கட்டுரை: ஆசிரியரின் நூல்களிலிருந்து கற்றதும் பெற்றதும்!

2022 கட்டுரைகள் டிசம்பர் 1-15 2022

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்

தமிழினத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள் பன்முகத் திறன் கொண்டவர்! இயக்கத்தின் தலைவர்; இணையில்லா பத்திரிகையாளர்; திறன் படைத்த பேச்சாளர்; தீவிர எழுத்தாளர்; வெல்ல முடியாத வழக்-குரைஞர்; பெரியாரிய சிந்தனையாளர்; சிறந்த கல்வியாளர்; போர்க்குணம் கொண்டவர்; அசராத உழைப்பாளி; உலக சாதனை – விடுதலை ஆசிரியர்; உயர்ந்த சாதனை – பெரியாரின் நம்பிக்கை சீடர்!

ஆசிரியர் இதுவரை ஏறத்தாழ இருநூற்
றைம்பது நூல்களுக்கும் மேலாக எழுதியுள்
ளார். பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் படைத்துள்ளார் . பெரியாரையும் பெரியாரியத்
தையும் நன்கு அறிந்தவர்! அவற்றை தனது படைப்புகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்பவர்!
நமது ஆசிரியர் அய்யா
வின் மேடைப் பேச்சை முதன்முதலாக _ நான் பள்ளி
மாணவனாக மதுரையில் இருந்தபோது, 1970ஆம் ஆண்டு மேங்காட்டுப் பொட்டல் திடலில் (நியூசினிமா அருகே) கேட்கும் வாய்ப்பு அமைந்தது ! ‘ அரசியலமைப்பு சட்டம் ‘ பற்றி சிறப்புரையாற்ற வந்திருந்தார்.
நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் பொதுக்கூட்டம்.. ஆசிரியர் அய்யா தனது உரை
யைத் துவக்கினார்!

அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியான ‘India that is Bharat’ என்று உள்ளதைப் படித்துக் காண்பித்து, அந்த வரியை மட்டும் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினார்! ‘India  Bharat’ வேறு …Bharat’ வேறு என்பதையும், அந்த இந்தியா அனைவருக்குமானது என்றும், இந்த பாரத் மதச் சார்புடையதென்றும் விளக்கிச் சொன்ன மாத்திரத்தில் நான் வியந்து போனேன்!
அந்தத் தருணத்திலிருந்து இன்று வரை அவரது பேச்சுகளை விரும்பிக் கேட்கிறேன்! எழுத்துகளை வியந்து படிக்கிறேன்! அவரின் ஒவ்வொரு நூலிலிருந்தும் எண்ணற்ற தகவல்களைக் கற்றுக் கொள்கிறேன்; பெற்றுக் கொள்கிறேன்!

ஆசிரியர் அய்யா எழுதிய ‘கற்போம் பெரியாரியம்‘ என்னும் நூல் நான் பலருக்கு அன்பளிப்பாக வழங்குகின்ற நூல். அதற்கு முக்கிய காரணம், இதை ஒரு பாடநூல் போலவும் வழிகாட்டி நூலாகவும் படைத்தது தான்! இந்த நூலை எழுதுவதற்கு ஏறக்குறைய 25 நூல்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார்!
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் பெரியார் கொள்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இதன் எதிர்வினையாக இளைஞர்களும் மாணவர்களும் பெரியாரை அறிந்து கொள்ள மிக, மிக ஆவலாக இருக்கின்றார்கள்!
இளைஞர்களில் பலர் இந்துத்துவாவுக்கு எதிராகப் பெரியாரை முன் நிறுத்துகிறார்கள். இதை அவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் நம்மால் அறிய முடிகின்றது.

அந்தத் தோழர்களுக்குத் தோன்றும் நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் தருகின்ற வகையில் இந்த நூலை ஆசிரியர் படைத்துள்ளார். விவரங்கள், புள்ளி விவரங்கள் இப்படி பல ..
அதில் பெரியார் பற்றி ஆசிரியர் தந்த புள்ளி விவரங்கள் நமக்கு வியப்பைத் தரும்.
பெரியார் வாழ்ந்த நாள்கள் 34433; நடத்திய போராட்டங்கள் 15; சிறை சென்ற எண்ணிக்கை 19; சிறையில் இருந்த நாள்கள் 900 என்ற தகவல்களை நாம் அறியும் போது, ஆரிய பார்ப்பனிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து எவ்வளவு நீண்ட நெடிய போராட்டத்தை தனது இறுதி நாள்கள் வரை நடத்தினார் என்பதும் விளங்குகிறது !
ஆசிரியர் இந்த நூலில் பல தகவல்களை நமக்குத் தருகின்றார் . தீண்டாமை ஒழிய வேண்டும் என்று மற்றவர்கள் குரல் கொடுத்த போது, ஜாதி ஒழிய வேண்டும் என்று முழங்கினார் பெரியார் என்ற அரிய தகவலை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளும் போது, தந்தை பெரியாரை தலித்களுக்கு எதிரானவர் போல சித்தரிப்பவர்களுக்கு இந்தச் செய்தியை எப்படியாவது அவர்கள் காதில் விழ வைக்க வேண்டும் என்ற வேகம் வருகிறது!
தந்தை பெரியாரை இதுவரை அறியாத ஒருவன் இந்த நூலைப் படிக்கும் போது, மனிதனுக்கு உயிர் நாடியான தத்துவத்தைச் சொன்னவர் பெரியார், அந்தத் தத்துவம் சுயமரியாதை ‘ என்ற உண்மையை அறியும் போது அவனது கண்கள் திறக்கப்படும்!
அப்படி ஒரு சிறந்த நூலைப் படித்த நிறைவைத் தருகிறது.

கற்போம் பெரியாரியம் எப்போதும் நமது கையில் இருக்க வேண்டிய நூல்!
ஆசிரியர் அய்யாவின் மற்றுமொரு சிறந்த படைப்பாக, ‘ தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்’ என்னும் நூலைச் சொல்வேன். 1926ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை குடிஅரசு, “விடுதலை” இதழ்களில் வெளியான படைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளை ஆசிரியர் தொகுத்தளித்துள்ளார்!
46 ஆண்டுகளில் வெளியான படைப்-புகளிலிருந்து இன்றைய தலைமுறைக்கும் தேவையான கருத்துகளைத் தொகுத்து வழங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல! அதை இந்த நூலில் காணமுடிகிறது!

ஆசிரியர் இந்த நூலில், அவர் இப்போதும் மேடைகளில் அடிக்கடி பயன்படுத்தும், ‘ சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு ‘ என்ற சொற்றொடரைக் குறிப்பிட்டு, ‘ அதன்படி மனித வாழ்வுக்கு இலக்கணம் கற்பித்தவர் பெரியார் ‘ …என்று நமக்கு நினைவூட்டுகிறார்! உண்மைதானே?
மற்றுமொரு சிறப்பான விளக்கம் ஒன்றும் இதில் நமக்குக் கிடைக்கின்றது .

பொது உடைமையா? பொது உரிமையா? எது முதலில் வேண்டும் என்னும் கேள்விக்கு, பொது உடைமை வேறு; பொது உரிமை வேறு! பொது உடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும் எனத் தெளிவு படுத்துகிறார்!
எத்தனையோ நூல்களைத் தேடிப்பிடித்து, படித்துப் பார்த்தாலும் இவ்வளவு எளிதாக இந்த வேற்றுமையை விளக்கி விட முடியாது. ஆசிரியர் நமக்கு எப்போதும் ஆசிரியர் என்று விளங்கும் தருணம் அது!

ஆசிரியர் எழுதி தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல், ‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்.
இந்த நூல் பெரியாரின் வாழ்வில் நடந்த 56 நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு ஆசிரியரால் தொகுக்கப்பட்டது! ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடம்! வாழ்க்கைப் பாடத்தின் நிஜமான படம்!
இந்த நூல், தந்தை பெரியாரின் பல்வேறு குணாதிசயங்களையும் நற்பண்புகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது . அதில் ஒன்று தான் இது. –
“நான் மூட்டை சுமப்பதில் பாரத்தினால் வேண்டுமானால் கஷ்டப்பட்டு இருப்பேனே ஒழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை!” என்று பெரியார் சொன்னதை, தானே நேரில் கேட்டு அறிந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்!
தந்தை பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருக்கிறது இந்த நூல் !
ஆசிரியர் எழுதியவைகளிலேயே அதிக பிரபலமானதும், அதிகப் பதிப்புகளைக் கண்ட நூல், ‘ கீதையின் மறுபக்கம் ‘ ..
ஆரியக் கலாச்சாரத்தையும் கொள்கை- களையும் ஆரியரல்லாத மக்கள் மீது திணிப்-பதற்காக கடவுளின் பேரால், கிருஷ்ணரின் பேரால் மோசடியாக எழுதப்பட்ட நூல் கீதை !கீதை – முப்புரி நூலைப் புனிதமாக்க, புனித நூலாகப் புனையப்பட்ட நூல்! பிராமணர்-களையும் பிராமணியத்தையும் போற்றுபவர்களைப் பாதுகாக்கவும், வர்ணாசிரமத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆரியர்களால் படைக்கப்பட்ட படைப்பு!
எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய நூல் ஒன்றில் இந்த நூலைப் பற்றி அவர் குறிப்பிடும் போது இவ்வாறு எழுதியுள்ளார்’ புனிதமாகப் போற்றிப் புகழப்பட்ட பகவத்கீதையை ஒரு கொலை நூல் என்று நிறுவிக் காட்டியது வியப்பான செயல் அல்லவா!’ என்று ஆசிரியரைப் பாராட்டுகின்றார்.
ஆம்! அது எவ்வளவு பெரிய உண்மை யென்பதை இதை அறியும் போது ஏற்றுக் கொள்வார்கள் – ‘ பகவத்கீதை தான் காந்தியைக் கொலை செய்ய என்னைத் தூண்டியது ‘ என்று நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலமாகத் தந்துள்ளதை அறியும் போது – கீதை கொலை பாதகத்தைச் செய்யத் தூண்டும் நூல் என்பதை ஏற்கத்தானே வேண்டும்?

கீதையின் மறுபக்கம் அப்படியொரு சிறப்புடையது !
கீதை பற்றிய எல்லா மாயைகளையும் புனிதங்களையும், அடித்து நொறுக்கிய ஆசிரியர், தனது முடிவுரையாகச் சொல்வது -பல்வேறு தத்துவங்களையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படும் கீதையில், எந்த ஒரு தத்துவமும் முழுமையாக விளக்கப்படவில்லை! கீதையின் தொடக்கப் பகுதியில் சொல்லப்பட்ட கருத்துகள் பிற்பகுதியில் மறுக்கப்படுகின்றன. வேண்டாதவை என துவக்கத்தில் ஒதுக்கப் பட்டவை பிற்பகுதியில் விதிமுறைகளாகத் தரப்படுகின்றன! ..என்று கீதையின் முரணைப் புரிய வைக்கிறார்!
கீதையை அறிந்து கொள்ள, கீதையின் மறுபக்கத்தைப் படித்தாலே அதன் வண்டவாளம் தெரிந்து விடும்!
அண்மையில் வெளிவந்து பலரால் பாராட்டப்
படும், ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ என்ற ஆசிரியர் எழுதிய நூல் இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான நூல் என்பேன்! ஆர்.எஸ்.எஸ். என்ற தீய சக்தி, தற்போது தேசத்தை ஒரு மலைப் பாம்பைப் போல சுற்றி வளைத்து, சிறுகச் சிறுக இறுக்குவது போல, நாட்டின் எல்லா அமைப்புகளையும் கபளீகரம் செய்து வருகின்றது!

ஆளுநர்கள் முதல் அடி ஆட்கள் வரை போலி முகமூடி அணிந்து தமிழ்நாட்டிற்குச் சேவை செய்வது போல நடித்து ஏமாற்றி ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்கள்!
தங்களது ரகசிய நோக்கத்தை அடைவதற்காக, ஓர் எதிரியை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக, ஹோமர் எழுதிய இதிகாசத்தில் டிராய் கோட்டைக்குள் போர் வீரர்களை ஒளித்து வைத்து உள்ளே செல்லும், பெரிய மரக்குதிரை _ டிரோஜன் குதிரையைப் போல ஏமாற்றிச்
செயலாற்றும் திறன் கொண்டது – ஆர்எஸ்எஸ் என்பதை விவரிக்கும் அருமையான நூல்!
விவேகானந்தரை ஒரு முற்போக்கு இந்துவாகக் காட்டி இளைஞர்களை வளைப்பது; அம்பேத்கரை ஆரத்தழுவி தலித்களை வலையில் சிக்க வைப்பது; சுதேசி என்கிற பெயரில் பனியாக்களின் வியாபாரத்தைப் பெருக்கச் செய்வது; திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி, தமிழர்களை ஏமாற்ற நினைப்பது, இப்படி மாநிலத்திற்கு மாநிலம் தனித்தனியாகச் செயல் திட்டங்களைக் கொண்டு, தங்களது இந்துத்துவா திட்டங்களைச் செயலாற்றுவது …இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையும் திட்டமும் என்பதை மிகச் சிறந்த முறையில் ஆசிரியர் இந்த நூலில் படைத்துள்ளார்!

இவ்வாறு, ஆசிரியர் அய்யாவின் ஒவ்வொரு நூலிலிருந்தும் பல்வேறு பயனுள்ள தகவல்களை நான் கற்றுக் கொள்கிறேன்! அந்தத் தகவல்களை, அரிய கருத்துகளை எல்லோரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்! அதன் காரணமாகவே இது போன்ற பெரியாரிய நூல்களை சமூக வலைதளத்தில் எல்லோரிடமும் கொண்டு செல்ல, நூல் அறிமுகவுரைகளாக – ‘ இது என்னுரை ‘ என்னும் தொடராகப் பகிர்ந்து வருகிறேன் !
ஆசிரியரின் நூல்களிலிருந்து எத்தனையோ தகவல்களை அறிந்து கொண்டேன் !
அவற்றில் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
அனைவரும் அவ்வாறே பெறவேண்டும் என்பதே என் வேட்கை!
நூறாண்டுகள் கடந்தும் வாழ்க ஆசிரியர் பெருமகனார்!