இந்திய வரலாற்றில் ராஜா ராம்மோகன் ராய்க்கு என்று ஒரு சிறப்பான இடம் உண்டு. வங்காளத்தில் பர்த்துவான் மாவட்டத்தில், ராதா நகரம் என்னும் ஊரில் 1772ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இராமகாந்தர் என்பவருக்கும், தாரிணி என்ற அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ராஜா ராம்மோகன்ராய் விரும்பும் இடம் எல்லாம் நடந்தார். வீட்டை விட்டுப் புறப்பட்டபோது அவருக்கு 12 வயதுதான். சிந்தனைத் தெளிவு பெற்ற சிறுவன் என்பதால், தீரத்துடன் நடந்தார். எங்கெங்கு கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் சென்றார். அங்குள்ள பண்டிதர்களுடன் வாதிட்டு வென்றார்.
பெண்கள் படிக்கக்கூடாது. சுதந்திரமாக வெளியில் செல்லக்கூடாது. ஆண்களுடன் பழகக்கூடாது. ஆணுக்குப் பெண் அடிமையாக இருந்து அவனுக்குரிய வேலைகளைச் செய்து அவனுடைய நலனுக்கே முன்னுரிமை அளித்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கணவன் இறந்துபோனால், அவனைக் கொளுத்துகின்ற சிதையிலே உயிருடன் இருக்கும் அவன் மனைவியையும் தள்ளிப் பொசுக்க வேண்டும் என்ற கொடுமை அக்கால நடப்பில் இருந்தது. மனைவி விரும்பவில்லையென்றாலும் வலுக்கட்டாயமாக அவளைத் தீயில் தள்ளி எரிப்பர்.
இப்படிப்பட்ட கொடுமைகளை ராஜா ராம்மோகன் ராய் கடுமையாக எதிர்த்தார். ‘சதி’ என்ற உடன்கட்டை ஏற்றப்படும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
‘சதி’ வழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்படி வற்புறுத்தினார். 1829ஆம் ஆண்டு அரசப் பிரதிநிதியாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங் இவரது கருத்தை ஏற்றுக்கொண்டார். உடன்கட்டை ஏறுவதைச் சட்ட விரோதம் என்று அறிவித்தார். பெண்களுக்கு எதிரான இக்கொடிய வழக்கம் ராஜா ராம்மோகன் ராய் அவர்களின் அரிய முயற்சியால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டது.
1833 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் ராஜா ராம்மோகன் ராய் மரணமடைந்தார்.
வாழ்க ராஜா ராம்மோகன் ராய் புகழ்!
– பொ. அறிவன், கழனிப்பாக்கம்.