மதம் பிடித்து அலையாதீர்

மே 01-15

– க.அருள்மொழி

மனிதர்கள் குழந்தைகளாகப்  பிறந்தவுடன் அவர்களுக்குப் பெயர்வைக்கும்போதே அக் குழந்தையின் பெற்றோர் சார்ந்திருக்கும் மதத்தின் சாயல் தொணிக்குமாறு பெயரிடப்படுகிறது. அந்த மதத்தின் குறியீடுகள் அவர்களின் உடலில் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அம்மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவன் அந்த மதத்தைவிட்டு விலகாதபடியும் மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கற்றுக்கொள்ளாதபடியும் புலன்களுக்கு மூடி போட்டு வளர்க்கப்படுகின்றான். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் தன்னுடைய சுகபோக வாழ்வுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் மதத்தைச் சார்ந்தவர்களுக்குத் தரும் போதனைகள் என்னும் ‘போதை’ தெளியாமல் இருக்கும் வரை சாதாரண மக்களுக்கு நலவாழ்வு என்பது சாத்தியமில்லை.

இங்கு நாம் பேசப்போகும் கருத்து உலகில் உள்ள எல்லா மதத்தினருக்கும்-மதம் சார்ந்த மக்களுக்கும் (மக்குகளுக்கும்) மதவாதிகளுக்கும் (வியாதிகளுக்கும்) பொருந்தும். இந்த மத போதனை மயக்கத்தில் இருப்பதால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

ம(னி)த பொம்மைகள்: பொதுவாக மனிதர்கள் தன்னுடைய மனக்குழப்பம் அல்லது உடல் பிரச்சினைகள் தீர்வதற்காகத்தான் மதத்தையும் மதவாதிகளையும் நம்பிச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்ட அப்பிரச்சினை தீர்ந்து தெளிவு பிறக்க வேண்டும். மாறாக, நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கும் அல்லது அக்கம்பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் சொல்வது, பழைய குழப்பம் தீராதது மட்டுமல்லாமல் புதிய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதுதான். இந்தக் குழம்பியக் குட்டையில் மதவாதிகள் நன்றாக மீன் பிடிக்கிறார்கள். இந்த மக்குகள் தெரிந்தே வலையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
மாறாக, சொந்த அறிவைக் கெண்டு சிந்தித்து வள்ளுவர் கூறியபடி “நோய் நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” பிரச்சினையை எளிதில் முடித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஏதுவாகும். மாறாக, “இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட…” என்பதுபோன்ற  பொருளற்ற பாடல்களுக்குப் பொருத்தமாக பொம்மை மனிதர்களாக வாழ்வது நம்முடைய சுயமரியாதையைக் குறைப்பதோடு தெளிவான மன வளர்ச்சியைப் பாதிக்கும். உள்ளார்ந்த அறிவை மழுங்கச் செய்யும். “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு”- பெரியார்.

தொலைநோக்குத் தொலையும்: உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு- உங்களை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்வதுதான். அதாவது, “நான் ஒரு இந்து” அல்லது “நான் ஒரு கிறித்துவன்” அல்லது “நான் ஒரு முஸ்லிம்” அல்லது “நான் ஒரு பவுத்தன்” என்று சொல்லிக் கொள்வது உங்களின் சிந்தனையை ஒரே இடத்தில் நகராமல் செய்துவிடும். மூர்க்கத்தனமாக, உண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாத நிலைக்கு ஆளாக்கிவிடும். காரணம், மதங்கள் சொல்வதெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை. அவற்றைப் பற்றி மறுபரிசீலனைக்கு அனுமதி இல்லை. காட்டுமிராண்டிக் காலத்தில் சொல்லப்பட்டவை கம்ப்யூட்டர் காலத்தில் பொருந்துமா என்பதைப் பற்றி கம்ப்யூட்டரைப் – பயன்படுத்துபவர்கள் கூட சிந்திக்காதது ஆச்சரியம்தான். சுதந்திரமாக சிந்திக்க மதம் அனுமதிப்பதில்லை. ‘உண்மை’க்கு மாறாக ‘மத’ப் பொய்களைக் கற்பிப்பதால் வெளிச்சம் வருவதற்கான வழிகள் அடைக்கப்படுகின்றன. உங்களை நீங்களே இருட்டில் அடைத்துக் கெண்டு வெளிச்சம் வரவில்லை என்பது சரியல்ல. வெளிச்சத்தை நோக்கி வெளியே வரவேண்டியது நீங்கள்தான். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான தீர்வுகள் பலன் தராது. ஆனால், மதங்கள்  ஒரே தீர்வைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

தந்திரமான பயிற்சிகள்:

மதம் – உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட  பல்வேறு படிநிலைகள் கொண்ட அதிகார அமைப்பாகும். அது மதத் தலைவர்களின் அதிகாரம் மற்றும் சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காகவே தவிர மக்களின் நலவாழ்வுக்காக அல்ல. நீங்கள் உங்கள்  மதத்திற்காக செலவு செய்யும் பணம் உங்கள் மூளையை மழுங்கடித்து உங்களை ஏவலாளாக மாற்றும் பயிற்சிக்குக்  கட்டணமாகும். மதம் மக்களை மாக்களாக (ஆடு மாடுகளாக) மாற்றுவதில் வலிமை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. மதம் உங்களின் சொந்த அறிவை அரித்து(அழித்து) விட்டு ஏதேனும் ஒரு (அல்லது பல) கடவுள், தலைமை அடையாளம் (உருவம்), அல்லது ஒரு புனித நூல் ஆகியவற்றைப் பின்பற்றி நடக்க பயிற்சி அளிக்கிறது. இந்தக் கருவிகள் (கடவுள், அடையாளம், நூல்) ஆகியவை ஏவலாள் பயிற்சி ‘வகுப்புகளை’ நடத்துபவர்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆனால், அந்தப் பயிற்சிக்கு மதவாதிகளுக்குப் பொருந்தாது. இந்தப் பயிற்சிகளால்   நீங்கள் வலிமையற்றவராகவும் எதிர்ப்புத் தன்மயற்றவராகவும் எளிதில் கட்டுப் படுத்தக்கூடியவராகவும் மாறிவிடுகிறீர்கள். இந்தப் பயிற்சிகளெல்லாம் ‘நம்பிக்கை’ வார்த்தை என்ற வியாபார சின்னத்தை முன்னிறுத்தி நடத்தப்படுகிறது.

மதம் ஏராளமான மூடநம்பிக்கைகளை உங்கள் மூளையில் ஏற்றிவிடுகிறது. உங்களுக்கு ஒரே வழி- அதற்கு ஆமோதித்து தலையாட்டுவது அல்லது அமைதியாக இருப்பது. மதப் பயிற்சிகளில் முக்கியமாக மண்டியிடுவது, காலில் விழுவது, தலையாட்டுவது போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவமுண்டு. நாய் போன்ற விலங்குகளைப் பயிற்றுவிப்பதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் “ஆமாம் சுவாமி”.

நீங்கள் எப்போதாவது ‘ இந்தப் பயிற்சிகள் எல்லாம் மர்மமான, குழப்பமான , ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளதே!?’ என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் தர்க்க அறிவு மேலோங்கும்போது இந்தச் சிந்தனை வரலாம். ஆனால், இன்றைய நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ற சிந்தனையை மூட நம்பிக்கை வலைப்பின்னல் தடுத்துவிடும். “மதம் மக்களுக்கு அபின்  “-கார்ல் மார்க்ஸ்.

இந்து மதத்தில் சைவம்- வைணவம், கிறித்துவத்தில் பழைய ஏற்பாடு -புதிய ஏற்பாடு, புத்த மதத்தில் மஹாயானம்-ஹீனயானம் என பிரிவுகள் நடத்தை விதிகள் பலவற்றில் மாறுபட்டு நிற்கின்றன. அதன் தலைவர்கள் பல நேரங்களில் பல கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வதையும் அதை மறைக்க அவர்கள் படாத பாடுபடுவதையும் பார்க்கின்றீர்கள். உண்மையிலேயே தெளிவான மனநிலையில் உள்ளவர்கள் மதத்தின் விலங்குகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு வெளியே வரவேண்டாமா? புனிதம் என்று சொல்லப்படுபவை எல்லாம்  விளங்கிக் கொள்ள முடியாதவகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதைப்பற்றிச் சிந்தித்து அதிலிருந்து வெளிவர நீங்கள் முயற்சி எடுக்காத வரை அதை வெற்றி கொள்ள முடியாது. இந்த அடிமை விலங்குகளை உடைக்க நீங்கள்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். மதவாதிகள் உங்கள் பயத்தையும் உறுதியற்ற தன்மையையும் பயன்படுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறார்கள்.

ஒருவேளை நீங்கள் கடவுளுடன் பேசவேண்டுமென்றால் நீங்களே நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்களேன். இடைத் தரகர்கள் எதற்கு? கண்டிப்பாக கடவுளுக்கு இடைத்தரகர் தேவையில்லை. அறிவற்ற ஏவல் அடிமை வலையில் விழாதீர்கள். வெறும் ‘நம்பிக்கை’ என்பது உங்களைக் கண்டிப்பாக கடவுளின் அருகில் கெண்டு செல்லாது. மாறாக, ‘மனிதன்’ என்ற நிலையிலிருந்து கீழிறக்கி ‘விலங்கு’ நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

நேரத்தை வீணடித்தல்:

மதக் காரியங்களுக்காகச் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையின் விலை மதிப்பற்ற நேரத்தை, கழிப்பறையில் ஒன்றுக்கும் உதவாமல் கழித்துவிடுவது போலாகும். மோசமான கற்பனைக் கதைகள், புராணங்கள் போன்றவற்றைப் படிப்பது, அர்த்தமற்ற  சாஸ்திர சட்டங்களைப் பின்பற்றுவது மூளையைக் குப்பைகளைக் கெண்டு நிரப்பிக் கொள்வது போலாகும்.

தான் குடியிருக்கும் நாட்டின் சட்டதிட்டம் என்னவென்று தெரியாத தற்குறிப் பேர்வழிகள்கூட மதச் சடங்குகளைத் தெளிவாகக் கூறுவார்கள். தவறு செய்துவிட்டு “எனக்குச் சட்டம் தெரியாது” என்று யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. சடங்குகள் தெரியாததற்குத் தண்டனை ஏதும் கிடையாது. ஆனால், மக்கள் வலிந்து தெரிந்து கொள்வதும் கற்றுக் கொடுப்பதும் எதை?

தேவையில்லாத குப்பைகளை மூளையிலிருந்து அகற்றிச் சுத்தப் படுத்தினால்தான் அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கும். இது கணினியில் வைரஸ்களை நீக்குவது போலத்தான்.

திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சடங்குகள், விழாக்கள், பிரார்த்தனைகள் பயனற்ற வழிபாடுகள் உங்கள் நேரத்தை விழுங்கிவிடுகின்றன. இவை உங்களை மயக்க நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
பண விரயம்:

எவ்வளவு நேரம் மதக் காரியங்களுக்காகச் செலவிடுகிறோமோ அந்த அளவிற்குப் பெரிய அளவில் பண விரயமும் ஆகும். ஒரு மதத்திற்கு நீங்கள் செலவிடும் பணம் அந்த மதத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உங்கள் மற்றும் உடன் வாழும் மனிதர்களின் அடிமைத்தனம் நீடித்திருக்கவும் பயன்படுகிறது. சில மத நிறுவனங்கள் அல்லது மத (மட) அதிபர்கள் பெரிய அளவில் தொண்டு செய்வதைப் பார்க்கிறோம். அந்தப் பணம் அவர்களின் சொந்தப் பணமா?  வருமான வரி விலக்கிற்காகக் கொடுக்கப்படும் நன்கொடைகள் மற்றும் பிரார்த்தனை போன்றவற்றிற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் இப்படி செலவிடப்படுகிறது. நீங்களே அந்தப் பணத்தைப் பெறும் நிலையில் இருந்தால் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எண்ணிப் பாருங்கள்! அதைக் கொஞ்சம் செலவிடுவதால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? மாறாக மேலும் வளர்ச்சி அடைவீர்கள்.

இவ்வாறு கொடுக்கப்படும் பணம்தான் பல நூறு ‘கோடீஸ்வர துறவிகளை’ உருவாக்கக் காரணமாக இருக்கிறது. நீங்கள் யாராவது காசுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? பணம் என்ற கருவியை மனிதன் கண்டுபிடித்தான். அதை வைத்துக் கொண்டு கடவுள் என்ன செய்யப் போகிறது? கடவுளுக்காக என்று கேட்டு “மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே”. நீங்கள் கடவுள் நம்பிக்கையைக் கைவிடாவிட்டால் பரவாயில்லை. கடவுளுக்காகக் காசு கொடுப்பதை நிறுத்துங்கள். ஒரு மாதத்திற்கு மேல் ஒரு கோவிலும் ஒரு மடமும் திறந்திருக்காது. எல்லா  ‘சாமிகளும்’ பட்டினியால்  செத்துப் போய்விடும். அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை தேடிப் புறப்பட்டுவிடும்.

சில மதங்கள் ‘துறவிகளை’த் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பதுகூட சொத்து கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். சில மதங்கள் சாமியார்கள்   திருமணம்  செய்துகொள்ளக் கூடாது என்பதற்குக் காரணம், பணம் மடத்தைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக. திருமண பந்தத்தில் ஈடுபடாமலேயே ‘வாரிசு’ களுக்கு மக்கள் சொத்தை எழுதி வைக்கும் ‘பற்றற்ற’ துறவிகளைப் பார்த்திருப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *