மூடநம்பிக்கை யாளர்கள் தங்களது வணிகத்தைப் புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். நமது உண்மையின் பெரம்பலூர் வாசகர் ஒருவர் ஒரு துண்டறிக்கையை அனுப்பியுள்ளார். அது ஸ்ரீ வீரகாளி யம்மன் அற்புத மகிமை பற்றி பேசுகிறது. இது பழைய கள் புதிய மொந்தை அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன் இதே வாசகங்களோடு திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி மகிமை என்ற துண்டறிக்கைகள் வரும்.அதே வார்த்தைகளை அப்படியே மாற்றி ஸ்ரீ வீரகாளியம்மன் என அச்சடிக்கப் படுள்ளது. இந்த துண்டறிக்கைகள் பெரும்பாலும் ஆடி, மார்கழி மாதங்களில் தான் விநியோகிக்கப்படும்.ஏன் தெரியுமா? அந்த மாதங்களில் தான் அச்சகம் நடத்துவோருக்கு தொழில் விறுவிறுப்பாக இருக்காது.ஏனென்றால் அந்த மாதங்களில் திருமணங்கள் இல்லை எனவே பத்திரிகை அச்சிடுவோர் வரமாட்டார்கள்.அச்சகம் சும்மா இருக்கும். இதற்காகத் தோன்றிய ஒரு வியாபார உத்திதான் இது.அச்சகக்காரர்களே வெவ்வேறு பெயர்களில் இப்படி அடித்து ஊரில் விநியோகித்து விடுவார்கள்.ஆயிரம் துண்டறிக் கையில் ஒரு 10 பேராவது இதனை நம்பாமல் இருந்துவிடுவார்களா என்ன. ஜோதிடத்திலும், பூஜைகளிலும் மூழ்கியுள்ளோர் நிச்சயம் அச்சகக்காரர்களை வாழவைத்து விடுவார்கள். இந்தத் துண்டறிக்கைகள் காலத்திற் கேற்ப மாறி மின்னஞ்சலிலும் வருகிறது தெரியுமா?நாய் விற்ற குரைக்காது அல்லவா? மூடநம்பிக்கை விற்ற காசு செரிக்காமலா போய்விடும். இந்த ஊரில் அநேகமாக வீரமாகாளியம்மன் கோவிலுக்கு பெரிய வருமானம் இல்லாமல் இருக்கவேண்டும். அதற்கு ஒரு மவுசு ஏற்படத்தான் இப்படிச் செய்திருப்பார்கள். கொஞ்சம் தோண்டித்துருவி துண்டறிக்கை தந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்தால் உண்மை தெரிந்துவிடும்.
அப்புறம் ஒரு செய்தி. இந்த பதிலை எழுதும் நபர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலபதி மகிமையைக் கிழித்து சூறை விட்டவர்தான்.
– அன்பன்