இப்போது திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்குவங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக் கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய்தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக்கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.
இன்றைக்கும் பிராமணர்கள் சடலத்துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர் களுக்கும் பிராமணர் அல்லாதவர் களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்ஜாதியின ராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்லமுடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவதில்லை. ஆம்லேட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில்தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம்பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடுமுறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது.
அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் கடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டிருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.
பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்ய வில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா, உரைநடை என்பது மணிக்கொடியால் தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925இல் பெரியாரின் தலையங்கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரைநடை அத்தனை அற்புதமாக இருக்கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள்தான்.
பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன்வைத்து உண்மையான சமூக அதிகாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல் வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
– தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன்
நன்றி: த சன்டே இந்தியன், 29.04.2012
Leave a Reply