தீராத வினை எல்லாம்
தீர்த்திடுவாள் மாதா!
கோவிலைச் சுற்றி
குட்டரோகிகள்!
எச்சில் இலைக்குப்
போராடும் மனிதன்!
படைத்தவன் கடவுள்!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
நரகலிலும் இருக்கலாம்
பார்த்துப் போ
பாவ மன்னிப்புக்காக
ஃபாதர் காத்திருக்கிறார்
பாவைக்காக
இரவும் காத்திருக்கலாம்
கதிரவன் குந்தி
கலவியில் கர்ணன்
புனித ஆவியில் மேரி
பிள்ளைப் பெற்ற அற்புதம்
எந்தக் காலத்திலும் நடக்காது
எல்லா சமயமும்
சொல்லும் கடவுள் ஒன்றே
பள்ளி வாசலில்
இந்து, முஸ்லிம் கலவரம்
சமத்துவ, சன்மார்க்க சங்கம்
கிறித்தவன், முஸ்லிம்
இந்துவைத் தவிர
மற்ற மதத்தினர்
பிரவேசிக்கக் கூடாது.
தூய்மையான, தொழுகைக்கு
ஆடம்பரம் தேவை இல்லை.
அப்படின்னா, ஆண்டவனே தேவை இல்லை!
– அறிவேருழவன், சின்னத்தும்பூர்
ஆண்மைத் தவறேல்
ஆணாதிக்கம் செலுத்துதல்
அழ வைத்துப் பார்த்தல்
கடுஞ் சொல் வீசுதல்
கை நீட்டி அடித்தல்
போகப் பொருளென நினைத்தல்
மோக முள் கொண்டு காமுறுதல்
சந்தேகக் கண் கொண்டு பார்த்தல்
சரிபாதி உரிமம் தர மறுத்தல்
வெட்டி ஆபிஸர்ன்னு பேரெடுத்தல்
குடிப் பழக்கத்திற்கு அடிமையாதல்
குடும்பத்தை நட்டாத்தில் தவிக்க விடுதல்
ஆண்மைக் குறைவுக்கு மருந்தேயில்லை.
பாதாள அறை
அண்டாகா கசம்
அபூகா குகும்
திறந்திடு சீசே
பாமரன் மந்திரம்!
அண்டாகா கசம்
அபூகா குகும்
மூடிடு சீசே
பார்ப்பனிய மந்திரம்!
ஆட்டோ கணேசன், அருப்புக்கோட்டை
வாஸ்து முறையில்
கட்டிய வீடு
ஏலத்திற்கு வந்தது
வங்கிக் கடன்
– அகலவன், சென்னை-112
அரைகுறை ஆடையுடன்…
கோவில்களில்
ஆபாச படம்
அரைகுறை ஆடையுடன்
சிலைகள்…
பொய்யாகிப் போனது…
பொருத்தங்கள்
எட்டும் பொருந்த
மேளங்கள் கொட்டி
அறுசுவையிட்டு
முதியோர்கள் வாழ்த்தி
அமைந்த வாழ்க்கை…
எட்டே மாதத்தில்
அவள் விதவையாக
பொய்யாகிப் போனது
ஜாதகம்…
ஒளிர்கிறது
ஒளிர்கிறது
தமிழகம்
இருட்டிற்குள்…
– அ. குருஷ்ராஜா, இனாம்ரெட்டியபட்டி
முரண்பாடு
இறைவனின் திருவடியே இன்பம்
என இயம்பும் பக்தா
உன் உறவுகள் இறைவனடி சேர்ந்தால்
வருத்தமுடன் அறிவிக்கின்றாயே!
– பா. அசோக், சாத்தூர்
அப்பா…
இன்று
புகைக்காமல்
குடிக்காமல்
அம்மாவை இழுத்துப் போட்டு
அடிக்காமல்
எங்களை மிரட்டாமல்
எல்லோருக்கும் பிடித்த மனிதராக
வெளியேறினார் பிணமாக…
– அய்யாறு ச. புகழேந்தி