ஜெபக்கூட்டம்

மே 01-15

வேலம்மாள். சிறுவயதிலேயே கணவனை இழந்தவள். ஆனாலும், அவனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயானவள். கட்டுமானத் தொழிலில் சிற்றாளாய்த் தன்னை ஒப்படைத்துக் கொண்டவள். சிக்கனக்காரியாய்க் குடும்பத்தை நடத்தியவள். வறுமையைக் காட்டாது குழந்தைகளை வளமாய் வளர்த்தாள். மூன்றும் முக்கனிகள்தாம்.

மூத்தவன் முருகன் பொறியியற் கல்லூரியில் சேரவும், இளையவள் வள்ளி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேரவும் விண்ணப்பங்கள் வாங்கிடக் காத்திருக்கின்றனர். இருவரும் இரட்டையராய்ப் பிறந்தவர்கள். கடைசியாகப் பிறந்தவள் சாந்தி. பத்தாம் வகுப்பிற்குச் செல்ல இருக்கிறாள்.

குடும்பச் சூழ்நிலை, குறைந்த வருமானம், குழந்தைகளின் படிப்பு, ஆண்துணை இல்லா நிலையினை எண்ணி மனம் புழுங்கி அண்டை வீட்டு ஜெயசீலியிடம் சொல்லி வருந்துவாள். ஜெயசீலியோ இவளைத் தேற்றியவளாய், குறைதீர்க்கும் மய்யமாய்த் திகழும், பக்கத்து ஊர் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்தாள். குறை தீருமா? என்றாள் அய்ம்பது வயது வேலம்மாள். நிச்சயமாக என்று பல்வேறு கதைகளைக் கூறி அசைத்து விட்டாள் ஜெயசீலி, வேலம்மாளை.

பலநாள்களாகத் தொடர்ந்து ஜெபக்கூட்டத்திற்குத் தாயார் செல்வது குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்கள் பள்ளிக்குச் சென்றபின்தான் இவர்கள் பேருந்து ஏறி ஏழுமாவடி ஜெபக்கூடத்திற்குச் சென்று வருவர். வேலையில்லா நாள் மட்டுமின்றி சிலநாட்கள் வேலைக்கு விடுப்புப் போட்டும் பிரார்த்தனைக்குச் சென்றுவந்தாள்.

இன்று, பிள்ளைகள் இருவருக்கும் விண்ணப்பங்கள் வாங்கி, நிரப்ப வேண்டியதை நிரப்பி, உரிய சான்றிதழ்களைப் பெற்று அனுப்பத் தயாராகிவிட்டன. அனுப்புவதற்கு முன் ஜெபத்தில் வைத்து ஆசிர்வாதம் பண்ணிடத் தாய் விரும்பினாள். மகனிடம் கூறி அழைத்தாள். மகனோ, என்னம்மா இது… அங்க நமக்கென்ன வேல? என்றான். இல்லப்பா.. நம்ம பக்கத்து வீட்டு ஜெயசீலி அக்காள்… அங்க சென்று வந்தாலே நல்லதே நடக்குங்கிறார் என்றாள் தாய். அங்க போவதால் கிடைக்கு மென்பதெல்லாம் அவநம்பிக்கை… நானும், தங்கச்சியும் நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறோம். நிச்சயமாக எங்களுக்கு இடம் கிடைக்கும். எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது என்றாள் மகன். எனக்கென்னவோ பயமா இருக்கு. அரசு ஒதுக்கீடு கிடைக்கலைன்னா? தாய். கிடைக்கும்மா… நிச்சயம் கிடைக்கும் மகன். கிடைக்கலைன்னா என்ன செய்வது? ஒருமுறை அந்த ஜெபத்திற்குப் போய்விட்டுத்தான் வருவோமே என்றாள் தாய்.

அம்மா! ஜெபம், தவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை… 21ஆம் நூற்றாண்டில், கணினி செயற்கைக்கோள் உலகில் நாம் இப்படியா ஏமாறுவது? வேண்டாமம்மா என்றான் மகன்.

ஒரு முறை சென்றுதான் பார்ப்போமே என்றாள் தாய் பிடிவாதமாக.

மகள் வள்ளியோ, அம்மா! ஜெபக்கூடம் நடத்தி, பலபோதகர்கள் பெண்களைப் பாலியல் செயலுக்கு ஆளாக்கி, நிர்க்கதியாக்கியிருக்காங்க. அடிக்கடி செய்தித்தாள்ல வருகிறது. இதனைக் கர்த்தரோ, இயேசுவோ கண்டிக்கவில்லையே? நம் குறையை எங்கேயம்மா அவரு கேட்கப் போகிறாரு? அண்ணன் சொல்றதைக் கேளுங்க என்றாள்.

ஆனாலும், ஜெயசீலியின் செயலே வென்றது. தாயாரின் அன்பிற்கு அடிமையாகிய பிள்ளைகள், பசுவின் பின் செல்லும் கன்றுகளாய்ச் சென்றனர். பேருந்தில் ஏறி ஏழுமாவடி என்று சீட்டு எடுத்தனர். ஏழுமாவடி இறங்குங்கள் என்றவுடன் தாயார் கனவுலகிலிருந்து விழித்தார். விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாய், இயேசு ஆசிர்வதிப்பதாய் இப்படிப் பல்வேறு செயல்கள் வந்து போயின. இறங்கிய தாயார் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். மகனும் மகளும் என்ன நெனப்பாங்க? அய்யோ, என் வாழ்நாளையே வீணாக்கி விட்டேனே என்றாள் தாய் வேலம்மாள். ஜெயசிலி எதுவும் பேச முடியாது நின்றாள்.அங்கே நின்றவர்கள் மகனிடம் சொன்னார்கள். நேற்று இரவு திடீரென ஜெபக்கூடம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டது.

பரந்த கூடமாகையால் தங்கியிருந்தோர் ஓடித் தப்பிக்க முடிந்தது. போதகரும் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். காலைவரை தீயை அணைத்தனர் என்றனர். அடுக்கிய நிலையில் விவிலியப் புத்தகங்கள், ஜெபத்திற்காகத் தரப்பட்ட படிப்பு, வேலை விண்ணப்பங்கள், இயேசுவின் நூற்றுக்கணக் கான அடுக்கி வைக்கப்பட்ட படங்கள் எல்லாம் அப்படியே கரிச்சாம்பலாய்க் கிடந்தன. வேலம்மாள் மகனைப் பார்த்துப் பதற்றத்துடன் சொன்னாள். அய்யா, நல்லவேளை நீ மறுத்துச் சொன்னதால நாம் விவாதம் செஞ்சோம். இல்லன்னா நேத்தே செபத்துக்கு வந்திருப்போம். அப்படி வந்திருந்தா என்ன ஆயிருக்கும்? வாங்க… வாங்க… மொதல்ல இங்கிருந்து. கௌம்புங்க என்று பிள்ளைகளை அழைத்தாள். இந்தாம்மா ஜெயசீலி? தன் இருப்பிடத்தையே காக்காத ஜெபமா என் பிள்ளைகளின் வாழ்க்கையைச் செம்மை யாக்கப் போகுது? அவ்வி டத்தை விட்டு விரைந்தாள் வேலம்மாள். பிள்ளைகளின் மதிப்பெண்கள் இடங்களைப் பெற்றுத்தந்தன. பொறுப்புடன் படித்தனர் பிள்ளைகள். இப்போதெல்லாம் வேலம் மாள் ஜெபக்கூட்டத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *