முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்த நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கை ஏப்.25ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரிசாட்-_1 செயற்கைக் கோள் _பி.எஸ்.எல். வி_சி 19 ராக்கெட் மூலம் ஏப்.26ல் சிறீஅரிக்கோட்டா விலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. வானில் மேகக்கூட்டம் இருந்தாலும் துல்லியமாகப் படமெடுக்கும் புதிய வசதி இந்த செயற்கைகோளில் உள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேருக்கு 5 மாத ஊதியம் அளிக்க தமிழக அரசு ஏப்.26ல் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு 900 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று ஏப்.27ல் மத்திய அரசு மக்களவையில் அறிவித்தது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற நிதிபதி தேர்தலில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி ஏப்.27ல் வெற்றிபெற்றுள்ளார்.
பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லெட்சுமணன் லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு ஏப் 28ல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆரணி கயிலாசநாதர் கோவில் தேர் மே 1 அன்று அச்சு முறிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
மதுரை ஆதினம் 293ஆவது பட்டத்திற்கு குற்றப்பின்னணி உடைய நித்யானந்தாவை அறிவித்ததை 10 நாட்களில் மதுரை ஆதீனகர்த்தர் திரும்பப் பெற வேண்டும் என மே 1ல் மயிலாடுதுறையில் கூடிய சைவ மடாதிபதிகளின் கூட்டத்தில் கோரப்பட்டது. இல்லையேல் வழக்குத் தொடர முடிவெடுக்கப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி மே 1ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் ஏப்ரல் 21 ல் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மே 3 அன்று விடுவிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தின் மூலம் எந்தக் கட்சிக்கும் நியாயம் கிடைக்காது என்பதால் ஜூன் 13ல் நடக்கவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க.புறக்கணிக்கும் என்று மே 3 ல் தி.மு.க.தலைவர் கலைஞர் அறிவித்தார்.
நேபாளப் பிரதமர் பாபுராம் பட்டாராய் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய அரசு மே 5ல் பொறுப்பேற்றது.