சில பிள்ளைகள் பதின் பருவத்தில் பெரும்பாலும் விளையாட்டுப் பிள்ளை களாகவே இருப்பார்கள். பொறுப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருக்கும். மேலை நாட்டில் ஒரு தாய்க்கு அப்படியொரு கவலை இருந்தது. எப்போது பார்த்தாலும் என் பிள்ளையை உங்கள் மகன் அடித்துவிட்டான். எங்கள் பிள்ளையை அவன் தள்ளிவிட்டுவிட்டான் என்கிற புகர்களோடு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் மற்றவர்களும் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். இந்த பிள்ளை உருப்படவே மாட்டானோ என்கிற கவலை பெற்றோருக்கு இருந்தது. அவன் தன் நண்பன் எட்கர் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி போய் வருவார். அந்த எட்கரின் அக்காவைக் காதலித்தான். அவளுக்கு இவனைவிட நான்கு வயது அதிகம். ஆனாலும் இருவரும் காதலித்தார்கள். பிறகு கல்லூரிக்குப் போன பிறகு குடிகாரர்கள் சங்கத்தில் சேர்ந்து எப்போதும் மகிழ்ச்சியாக குடியோடு இருந்தான். ஆனால், அவன் உருப்பட மாட்டான் என்று கருதிய எல்லோருடைய அவ நம்பிக்கையையும் புறம் தள்ளி உலகத்துடைய மிகப் பெரிய சிந்தனையாளனாக அவன் வளர்ந்தான். அந்த இளைஞனின் பெயர்தான் காரல் மார்க்ஸ். அவன் மணந்துக்கொண்ட அந்த ஜென்னியோடு ஏறத்தாழ 40 ஆண்டுகள் இனிமையான இல்லற வாழ்க்கையையும் அவன் நடத்தினான்.
சுப.வீ. உரையிலிருந்து…