கேள்வி : நம்பிக்கையின் பெயரால் மிக முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் தகர்க்கப்படலாமா? – சா.கோவிந்தசாமி, ஆவூர்
பதில் : நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டால் முக்கியமான மக்கள் நலத்திட்டங்கள் என்ன, முக்கியமான சட்டங்களோ திட்டங்களோகூட அரசுகளால் நிறைவேற்ற முடியாதே.
எடுத்துக்காட்டாக, கருச்சிதைவை சட்டபூர்வமாக்கும் சட்டம், குடும்பக் கட்டுப்பாடு திட்டம், நோய் தீர்க்கும் சிகிச்சைக்கானவை, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது சட்டம் (Age of Consent Act) ஹிந்து சட்டத்திருத்த மசோதா, விதவைத் திருமணம், உடன்கட்டை ஏறுவதை தடுக்கும் சட்டம் – இப்படிப் பலபல நிறைவேற்றப்பட்டி ருக்கவே கூடாதே!
கேள்வி : ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரும் ஜெயலலிதாவின் அடிப்படை நோக்கம் என்ன? – ஜி.சாந்தி, ஆவூர்
பதில் : வெளிப்படையாகத் தெரிந்ததுதானே! கரசேவை, இராமர்கோயில், மோடிக்கு விருந்து, அருண்ஜெட்லிக்கு வரவேற்பு போன்றவை போதுமே அவரைச் சரியாக அடையாளம் காட்ட!
கேள்வி : தற்போது அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பி.ஜே.பி இல.கணேசன் கூறுவதன் நோக்கம் என்ன? – த.சுரேஷ், நாகர்கோவில்
பதில் : இப்போது உள்ள அரசு என்ன கடவுள் நம்பிக்கை அற்ற அரசா? இனி அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துள்ள – அண்ணாவின் லட்சியங்களுக்கு – கருத்துகளுக்கு விரோதமாக ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்திகளுக்கு வாழ்த்துச் செய்தி விடும் அரசுதானே! முழுக்க பார்ப்பனரே அனுபவிக்க ஆசைப்படுகிறார் போலும் இல.கணேசன்! இரயில்வே கட்டண உயர்வை ரத்து செய்யக் கூடாது என்று தொழிற் சங்கங்கள் கோரியுள்ளது சரியா? – சொர்ணம் — ஊற்றங்கரை
கேள்வி : விசித்திரமான மக்கள் விரோதக் கோரிக்கை! மாறன் சகோதரர்களின் சன் குழுமம் செய்யும் ஆன்மீக பரப்பு வேலை திராவிட இயக்கத்திற்கு செய்யும் துரோகம்தானே? – தி.இரமணன், நேரு நகர், த.பேட்டை
பதில் : அவர்கள் பல தொழில்களை நடத்துகின்றனர். அதில் ஆன்மீகம் புதுத்தொழில். இப்போது பிசினஸ் அவ்வளவுதான்.
கேள்வி : அறிவியல் சாதனங்களில் ஒன்றைக்கூட கண்டுபிடிக்கவோ, தரவோ இயலாத கடவுளுக்கு மனிதன் மட்டும், அறிவியல் சாதனங்கள் அனைத்தையும் கொண்டு விளம்பரம் தேடித்தருவது எதனைக் காட்டுகிறது? நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : கடவுள்களின் கையாலாகாததனத்தையும், மனிதர்களின் அறியாமையையும் காட்டுகிறது!
கேள்வி : ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமே கிறிஸ்துவ மதமும், திருச்சபை யின் வளர்ச்சியுமாகும் எனக் குறிப்பிடுகிறார் எட்வர்ட் கிப்பன் என்ற வரலாற்றாசிரியர். அதுபோல் தமிழ்ப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமென நினைக்கிறீர்கள்? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : பார்ப்பனப் பண்பாட்டிற்கு தமிழ்ப்பேரரசர்கள் தங்களை அடிமையாக ஆக்கிக் கொண்டதுதான்!
கேள்வி : மத்திய நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் நடைமுறையில் முக்கிய வேறுபாடுகள் என்ன? – மை.கண்ணன், அரியலூர்
பதில் : மத்தியில் பெரிதும் மரபுகள் மதிக்கப்படுகின்றன; தமிழகத்தில் புதுமைகள் நிகழ்கின்றன!
கேள்வி : தமிழக முதல்வருக்கு உழவர்கள் பற்றிய திடீர் அக்கறை ஏற்படக் காரணம்? – ஜி. நளினி, பெரம்பலூர்
பதில் : ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே! ஓட்டு! ஓட்டு!
கேள்வி : துஷ்யந்தன் மகன் பரதன் இந்தியா முழுவதும் ஆட்சி செய்ததன் நினைவா கவே பாரதநாடு என்று பெயர் வந்ததாமே? இது உண்மையா? (ஆதாரம் 3ஆம் வகுப்பு சமூகவியல் பாடம் பக்கம் 122 – முதல் பதிப்பு 2011, தமிழ்நாடு அரசு) – ஜி.ஷைலஜா, புனே
பதில் : கற்பனையானது இது! இந்தியா முழுவதும் எக்காலத்திலும் ஒரே அரசர் ஆண்டதாக வரலாறு கிடையாது!