இந்தியா மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கும் நாடு என்று அரசியல் சட்டம் சொல்லுகிறது. ஆனால், நடப்பு என்னவோ அதற்கு நேர்மாறாகத்தான் இருக்கிறது. மதச்சார்பின்மை என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்தல் என்று கூறுவோரும், மத நல்லிணக்கம் என்று கூறுவோரும் இங்கு அதிகம். இது ஒருபுறம் இருக்க,மதச்சார்பற்ற கொள்கையாளர்களும் அவர்களின் கருத்துகளுமே பன்மொழி,பல இன,பல கலாச்சார, பல மதங்கள் கொண்ட இந்தியாவை இதுவரை இந்த அளவுக்காவது முரண்பாடுகளில் உடன்பாடுக ளோடு நகர்த்தி வருகிறது என்று சொல்லவேண்டும்.
மதவாதம் தலையெடுக்கும்போதெல்லாம் இவர்கள்தான் கொஞ்சம் தட்டி வைக்கிறார்கள். மதச் சுதந்திரம் என்பதன் எல்லைகள் நீண்டு அடுத்த மதத்தை மட்டுமல்ல,அறிவியல் கருத்துகளுக்கு எதிராகவும் மதவாதிகளால் பயன்படுத்தும் ஆபத்து உருவாகிவருகிறது. அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பகுத்தறிவாளர்கள் தம்முடைய அளப்பரிய பங்களிப்பைத் தந்துவருகிறார்கள். ஆனால், அதற்கும் இப்போது அச்சுறுத்தல்கள் வந்துவிட்டன. அதுவும் சட்டரீதியாகவே. அண்மையில் ஒரு நிகழ்வு அறிவியலுக்கு, பகுத்தறிவு மனப்பான்மைக்கு எதிராக அமைந்து அரசியல் சட்டத்தையே கேலிக்குரிய தாக்கி விட்டது.
கடவுளின் பெயரால் அற்புதங்கள்,அதிசயங்கள் என்று கூறி மக்களை மதி மயக்கத்தில் வைத்திருக்க மதவாதிகள் அவ்வப்போது பல புருடாக்களை அவிழ்த்துவிடுவார்கள்.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றும் ஏசு சிலை கண்ணீர் வடிக் கிறது என்றும் திடீர் திடீரென குண்டு போடு வார்கள். இப்படிப் புரளி கிளப்பும் போது அதனை ஆதார பூர்வமாக அறிவியல் காரணங்களால் மறுப்பது பகுத்தறிவாளர்களின் கடமை. அப்படித் தன் கடமையைச் செய்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தலைவர் சேனல் எடமருகு மீது மும்பை காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஏசு கிறிஸ்துவின் சிலையில் இருந்து நீர் சொட்டுவது ஒன்றும் அற்புதம் அல்ல, அதிக அழுத்தத்தால் குறுகிய குழாயில் நீர் மேலே ஏறும் சாதாரண அறிவியல் நிகழ்ச்சிதான் அது என்று கூறியதற்காகத்தான் இந்த வழக்கு.
வேளாங்கன்னி தேவாலயத்தில் சிலுவையில் இருந்து தண்ணீர் சொட்டுவதில் எந்த ஒரு அற்புதமும் இல்லை என்று டில்லியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மார்ச் 5 ஆம் தேதி சேனல் எடமருகு கூறியதைத் தொடர்ந்து இது பற்றி ஆய்வு செய்யும்படி அவரைக் கேட்டுக் கொண்ட டிவி9 தொலைக்காட்சி நிறுவனம் அவரை விமானத்தில் அனுப்பி வைத்தது. மார்ச் 10 அன்று வேளாங்கன்னிக்கு வந்த சேனல் எடமருகு நீர் சொட்டும் சிலுவையை ஒளிப் படங்கள் எடுத்துக் கொண்டார்.
வேளாங்கன்னியில் அற்புதம் நிகழ்வதாகக் கூறப்பட்ட இடத்தைப் பார்த்த சேனல் எடமருகு அதிக அழுத்தத்தில் குறுகிய குழாய் மூலம் மேலே ஏறும் என்னும் தத்துவத்தின்படி, சிலுவைக்கு அருகே நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர் மேலே ஏறி ஏசுவின் சிலையில் இருந்து சொட்டுகிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார்.
அருகில் உள்ள சாக்கடையின் மீதிருந்த ஒரு மறைப்புக் கல்லை நான் நீக்கியபோது, அங்கு தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்டேன். தண்ணீரின் ஓட்டம் தடைப் பட்டால் அது வெளியேறுவதற்கான வழியைப் பார்க்கும். கீழ் நோக்கிச் செல்ல முடியாதபோது, மேல் நோக்கியும் தண்ணீர் செல்லும். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மரங்கள் நிலத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுகின்றன என்பதை ஒவ்வொரு மாணவரும் அறிவர் என்று அவர் கூறினார். இத்தகைய கருத்துகளை ஊடகங்களில் கூறியதற்காக பெர்னான்டஸ் என்பவர் ஜூஹூ காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தேவாலயத்தை பற்றியும், போப் பற்றியும் சேனல் எடமருகுவின் அறிக்கைகள் தனது மத உணர்வுகளைக் புண்படுத்தும்படி உள்ளதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
டில்லியில் வசிக்கும் சேனல் எடமருகு, அறிவியல் கண்ணோட் டத்தை வளர்ப்பது எனது கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது, வேண்டுமா னால் எனது அடிப்படைக் கடமையைச் செய்வதைத் தடுக்கும் வகையில் என்னைக் கைது செய்யட்டும் என்று கூறியுள்ளார். மும்பை காவல்துறை அவரை இப்போது விசாரணைக்கு அழைத்துள்ளது.
அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக இப்படி ஒரு நிலை என்றால், இன்னொருபுறம் இந்துத்து வாக்கள் ஆளும் மாநிலங்களில் கல்வியைக் காவி மயமாக்கும் நிலை. அரசின் பாடத்திட்டத்திற்கு எதிராக இந்துத்துவக் கல்வி நிலையங்கள் போதிக்கும் பாடத்திட்டத்தில் மதவெறிக் கருத்துகள் இடம்பெற்றிருப்பதை ப்ரண்ட் லைன் (பிப்ரவரி24,2012) மற்றும் இந்தியா டுடே (மார்ச் 21,2012) அம்பலப்படுத்தியுள்ளன.
இந்துத்துவா அமைப்புகளின் பின்னணியில் வித்யா பாரதி உள்ளிட்ட பல பெயர்களில் கல்வி நிலையங்கள் இந்தியா முழுக்க நடந்துவருகின்றன. 1977ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனங்கள் மிசோராம் நீங்கலாக கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இயங்குகின்றன. தற்போது 28 ஆயிரம் கல்வி நிறுவனங்களாக வளர்ந்துவிட்டன. இதில் 32 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். இக்கல்வி நிறுவனங்களில் இயன்ற அளவுக்கு இந்துத்துவக் கருத்துகளைத் திணிக்கிறார்கள். இளமையிலேயே மத உணர்வுக்கு மாணவ, மாணவியரை ஆளாக்கிவிட்டால் பின்னர் அவர்களை தங்களது மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்துத்துவாக்களின் கணக்கு.
தேசியக் கல்வி வாரியம் (NCERT) 1996 ஆம் ஆண்டு வித்யா பாரதி கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களை ஆய்வு செய்து இந்நிறுவனங் களின் கற்பித்தலில் மதவெறி மற்றும் தீவிரப் பற்றுடையதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. ராமஜென்ம பூமியைக் காப்பதற்காக கி.பி.1526 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை குறைந்தது 77 முறை எதிரிகளால் படையெடுப்பு அல்லது தாக்குதல் நடத்தப்பட்டு 3.5 இலட்சம் பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக வித்யா பாரதியின் ஒரு சிறு வெளியீடு கூறுவனத இதற்கு எடுத்துக் காடாகச் சொல்லலாம்.
தற்போது இந்துத்துவாக்கள் ஆளும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் அசாமின் சில பகுதிகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அரசின் மானியத்துடன் நடந்துவரும் ஓராசிரியர் பள்ளிகளில் 60 சதவீதம் இந்துத்துவாக்களின் பிடியில் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 10 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் பாடத்திட்டம் மூலம் மட்டுமல்லாமல், இந்துத்துவ கருத்தியலாளர்களைக் கொண்டும் வகுப்புகள் நடக்கின்றன.
நரமாமிசம் விரும்பிய நரேந்திர மோடி ஆளும் குஜராத்தில் பிழை நிரம்பிய பாடத்திட்டங்களையே பிள்ளைகள் படிக்கிறார்கள்.அம்மாநில பாடம் ஒன்றில் இந்தியாவில் 10 விழுக்காட்டினரே விவசாயத்தில் ஈடுபடுவதாகச் சொல்லித்தரப்படுகிறது. அய்ந்தாம் வகுப்பு பாடநூலில் கர்நாடக மாநிலம் அஞ்சனாத்திரியில் அனுமன் பிறந்தான் என்றும், ஒன்பதாம் வகுப்புப் பாடநூலில் நாடு எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையாக சிறுபான்மை இனத்தவர், தலித்துகள், பழங்குடியினர் திகழ்வதாகவும் அதற்கடுத் ததாகத்தான் கடத்தல், ஊழல் இருப்ப தாகவும் கூறுகிறது. அதேபாடம் இஸ்லாமியர், கிறித்தவர், பார்சிகளை அந்நியர் என்கிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பகவத்கீதை உரையாடல் விருப்பப்பாட மாக வைக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வக் குடிகள் என்றும் கற்பிக்கப்படுகிறது. கர்நாடக அய்ந்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்திட்டத்தில் அகண்ட பாரதத்தில் இந்திய நாகரீகம் என்று கூறி அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை,திபேத், இலங்கை, மியான்மர், பூடான், பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இந்துக் கோவில்களையும் வரைபடத்தில் இணைத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆளும் ஆந்திர மாநில மூன்றாம் வகுப்பு உருது பாட நூல் இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரசிம்மராவ் என்கிறது. அதே மாநில ஆறாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில் ரஷ்யப் புரட்சியில் ஜார் மன்னர் ஆட்சி தூக்கிவீசப்பட்டது 1971 ஆம் ஆண்டில் என்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் என்கிறார்கள். ஆனால்,வேற்றுமையை மேன்மேலும் வளர்ப்பதே இந்துத்துவாக்களின் பணியாக இருக்கிறது. பள்ளிப்பருவத்திலேயே சக மனிதர் மீது வெறுப்பை வளர்க்கும் கல்வி முறையை இந்துத்துவப் பள்ளிகள் போதிக்கின்றன.மாற்று மதத்தவரை அந்நியர் என்று பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கிறது. மதச்சார்பின்மை, ஜனநாயக உணர்வு, மனிதனை மனிதனாகப் பார்க்கும் மனநிலை, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை ஊட்டிவளர்க்க வேண்டிய இளம்பருவத்தில், மதவெறி நஞ்சு புகட்டும் இந்நிலையால் எதிர்காலத்தில் இந்தியச் சமூகத்தில் இன்னும் அதிகமான சிக்கல்களையே உருவாகப்போகின்றன. முளையிலேயே இதனைக் கிள்ளவில்லையென்றால் சமூக அமைதி அடியோடு அழிந்து போகக்கூடிய நிலையே உருவாகும்.
– மணிமகன்