புகை இன்னும்
கொடியாய் ஆடுகிறது
சிவந்து.
தீ அணைப்பு ஊர்திகள்
வந்தும்
எரிகிறது இன்னும்
எங்களுள் தீ.
சினத்தை அவிக்கும்
தண்ணீர் ஏது?
நிலக்கிழார்கள்
சிக்கனமாக விளைக்கிறார்கள்
வறள் வெடிப்புகள்.
நதியே மணலாகிறது.
மணலும் விரைவுவண்டியேறுகிறது.
எரிந்த மரங்களின் கிளிகள் திரும்பி வரவில்லை.
கோரிக்கை வைக்காமல்
பழுதாகின்றன
டிராக்டர்கள்.
கால்நடைக் கதை
கேரள இறைச்சிக்கூடங்களில்
முடிந்தது.
சாணிப்பாலுக்கு
வசதி இல்லை.
எலி கடித்த சவுக்குகள்
எறவாணங்களில்.
சம்புடங்கள் காலியானதால்
விபூதி மறந்த
அசைவ சித்தாந்தங்கள்.
நகர் விரிவாக்கங்கள்
பசுமை தின்கின்றன.
சுனாமி தவிர்த்த
துறைமுகங்கள்
இறக்குமதி அரிசிக்
கப்பல் எதிர்பார்த்து.
– நீலமணி, செம்பியம்