– தந்தை பெரியார்
நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கை நிறைந்த புராண காரியங்களைக் கைவிடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள். புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்.
இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரசங்கம் என்றால் புரிந்தாலும், புரியாவிட்டாலும் தலைவணங்கிக் கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவத்தனமான மானமற்ற முட்டாள் தனத்தை விட்டொழியுங்கள்.
அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குச் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதை பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அது போல் கும்பிட்ட குழவிக் கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம் நீங்க வேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப் பட்டம் நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இந்த இழிவுப் பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள்.
பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்டம் வாயிலாகவும், படக்காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும் மேடைப் பிரசங்கங்கள் வாயிலாகவும் கதாகலாட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள். உங்களுக்காகவே இல்லாவிட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேணும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். கல் சாமிக்கு கை தூக்கித் தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.
என்ன மதத்தினர் என்று கேட்டால் வள்ளுவர் மதம் என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால் குறள் நெறி என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின் உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது. அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத் தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவ மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப் புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று. எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். அதில் ஆரியப் போக்கு காணப்படலாம். அதைச் சரிவர உணரும்வரை தள்ளி வைத்து விடுங்கள். தோழர்களே, பட்டிக்காட்டானை விட இந்தச் சென்னைப் பட்டினத்துக்காரர்களே பெரிதும் மூட நம்பிக்கைக்காரர்களாக இருக்கிறார்கள். இங்குதான் சாமியாட்டம் மிக அதிகமாயிருக்கிறது. நமது பெண்கள் சாமியாடுவதைப் பார்த்தால் சாமி என்று ஒன்று இருக்குமானால், அதுகூட ரொம்ப வெட்கப்படும். கண்ட பயல்கள் இன்று சாமியாட்டம் ஆடி அல்லது பிறரை ஆட்டி வைத்து காசு பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டிருக் கின்றனர்.
அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் நல்ல பிரம்பால் நாலு சூடான அடி கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்போது காணலாம் எவ்வளவு சீக்கிரமாக அந்தச் சாமி மலையேறி விடுகிறது என்பதை. கிராமங்களிலெல்லாம் இப்போது சாமி ஆடினால் நல்ல உதை கிடைக்கிறது. அதனால்தான் சாமியாட்டம் அங்கு குறைந்துவிட்டது. நாம்தான் முட்டாள் தனமாக பார்ப்பானுக்கு அழுது வருகிறோமே ஒழிய, நாம்தான் நம் மனைவியை இழுத்துக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, கோவிந்தா போட்டுத் தெருவில் வெட்கமில்லாமல் நடந்து கொண்டு, காவடி தூக்கிக் கொண்டு, குரங்கு போல் குதித்துக் கொண்டு, பார்ப்பானுக்கு அழுது, அவன் வயிற்றை வீங்க வைத்து, முட்டாளாகிக் கொண்டு வருகிறோமே ஒழிய, அவனொன்றும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில்லை.
எனவே, நீங்கள் அறிவு பெற்று முட்டாள்தனத்தைக் கைவிடுவீர்களேயானால் அவனொன்றும் உங்களை அசைத்து விடவோ, அழித்து விடவோ முடியாது.
நான் எனது 17-ஆவது வயதிலேயே இந்தக் கடவுளர்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலிருந்து இன்று வரைக்கும் அதாவது சுமார் 53 ஆண்டுகளாக நானும்தான் இதே பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் நானென்ன சீக்கிரத்தில் செத்துப் போய் விட்டேனா? அல்லது என் சொத்தெல்லாம் அழிந்து போய் விட்டதா? அல்லது எனக்கு இழிவு ஏற்பட்டு விட்டதா? இல்லையே. பின் ஏன் நீங்கள் பகுத்தறிவு வழி நடக்க அஞ்சுகிறீர்கள். அச்சம் விடுங்கள்; அறிவு பெற்றெழுங்கள்.
(26.12.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து.. – விடுதலை 31.12.1948)