புதுப்பாக்கள்

மே 01-15

சாமிகளால்…

கொட்டுகின்ற பாலினிலே
குளிர்ந்திடுமோ தேன்
சொட்டுகின்ற பாடலிலே
தேடிவந்து நலந்தருமோ
சூட்டுகின்ற மாலையிலே
சுடர்விட்டு எரிந்திடுமோ
காட்டுகின்ற தீபத்திலே நம்
கவலைகள் பறந்திடுமோ!

வயிறுவளர்ப்போர் சொல்கேட்டு
வன்கொலைகள் புரிகின்றீர்
மயிர் கொடுத்தால் துன்பங்கள்
மறைந்திடும் என்கின்றீர்
உயிர் காக்கும் சாமிகட்கு
உயிர்களையும் தருகின்றீர்
துயர்நீங்கும் என எண்ணித்
துவண்டே விழுகின்றீர்!

ரேகை

தோழா
யாரிடம் கேட்பது
ஆருடம் என்று
ஆலோசனை செய்வோனே
உன் அறிவிடமே
கேட்டுப் பார்
இலைகளில் இருக்கிறது ரேகை
இலைகள்
எப்போது உதிர்வோம் என்று
எவரிடமும் கேட்பதில்லை
நீ மட்டும் ஏன்
கையை நீட்டிய படி
பிச்சைக்காரனைப்போல்!

– ஆல. தமிழ்ப்பித்தன். புனல்வேலி

வாழ்க்கை

யாரேனும்
கிள்ளினால்தான்
வலிக்கும்
இப்போது கிளறினாலே
வலிக்கிறது
தொட்டால்தான் சுடும்
இப்போது
சொன்னாலே சுடுகிறது
அறைந்தால்தான்
கண்ணீர்வரும்
இப்போது பார்த்தாலே கண்ணீர்
வகிறது
வாழ்தலே வாழ்க்கை
இப்போது வாழாதிருத்தலே வாழ்க்கை எல்லாவற்றையும்
செய்வதற்கு
நேரம்
ஒதுக்குகிறோம்
எதையுமே செய்யாமல்தான் எல்லா நேரமும்
ஒதுங்கிவிடுகிறது
கசடுகளைப்போல  தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்
தொலைபேசியை
யாரும்
உடனே எடுத்துவிடாதீர்கள்
எடுக்காமலும் இருந்துவிடாதீர்கள்  வாழ்வின் எல்லாக் கேள்விகளையும்
கேட்டுவிடுகின்றன
நெறுங்கநொறுங்க
சருகுகளின் மீது
நடக்கும்போது

டாக்டர் க.அன்பழகன், தஞ்சாவூர்-2

தேவையில்லை!…

உங்களுக்கொரு
கெட்ட செய்தி!
உங்கள் ஊர்
கோயிலில்
களவு போய்விட்டது
உண்டியல் பணமும்
கடவுள் சிலையும்!
உங்களுக்கொரு
நல்ல செய்தி!
அறிவையும் உழைப்பையும்
நம்பிச் சென்றால்
வாழ்வும் வளமும்
வற்றா செழிக்கும்!
கடவுள் உங்களுக்குத் தேவையே இல்லை!!

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பகுத்து அறி!

கண்ணின் முன்னர் காண்கன்ற
காட்சி யாவும் மெய்யென்று
எண்ணி டாதே இளம்தோழா!
எதிலும் நஞ்சு கரந்திருக்கும்;

செவியில் வீழும் சேதிகளில்
சிறிதும் உண்மை இல்லாத
புவியில் தீது விளைவிக்கும்
புரட்டும் பொய்யும் நிறைந்திருக்கும்;

கண்டு கேட்டு அறிந்தவற்றைக்
களங்க மற்ற அறிவோடு
விண்டு பகுத்து அறிதல்தான்
வெற்றிக் கான வழியாகும்!

– கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *