செய்திக்கீற்று

மே 01-15

குஜராத்தில் ஒரு தீர்ப்பு

குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 பிப்ரவரி 27இல் அயோத்தி யிலிருந்து திரும்பிய ராம பக்தர்கள் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரசில் வந்துகொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு 59 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்துக்கள் கும்பல் குஜராத் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டது. அக்கலவரத்தில் ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 23 சிறுபான்மையினர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆனந்த் மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 9இல் 23 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் குற்றமா?

மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளே நோய் சோதனைகளமாக உள்ளன என்பது குற்றச்சாட்டாக உள்ளது. எய்ட்ஸ் நோயே கூட உருவாக்கப்பட்டதுதான் என்ற ஒரு கருத்தும் பேசப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நைஜீரியாவிலிருந்து ஒரு செய்தி. அந்நாட்டின் எய்ட்ஸ் ஒழிப்பு தேசிய அமைப்பின் இயக்குநர் ஜான் இடாகோ, 70 ஆயிரம் நைஜீரியக் குழந்தைகளுக்கு தாய் வழியாக எய்ட்ஸ் நோய் பரவியிருக்கிறது, என்று கூறியிருக்கிறார். அக்குழந்தைகள் என்ன குற்றம் செய்தன?

மோடியின் ஊழல்

சிறுபான்மை இசுலாமியர் களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி என்று ஜனநாயகவாதிகள் சொன்னால் அதற்கு பதில் சொல்லாமல்அவர் என்னமா நேர்மையா ஆட்சி நடத்துகிறார் தெரியுமா? என்பார் துக்ளக் சோ. குஜராத் சென்று பேட்டி எடுத்தும் அவரது நிர்வாக திறமை(?) குறித்தும் துக்ளக்கில் தொடரும் எழுதுவார்கள். தனது நெருங்கிய நண்பனாக  ஏற்றுக் கொள்வர். இப்படி துக்ளக் சோ அய்யர்வாள் தூக்கிப்பிடிக்கும் யோக்கியசிகாமணி நரேந்திர மோடியின் ஊழல் புராணம் வெளிவந்துள்ளது. மோடியின் நிர்வாகச் சீர்கேட்டினால் 46 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குஜராத் மாநில அரசின் கணக்குத் தணிக்கைக் குழு கூறியிருக்கிறது. நரேந்திர மோடி தனக்கு வேண்டப்பட்ட இரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டியுள்ளார். அதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான தணிக்கைக் குழுவின் யூகக் கணக்கையே ஊதிப் பெரிதாக்கிய பார்ப்பன ஊடகங்கள் மோடியின் ஊழலைப் பேசாமல் இருப்பது ஏன்? உலகிலேயே 24 காரட் யோக்கியன் மோடிதான் என நீட்டி முழங்கும் சோ, குருமூர்த்தி, பா.ஜ.க. கும்பல் வாய்மூடி மவுனச் சாமியார்கள் ஆனது ஏன்? இந்த யோக்கியர் இந்தியப் பிரதமர் ஆகி நாட்டையே கொலைக்களமாக்குவதோடு கொள்ளையடிக்கவும் வேண்டுமா?

பொருளாதார வளர்ச்சியின் தடை

இந்த ஆண்டின் (2012) முதல் இரண்டரை மாதங்களில் இந்தியாவில் தங்கம் வாங்குவது 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பிற முதலீடுகளான நிலம் வாங்குதல், நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தல் குறைந்தது. உலகிலேயே 18 லட்சம் டன்கள் தங்கம் பயன்படுத்துவது இந்தியாதானாம். இது அமெரிக்காவின் இருப்பைவிட இரு மடங்கு என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இப்படி பொருளாதார முடக்கம் ஏற்படுவது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காமல் போவதற்கும் இது ஒரு காரணம் என்கிறார்கள்.

உலகில் மரணம்

உலகின் தற்போதைய மக்கள் தொகை 703 கோடி.2007 ஆம் ஆண்டில் உலக புற்று நோய் நிறுவனம் மனிதர்களின் இரப்பு குறித்து ஓர் ஆய்வை மேற்கொண் டது.அது தரும் தகவல்தான் இது:-

ஓவொரு ஆண்டும் 35 கோடி பேர் வயது மூப்பின் காரணமாகவோ அல்லது எந்த நோயும் தாக்கப்படாமலோ இயல்பாக இறக்கிறார்கள்.17.5 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். 7கோடியே 60 இலட்சம் பேர் புற்று நோயால் இறக்கின்றனர். 7 கோடியே 10 இலட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இறக்கின்றனர். 4 கோடியே 40 இலட்சம் பேர் கொழுப்புச் சத்து அதிகரிப்பால் இறக்கின்றனர்.2 கோடியே 60 இலட்சம் பேர் உடல்பருமன் ஏற்பட்டு அதன் காரணமாக சர்க்கரை வியாதி அல்லது ரத்த அழுத்தம் ஏற்படுவதால் இறக்கின்றனர். ஏறத்தாழ 10 இலட்சம் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு மட்டும் 4 இலட்சத்து 65 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயால் உயிரிழந்தனர்.

ஒவ்வொரு நாளும் உலகில் புற்று நோயால் உயிரிழப்பவர்கள் 20 ஆயிரம் பேர்.

புனித(?) கங்கை

பாரத புண்ணிய பூமியின் புனித கங்கையில் ஏற்கெனவே பிணங்கள் வீசப்பட்டு மோட்ச லோகத்தின் வழியாக விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆலைக்கழிவு நீர் உள்ளிட்ட பிற கழிவுநீர் மட்டும் தினந்தோறும் 290 கோடி லிட்டர் கங்கையில் கலக்கிறதாம். இந்தக் கவலையை வெளிப்படுத்தியவர் பிரதமர் மன்மோகன்சிங்.

கல்விச் சான்றிதழில் குறிப்பிட்டிருந்த தேதியை மட்டுமே பணியில் சேரும்போது பரிசீலிக்க வேண்டும்,அதன் பின் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கக்கூடாது என சென்னை உய்ர்நீதிமன்றம் வழக்கு ஒன்றின் தீர்ப்பில் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உலக வங்கியின் தலைவராக அமெரிக்காவில் வசிக்கும் தென்கொரியரான ஜிம் யாங் கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏதிலிகள் மேம்பாட்டுக்கான அய்.நா.அவையின் முதல் சிறப்புத் தூதராக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜீலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை மதமற்றவள் என்று அறிவித்துக் கொண்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *