு நடுவே இந்தப் படம் நல்ல படம் என்கிற பெயரை பெற்றிருந்தது. அதே போல இந்த வருடத்தில் இன்றைய தேதியில் நல்ல கருத்துள்ள கதையை மக்களுக்கு சொன்ன படம் இந்தப் படம் என்று பத்திரிகைகள் பாராட்டி உள்ளது. அதே போல தொடர்ந்து 35 நாட்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்த படம் குறித்த திட்டம் என்ன?
என்னுடைய அடுத்த படம் சொக்கப்பன் பரம்பரை. இந்துக்களாக்கப்பட்ட தமிழர்கள் வாழும் ஒரு கிராமத்தில், கிறிஸ்தவப் பெண் ஆசிரியராக வேலைக்குச் செல்கிறார். அங்கு தங்குகிற வாய்ப்பு அவருக்கு நேரிடுகிறது. அங்குள்ள மக்களின் பாசமும், பண்பாடும், பக்தியும் சொல்லப்படுகிறது. அதில் எது அவருக்கு பிடிக்கிறது. எது அவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவருடைய பார்வையில் சொல்கிறேன். இதுவும் மனவிடுதலைக்கான படம்தான். நிறைய சுவராசியங்கள் இருக்கும்.
– சந்திப்பு : பிராட்லா