Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீயும் நானும்

சுத்தமான
சமுதாயத்தை
அசுத்தமாக்கும்
நீ
புனிதமானவன்…
அசுத்தமான சமுதாயத்தை சுத்தமாக்கும்
நான்
தீண்டத்தகாதவன்!

ஆத்மாக்களும்
மாமாக்களும்
உனக்கு
முன்னோடிகள்…
அண்ணலும்
அய்யாவும்
எமது
அடையாளத்தை
மீட்டெடுக்கும்
வழிகாட்டிகள்!

பாம்பனைய
பள்ளிகொண்டு
மகள் புனர
மானங்கெட்ட
புல் மீல்ஸ்
வெஜிடேரியன்கள்
உனது
கடவுளர்கள்…

கருவாட்டுக்
கவுச்சியோடு
சரக்கடிக்கும்
நான்_வெஜ்
காத்தவராயன்கள்
எமக்கான குலச்சாமிகள்!

பொய்யாக
வியர்வை வழித்து
ஆடைசரிய
அபிநயக்கும்
உனக்கு பரதநாட்டியம்…
காய்ப்பேறிய
கால்களோடு
வியர்வையில்
குதித்தெழுந்து
திமிரெடுத்து ஆடும்
எமக்கு
பறையாட்டம்!

சாதீய
கொழுப்பெடுத்து
விலக்கி வைத்து
கழுத்தருக்கும்
நீ
அகிம்சாவாசி…

ஒத்தே வராத
உன்னோடு
ஒத்துவாழ
விரும்புகிற
நான் பயங்கரவாதி!
கலைபாரதி, சித்தமல்லி