குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை மார்ச் 1 அன்று ஒப்புதல் அளித்தது.
பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மார்ச் 2 அன்று ஆஜராக வந்தபோது, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்கினர். காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தைக் கலைத்தனர்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள் தொடர்பாக விசாரிக்கும் கண்காணிப்பு குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேடி மார்ச் 2 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு குஜராத் அரசு ஒத்துழைப்பு தர வேண்டும், என்றும் இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை 3 மாதத் தில் தாக்கல் செய்யும்,என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
“2 ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதாக அமைந்துள்ளது அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்ச் 2 அன்று மத்திய அரசு கோரியுள்ளது.
தமிழ்நாடு சமையல் எரிவாயு சுமையுந்து சங்கத்தினர் பிப்ரவரி 29 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மார்ச் 8 வரை 9 நாட்கள் கடந்த நிலையிலும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசம், பஞ்சாப்,மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் மார்ச் 6 அன்று வெளியாயின. உ.பி.யில் முலாயம் சிங்கின் சமாஜ் வாதிக் கட்சியும், பஞ்சாப்பில் மீண்டும் அகாலிதள்-பா.ஜ.க கூட்டணியும், மணிப்பூரில் காங்கிரசும், கோவாவில் பா.ஜ.க வும் ஆட்சியைக் கைப்பற்றின. உத்தரகாண்டில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இழுபறி நீடிக்கிறது.
தட்கல் முறையில் விண்ணப்பித்த ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் மார்ச் 5 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசு ஊழியர் மற்றும் பொதுத்துறை பணியாளர்களுக்கு காவல்துறை விசாரணை தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் பழமலை நாதர் கோவிலில் மார்ச் 3 அன்று கைலாய இசைக்கருவிகள் வாசிக்கச் சென்ற சிவனடியார்கள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துரையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி மறுத்திருந்தது.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 8 அன்று தொடங்கின.தமிழகத்தில் 8 இலட்சத்து 22 ஆயிரம் மாணவ,மாணவியர் எழுதுகின்றனர்.