சங்ககாலப் பாடல்களிலும் ஆரியக் கோட்பாடுகள்

மார்ச் 16-31

– முனைவர் இரா.மணியன்

கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாத தமிழ் மக்களிடையே கடவுள் பற்றிய கருத்துகளை அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் விதைத்து விட்டனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலப் பாடல்கள் சிலவற்றுள் ஆரியக் கோட்பாடுகளைச் செய்திகளாகவோ, அவற்றை விளக்கும் உவமைகளாகவோ புலவர்கள் சிலர் கையாண்டுள்ளனர்.

ஆரியர்கள் தமிழ் மக்களிடையே ஊடுருவி தங்களின் கோட்பாடுகளைத் திணித்து, தமிழர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணத்தைப் பரப்பி விட்டார்கள். அவர்களை நம்பிய புலவர்கள் சிலர், தாம் பாடிய பாடல்களில் ஆரியக் கோட்பாடுகளான தெய்வம் முதலியவற்றைக் கூறியுள்ளனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல செய்திகளை சங்ககாலப் பாடல்களிலும் காண முடிகிறது.

ஒரு நூலுக்குக் கடவுள் வாழ்த்து கூறப்பெற வேண்டும் என்ற எண்ணமே ஆரியர்களின் கோட்பாடுகளால் உண்டானது என்றே கூறவேண்டும். தொல்காப்பியம் என்ற தமிழர்களின் வாழ்வியல் இலக்கண நூலுக்கே கடவுள் வாழ்த்து இல்லாதிருத்தலை நோக்க வேண்டும்.

கடவுள் வாழ்த்து என்பது கூறப்படாவிடினும் தொல்காப்பியத்துள்ளும் ஆரியக் கோட்பாடுகள் புகுந்துவிட்டன. தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவி என்றும், பால்வரை தெய்வம் என்றும், வழிபடு தெய்வம் என்றும், உள்ளுறை தெய்வம் என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது. எனவே, ஆரியக் கோட்பாடுகள் சங்க காலத்துக்கு முன்னமேயே தமிழ்நாட்டில் புகுந்து பகுத்தறிவைச் சீர்குலைத்துவிட்டன எனலாம்.

சங்க நூல்கள் என்று கூறப் பெறும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய எல்லாவற்றிலுமே ஆங்காங்கே ஆரியக் கருத்துகள் காணப்படுகின்றன. திருக்குறளிலும் பல இடங்களில் தெய்வம் பற்றிய கருத்துகள் புகுந்துவிட்டன.

சங்க நூல்களுள் முதலாகக் கூறப் பெறும் நற்றிணை என்ற நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். மாநிலம் சேவடியாக என்று தொடங்கும் அந்தப் பாடல் தீதற விளங்கிய திகிரியோனே என்று முடிகிறது. இறைவனை வேத முதல்வன் என்று குறிப்பிட்டு, அவனுக்கு இவ்வுலகம் பாதமாகவும், கடல் ஆடையாகவும், வானம் உடலாகவும், திசைகள் கைகளாகவும், சூரியனும், சந்திரனும் கண்களாகவும் உள்ளதாகக் கூறுகிறார். இந்தக் கருத்துகள் ஆரியப் பண்பாடு தமிழ்ப் புலவர்களிடத்திலேயும், அந்தக் காலத்திலேயே குடியேறிவிட்டதைப் புலப்படுத்துகிறது. இதற்குச் சான்றாக, நற்றிணைப் பாடல்களுள் ஒன்றை எடுத்துக்காட்டி, பகுத்தறிவு எப்படியெல்லாம் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தலாம்.

நற்றிணையில் ஒன்பதாம் பாடலாக உள்ளதைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் ஆவார். இவர் தமிழ்ப் புலமை மிக்க மன்னராக விளங்கியவர். எனினும், ஆரியக் கருத்தைத் தம் பாடலிலே கூறிய புலவராகிவிட்டார். அழிவில முயலும் ஆர்வ மாக்கள், வழிபடு தெய்வம் கண்கண்டாங்கு என்னும் உவமையைக் கூறி தாம் சொல்ல வேண்டியதை விளக்கியுள்ளார்.

தலைவி, தலைவனை விரும்புகின்றாள் என்ற செய்தியைத் தெரிந்திருந்தும், அவளை அவனுக்கு மணம் செய்துதர அவளுடைய பெற்றோர் விரும்பாதபோது, தலைவியைத் தலைவன், பெற்றோருக்குத் தெரியாமலேயே தன்னூர்க்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்ளும் வழக்கம் அக்காலத்திலும் இருந்தது. இதனை அகநூலார் உடன்போக்கு எனக் குறிப்பிடுவர்.

அவ்வாறு உடன்போக்கு நிகழுமிடத்து தலைவிக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் தலைவன் சில சொற்களைச் சொல்வதுண்டு. அந்நிலையில், தலைவன் கூறுவதுபோலக் கூறியதுதான் மேற்குறித்த வழிபடு தெய்வம் பற்றிய கருத்து. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல என்று இன்றும் பகுத்தறிவு இல்லாத சிலர் கூறுவதுண்டு. இக்கருத்தைத்தான் தலைவன் தலைவிக்குக் கூறுவதாகப் புலவர் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட பாடல்களை இலக்கியங்களாகக் கருதக் கூடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாகும். எனவே, சங்க இலக்கியமாயினும், ஆரியக் கருத்துள்ள பாடல்களை நீக்கியே பயில வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *