காட்சி 19 – அரண்மனையின் ஒரு பகுதி
உறுப்பினர்: தளபதி வெற்றிவீரன், காங்கேயன்.
சூழ்நிலை: தளபதி வருதல், காங்கேயன் எதிர்ப்படுதல்.
காங்: தளபதியாரே!
வெற்றி: யார் நீங்கள்!
காங்: பட்டம் சூட்டு விழாவுக்கு வந்த வெளிநாட்டு மக்களோடு ஆரியர்கள் அனைவரும் மாறுவேடங்களில் வந்துபோய் இருக்கிறோம். தங்கள் வருங்கால மனைவி சித்ரபானு என்னைத் தங்களிடம் அனுப்பினாள்.
வெற்றி: எங்கே அவள்?
காங்: அவள், அரண்மனை அந்தப்புரத்திலே பெண்கள் கூட்டத்திலே கலந்துபோய் இருக்கிறாள். தாங்கள் அவளைச் சந்திக்கக்கூடாது. நாளை மாலையுடன் விரதம் முடிகிறதாம். பிறகு உங்களுக்கும் சித்ரபானுவுக்கும் விவாகம் செய்ய நினைத்திருக்கிறார் அவள் தந்தை.
வெற்றி: அவள் உன்னை ஏன் அனுப்பினாள்?
காங்: இதோ விஷம்! இதைப் பிரகலாதனின் தாய் லீலாவதியிடம் கொடுத்து, பிரகலாதனுக்குத் தரவேண்டுமாம்.
வெற்றி: பிரகலாதன் சாவதில் அவளுக்கு என்ன அக்கறை. அநியாயமாக அவனை ஏன் கொல்ல வேண்டும்?
காங்: தளபதியாரே! இது விஷமல்ல. வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட பாயசம். கருப்பாக இருக்கிறது என நினைக்கிறீரா? இதோ நான் குடிக்கிறேன் பாருங்கள். (குடித்து நாக்கைத் தட்டி) நல்ல சுவை. எங்களுக்கு இரணிய மகாராஜாவையோ, பிரகலாதனையோ கொல்லும் நோக்கம் இல்லவே இல்லை. அவர்கள் மனம் திருந்தி ஆரிய தர்மத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த நாடகம்.
வெற்றி: இது மன்னருக்குச் செய்யும் துரோகமல்லவா?
காங்: இதிலென்ன துரோகம்? கொலையா செய்யச் சொல்றோம். அரசி லீலாவதி இதை விஷம் என்றே நினைக்க வேண்டும். யாரிடமும் சொல்லாதீர். ரகசியம்.
வெற்றி: விஷம் என்றால் பிரகலாதன் குடிப்பானா?
காங்: பிரகலாதனுக்கு சிறீமந் நாராயணன்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆலகால விஷத்தையே கொடுத்தாலும் குடிக்கத் தயங்கமாட்டார். ஏனென்றால், நாராயணன் நிச்சயம் தன்னைக் காப்பார் என்பதில் திடமான நம்பிக்கை.
வெற்றி: அப்படியே செய்கிறேன் ஆரிய சிரேஷ்டரே! (போகின்றனர்)
காட்சி 20 – அரண்மனையின் ஓர்புறம்
உறுப்பினர்: சித்ரபானு, பிரகலாதன்
சூழ்நிலை: இருவரும் சந்திக்கின்றனர்
சித்ரா: கண்ணாளா!
பிரக: நீயா! எப்படி இங்கே?
சித்ர: என் அத்தான் முடிசூட்டு விழாவாயிற்றே! எப்படி வராமல் இருக்கமுடியும்?
பிரக: யாராவது பார்த்துவிட்டால்?
சித்ர: ஆமாம்! ஆலகால விஷத்தை ஆனந்தமாகக் குடித்துவிட்டீர்களாமே. உங்களுக்கு ஒன்றும் ஆகலையே?
பிரக: அடடா! விஷமா அது! தேவாமிர்தம் போலல்லவா இனித்தது.
சித்ர: (வியப்புடன்) என்ன! விஷம்கூட இனிக்குமோ?
பிரக: நாராயணன் நாமம் சாதாரணமானதா? அவ்விஷத்தைக் குடித்த பிறகு நா வலிக்க நாராயணன் நாமத்தைப் பாடிக்கொண்டே இருக்க ஆர்வம் ஏற்படுகிறது.
சித்ர: ஒரு வேண்டுகோள் அத்தான். நீங்கள் அரண்மனையின் நடுமண்டபத்தில் இருக்க வேண்டும். உங்கள் பாதுகாப்புக்காக தளபதியும் வீரர்களும் மண்டபத்தின் அருகில் உள்ள அறைகளில் மறைந்திருப்பார்கள். அங்கே உங்கள் தந்தை கோபத்துடன் உங்களைத் தேடி வரலாம். வரும்போது சிறீமந் நாராயணனைத் திட்டிக் கொண்டே வரலாம். எங்கே நாராயணன் என்று கேட்கலாம். அப்போது அவர் தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார் என்று நீங்கள் சொல்லவேண்டும். எந்தத் தூண் என்று கேட்டால் உங்களுக்கு எதிரேயுள்ள தூணைக் காட்டுங்கள். நிச்சயம் நாராயணன் தோன்றுவார். நல்லுபதேசம் செய்வார். உங்கள் தந்தை, எனது மாமனார் ஆரிய தர்மத்தை ஏற்றுக்கொள்ளுவார். யாவும் சுபமாக முடியும். இதை நானாகச் சொல்லவில்லை, தேவரிஷிகள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியது.
பிரக: அப்படியா? சரி! சரி! யாராவது பார்த்துவிட்டால் அனைத்தும் பாழாய் விடும். போய்விடு.
சித்ர: ஆனாலும் இளவரசர் அதிகம் பயப்படுகிறார்.
பிரக: நான் எனக்காக அஞ்சவில்லை. உன்னை அவர்கள் தெரிந்து கொண்டால் வெளியில் துரத்திவிடுவார்கள். பிறகு நமது திட்டம்?
சித்ர: சரி! வருகிறேன்! நினைவில் இருக்கட்டும்.
காட்சி 21. அரண்மனையில் ஓர்புறம்
உறுப்பினர்: தளபதி வெற்றிவீரன், பிரகலாதன், வீரர்கள் இருவர்.
சூழ்நிலை: தளபதி, பிரகலாதன் சந்தித்து உரையாடுதல். வெற்றி: இளவரசே! உங்கள் உறுதியைப் பாராட்டுகிறேன்.
பிரக: எல்லாம் சிறீமந் நாராயணன் செயல்.
வெற்றி: (கேலியாக) அப்படியா! இருக்கலாம் இருக்கலாம்.
பிரக: என்ன தளபதியாரே! ஆரிய தர்மத்தை நீரும் ஆதரிப்பதாகக் கேள்விப்பட்டேன். ஒரு மாதிரியாகப் பேசுகிறீர்?
வெற்றி: அது வந்து…
வீரன்: (வணங்கி) வணக்கம் இளவரசே! தங்களைத் தங்கள் தந்தையார் அழைத்துவரச் சொன்னார். பிரக: நாராயணன் நாமத்தைத் தவிர என் நா வேறெவர் பெயரையும் உச்சரிக்காதெனச் சொல். போ! (வீரன் போகிறான்)
வெற்றி: இளவரசே! தங்கள் தந்தையின் பிடிவாதம் தெரிந்தும் இப்படிப் பேசுகிறீரே! ஆபத்தில் முடியாதா?
பிரக: அப்பொறுப்புகளை எல்லாம் வல்ல எம்பெருமான் சிறீமந் நாராயணனிடமே விட்டுவிட்டேன். அவர் நன்மையே செய்வார்.
வீரர்கள் இருவர்: இளவரசே! தங்களை இச்சங்கிலியால் பிணைத்து இழுத்து வரச் சொன்னார்.
வெற்றி: வீரர்களே! தளபதி கட்டளையிடுகிறேன்.
வீரர்: என்ன செய்யணும்?
வெற்றி: இளவரசரைச் சங்கிலியால் பிணைத்துக் கட்டினோம். சங்கிலி பொடிப்பொடியாய் விட்டது. அருகில் சென்று கையால் பிடிக்க முன்றோம். ஒரு தீச்சுவாலை அவரை நெருங்க முடியாமல் தகிக்கிறது. அதனால் பயந்து ஓடிவந்து விட்டோம் என்று சொல்லுங்கள். ஓடுங்கள்.
வீரர்: பொய் சொல்லச் சொல்கின்றீர்களே!
தளபதி: பொய்யல்ல! அரசியல் தந்திரம். இளவரசர் நமக்கு வேண்டும். அவரிடம் நயமாகப் பேசி நம் வழிக்கு அவரைக் கொண்டுவர வேண்டும். உங்களுக்கும் உங்கள் கடமையைச் செய்யத் தவறியதாகக் காட்டிக் கொள்ளக்கூடாது.
அதனால்தான் நன்மையை உத்தேசித்து பொய் பேசலாம் என்பது யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை.
வீரர்: அப்படின்னா சரிங்க! (போதல்)
தளபதி: இளவரசே! சற்று நேரத்தில் தங்களைத் தேடிக்கொண்டு மன்னர் கோபத்தோடு வரக்கூடும். நடு மண்டபத்துக்குப் போய் இருங்கள். அதுதான் தங்களுக்குப் பாதுகாப்பான இடம்.
பிரக: சரி! போகிறேன்.
(தொடரும்)