– வீ.குமரேசன்
தந்தை பெரியார் சிந்தனையில் உருவான கருத்துகளும் அவற்றை நடைமுறைப்படுத்த கைக்கொள்ளப்படும் அணுகுமுறைச் சிறப்புகளும் தனித்துவம் கொண்டவை. உலகில் தோன்றிய மற்ற புரட்சியாளர்களிடமிருந்து மாறுபட்டு, பொது வாழ்வில் பங்கேற்று சிந்தித்து, யாரும் தொட்டுப் பார்க்காத, தட்டிக் கேட்காத சமூக அவலங்களை
துணிச்சலாக நேர்கொண்டு வெற்றி கண்டவர் பெரியார். அந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் எனும் நோக்கத்தில் இயக்கம் கண்டு, அதற்குரிய தலைமையினை அடையாளம் காட்டி தனது வாழ்வினையே வரலாறாக விட்டுச் சென்று, வழித்தடம் அமைத்தவர் தந்தை பெரியார்.
பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதன் ஒரு அணுகுமுறையாக அவருக்கு சிலை அமைத்திடும் செயல் தந்தை பெரியாரது காலத்தே தொடங்கியதுதான். தனக்கு சிலை வைப்பதை தானே அனுமதித்தது மேலோட்டப் பார்வையில் சற்று மாறுபட்டுத் தெரியும். தந்தை பெரியாருக்கு சிலை வைத்து மரியாதை செய்வதை விமர்சனம் செய்திடுவர் சிலர். பகுத்தறிவுக் கருத்துகள் பரவுவதற்கு எதிர்ப்பான சக்திகள் சிலை வைப்பதை சுட்டிக்காட்டும் பொழுது, ஆரம்பக்கட்ட சிந்தனையாளர்களுக்கு நியாயம் போலத் தோன்றும்; ஆம்; கிலுகிலுப்பைக்காரன் காட்டும் வித்தையில் மயங்கும் சிறு குழந்தைபோல! ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் தந்தை பெரியார், தனக்கு சிலை வைப்பதை அனுமதித்ததன் மேன்மை – அதன் தொலைநோக்குப் பார்வை – எதிர்காலத் தலைமுறையினருக்கான செய்தியாகப் புலப்படும்.
தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது எதற்கு?
தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக் கொள்கையினை _ சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும் என்று கூறி சிலை வைத்திட அனுமதி அளித்தார்.
பொது வாழ்வில் பங்கேற்ற பலருக்கும் சிலை வைத்திடும் பொழுது அவரது பெயர் மற்றும் வாழ்ந்த நாள் பற்றிய குறிப்புகளுடன் சிலை நிறுவிடுவர். ஆனால் தந்தை பெரியாருக்கு எத்தனை சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவரது பகுத்தறிவுக் கருத்துகளும் அவைகளில் பொறிக்கப்படுகின்றன. பரந்துபட்ட, நிலைத்திடும் கருத்துப் பரவலுக்கு உரிய அணுகுமுறையின் முழுமையான அடையாளமே தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிடுவது. இதில் வழிபாடு கிடையாது. பகுத்தறிவுக் கருத்துப்பரவல்தான் சிலை வைத்திடுவதன் முழுப் பரிமாணமாகும்.
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயக்கம் பெரியார் இயக்கம். சோதனைகளையே சாதனையாக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றது பெரியார் இயக்கம். தந்தை பெரியார் வாழ்ந்த பொழுது, ஒரு சமயம் சுற்றுப் பயணத்தில் அவரது எதிரிகள் அவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் அவரை நோக்கி செருப்பு வீசினர். வீசப்பட்ட ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் பெரியாரது வாகனத்தில் வந்து விழுந்தது. பயணப்போக்கில் சற்று தூரம் வந்துவிட்ட பெரியார், வாகனத்தை திருப்பச்சொல்லி, செருப்பு வீசப்பட்ட இடத்திற்கு வந்தார். வீசப்பட்ட செருப்பு ஜோடிகளில் மற்றொன்றையும் எடுத்துக் கொண்டு, வீசப்பட்ட செருப்புகளின் பயன்பாட்டையும் ( ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இருப்பதால் யாருக்கும் பயனில்லை; வீசப்பட்ட மற்றொரு செருப்பும் இருந்தால் நன்றாகப் பயன்படுமே!) வெளிப்படுத்தி எதிரிகளை நாணம் அடையச் செய்து, அவர்தம் செயலினை முறியடித்தார். பின்னர், எந்த இடத்தில் செருப்பு வீசி பெரியாரை அவமானப்படுத்திட நினைத்தார்களோ அந்த இடத்திலேயே அவருக்கு சிலை வைத்து வந்த எதிர்ப்பினையும், பெரியார் தொண்டர்கள் கருத்துப் பிரச்சார வாய்ப்பாக மாற்றினர். செருப்பொன்று விழுந்தால் சிலையொன்று முளைக்கும் எனும் அந்த நிகழ்வின் கவித்துவ வரிகள் – பெரியார் இயக்க கருத்துப் பரப்பல் அணுகுமுறையின் கட்சிதமான கட்டமைப்புகள்!
விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திட எடுக்கப்பட்ட முயற்சி
தந்தை பெரியாரது கருத்துப் பரவலின் நீட்சியாக அண்மையில் ஆந்திர மாநிலம் – விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியாரது சிலை முளைத்தது. ஆந்திர மாநிலத்தில் முளைத் திட்ட தந்தை பெரியாரின் முதல் சிலையினை அவரது கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தது பெரியாரின் கருத்துப் பரவல் பயணத்தின் ஒரு சாதனைக் கட்டமாகும்; சனாதனக் கூட்டத்திற்கோ வேதனைக் கட்டமாகும்.
ஆந்திர மாநிலத்தில், பாரதிய நாஸ்திக சமாஜம் (Atheist Society of India) எனும் பகுத்தறிவாளர் அமைப்பு டாக்டர் ஜெயகோபால் அவர்களின் சீரிய தலைமையில் செயல்பட்டு வருகிறது. தங்களது அமைப்பின் தோழர்களும் கருப்பு உடை அணிந்திட அனுமதிக்க வேண்டும் என தமிழர் தலைவரை டாக்டர் ஜெயகோபால் அணுகிய வேளையில், பகுத்தறிவுக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளும் எவரும், தந்தை பெரியாரின் கருத்துகளை கடைப்பிடிக்கும் அனைவரும் கருப்பு உடை அணியலாம்; இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என தமிழர் தலைவரும் கருத்து தெரிவித்தார். தமிழ்நாட்டு கருஞ்சட்டைப் பட்டாளத்துடன் கொள்கை உறவு கொண்ட அமைப்பு பாரதிய நாஸ்திக சமாஜம் ஆகும். அந்த அமைப்பு அதன் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தலைமையில் முயற்சி எடுத்து பகுத்தறிவாளர்களை, சமூக நீதி உணர்வாளர்களை ஒருங்கிணைத்து பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆசய சாதன சங்கம் (பெரியார் ஈ.வெ.ராமசாமி லட்சிய சாதனைக் கழகம்) எனும் சிலை அமைப்புக் குழுவினை அமைத்து தந்தை பெரியாருக்கு சிலை அமைத்திட முடிவெடுத்தனர்.
பெரியாருக்கு சிலை அமைத்திட்ட இடம்
விசாகப்பட்டின மாநகர கடற்கரை நீளமானது. ஆந்திர மாநிலத் தலைவர்கள் மற்றும் அனைத்திந்திய தலைவர்களின் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை சாலை அது. அந்தச் சாலையில் பார்வையாளர்கள், பாதையில் பயணிக்கும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்திடும் வரிசையில் நூற்றாண்டைக் கடந்த சமூகப் புரட்சியாளர் பெரியாருக்கு சிலை வைத்திட, உரிய சாலைச் சந்திப்பினை தெரிவு செய்து அதற்கு அனுமதி பெற விசாகப்பட்டின மாநகராட்சி மன்றத்தினை நாடினர். மறுப்பின்றி அனுமதி பெற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மாநகரத் தலைவர், மன்றப் பொறுப்பாளர்கள் என அனைவரது ஆதரவினையும் சிலை அமைப்புக் குழுவினர் பெற்றனர். வெண்கலத்தில் கம்பீரமாக நிற்கும் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை அமைத்திட்ட வேளையில் மாநகராட்சி மன்றம் கலைக்கப்பட்டு, தனி அலுவலரின் நேரடி அதிகார வரம்பு நடைமுறை ஆகியது. அதிகார வர்க்கத்தினர் உருவாக்கிட்ட நடைமுறை சிக்கலை, இன்னலைக் களைந்து சிலை திறப்பது முடிவாகியது. ஆந்திர மாநிலத்தில் தந்தை பெரியாருக்கு, எழுப்பப்படும் முதல் சிலை விசாகபட்டினத்தில்தான். அந்த சிலையினைத் திறப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர், தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களே எனக்கருதி அவரை அழைத்தனர். பெரியாரை உலக மயப்படுத்தும் பணியினை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள தமிழர் தலைவரும், சிலை அமைப்புக் குழுவினர் முடிவு செய்த பிப்ரவரி 4ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒப்புதல் அளித்தார்.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
பிப்ரவரி 4ஆம் நாள் காலை 8 மணி அளவில் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தமிழர் தலைவர் வந்திறங்கினார். 200க்கும் மேற்பட்ட பாரதிய நாஸ்திக சமாஜத்தின் கருஞ்சட்டை இளம் தோழர்கள் மற்றும் சிலை அமைப்புக் குழுவின் பொறுப்பாளர்கள், டாக்டர் ஜெயகோபால் தலைமையில் அவர்களது அமைப்பின் கருப்பு சிவப்புக் கொடியினை பிடித்த வண்ணம் காத்திருந்தனர். விமான நிலைய வாசலை விட்டு வெளியே தமிழர் தலைவர் வந்ததும் தந்தை பெரியார் வாழ்க! தலைவர் வீரமணிகாரு வாழ்க! என விண்ணதிர ஒலி முழக்கங்கள் எழுப்பிய பொழுது விமான நிலையத்தின் ஒட்டுமொத்தப்பார்வை, தமிழர் தலைவரை வரவேற்ற பக்கம் திரும்பியது. பகுத்தறிவாளர் கொடி பறக்குது பார்! மனுதர்மத்தை மண்ணில் புதைத்த தந்தை பெரியாரின் கொள்கைக் கொடி பறக்குது பார்! எனும் பொருள்படும் தெலுங்கு மொழிப்பாடலை பறை இசை ஒலியுடன் பாடிய வண்ணம் ஊர்வலகமாக அழைத்துச் சென்றனர்.
வரும் வழியெல்லாம் தமிழர் தலைவரை வரவேற்று வண்ணப் பதாகைகள் சால ஓரத்தில் நிறுத்தப்பட்ட காட்சிச் சூழல், வந்த இடம் ஆந்திர மாநிலமா, தமிழ்நாடா என வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு பகுத்தறிவுப் பிரச்சார வீச்சு நிலவியது – தந்தை பெரியார் கொள்கை வென்று வருகிறது என்பதன் அடையாளமாகவே அந்தச் சூழல் இருந்தது.
செய்தியாளர் சந்திப்பு
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு சிலை அமைந்த இடத்திற்கு அருகில் ஒய்.எம்.சி.ஏ. அமைப்பினரின் இளைஞர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்கில, தெலுங்கு பத்திரிகையின் செய்தியாளர்கள், தொலைக்காட்சிக் குழுவினர் பலரும் வருகை தந்திருந்தனர். பல்வேறு கேள்விகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்த பின் ஒரு ஆங்கில நாளிதழின் செய்தியாளர், வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றால் ஜாதிய உணர்வு கூடுதலாகிக் கொண்டு வருகிறதே ஜாதியை ஒழிப்பதாகக் கூறும் பெரியார் இயக்கத்திற்கு இத்தகைய போக்கு முரணாக உள்ளதே! என வினா எழுப்பினார்.
வகுப்புரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றால் ஜாதிய உணர்வு (caste consciousness) அதிகமாக வில்லை. ஜாதியக் கண்ணோட்டம் (caste awareness) உள்ளது. எந்த ஜாதிய அடிப்படையில் மக்கள் அடக்கப்பட்டார்களோ அந்த ஜாதிய அடிப்படையில் முன்னேற்றம் காண முயல்வதே வகுப்புவாரித் தத்துவமாகும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். உடலில் கிருமியால் வரும் நோயினைத் தடுத்திட, கிருமியையே தடுப்பு மருந்தாகச் செலுத்துவதைப் போல நீங்கள் கருதுவது போல ஜாதிய உணர்வு இருந்த காலத்தில் தீண்டத் தகாதவர் (untouchables) பார்க்கக்கூடாதவர் (unseeables) எனும் நிலைகள் நிலவின. இன்று பார்க்கக் கூடாதவர் என்ற நிலை கிடையாது. தீண்டத்தகாதவர் எனும் நிலை சட்ட ரீதியில் கிடையாது. ஜாதிய உணர்வு இன்றும் நீடித்து இருந்தால் நீங்களும் நானும் அமர்ந்து இப்படி பேசிட முடியாதே. ஜாதிய உணர்வு என்பது வேறு. ஜாதியக் கண்ணோட்டம் என்பது வேறு. இடஒதுக்கீடு அனைத்து தளத்திலும் முழுமையாகி சமத்துவம் வரும் நிலையில் ஜாதியக் கண்ணோட்டமும் தேவையில்லாமல் போய்விடும்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அளித்த பதிலுரையைக் கேட்டபின்பு செய்தியாளர் மறுகேள்வி கேட்கும் நிலை எழவில்லை. சன் குழுமத்தைச் சார்ந்த ஜெமினி டி.வி.க்கு தமிழில் செவ்வி அளித்தார் தமிழர் தலைவர். தந்தை பெரியார் சிலை அமைப்புப் பின்னணி பற்றி, எடுத்துக்கூறி, சிலை அமைப்பினரையும் பாராட்டி நிறைவாக தந்தை பெரியார் இங்கு சிலையாக நிற்கவில்லை; கொள்கைச் சீலமாக நிற்கிறார் எனப் பொருத்தமாகக் கூறி செய்தியாளர் சந்திப்பினை நிறைவு செய்தார்.
சிலை திறப்பு விழா
சரியாக நண்பகலுக்கு மேல் 1 மணி அளவில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார். தங்களது நீண்ட நாள் கனவான – தந்தை பெரியாருக்கு விசாகப்பட்டினத்தில் சிலை எழுப்புவது – இன்று நனவானது என அவர் மகிழ்ச்சி பொங்க உணர்ச்சிப்பேருரை ஆற்றினார். தந்தை பெரியாருக்கு ஆந்திராவில் சிலை திறப்பது ஒரு துவக்கமே. தொடர்ந்து பல இடங்களில் பெரியாருக்கு சிலை எழுப்பப்படும். அதற்கு பாரதிய நாஸ்திக சமாஜம் முழுமுயற்சி எடுத்திடும் எனக் கூறி, வருகை தந்தோரை வரவேற்றார். தந்தை பெரியார் சிலையினை தமிழர் தலைவர் கி.வீரமணி மக்களின் மகிழ்ச்சி வெள்ளம், கரவொலிக்கிடையில் திறந்து வைத்தார். ஆந்திர மாநில அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பஸ்புலேட்டி பால ராஜு, மக்கள் நலவாழ்வுக் கல்வி அமைச்சர் கொண்ட்ரூ முரளி மோகன் இருவரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் இணைந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விதம்; சிலை திறப்பு பகுத்தறிவாளர், சமூகநீதிப்பற்றாளர் தொடர்பான நிகழ்வு என்பதைவிட மாநில மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு அங்கீகார விழாவாகக் காட்சி அளித்தது. தமிழர் தலைவர், அமைச்சர் பெருமக்கள் ஆகியோரைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிலைதிறப்பு நிகழ்வினை அடுத்து பாரதிய நாஸ்திக சமாஜம் பிரசுரித்த பெரியாரின் புரட்சி எனும் தெலுங்கு மொழிப்புத்தகமும், மனிதவள மேம்பாட்டு திங்கள் நாள்காட்டியும், அமைச்சர் பெருமக்களால் வெளியிடப்பட்டன.
தமிழர் தலைவர் உரை
சிலையினை திறந்து வைத்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் அய்யாவின் கருத்துகளை அழகாக, எளிமையான ஆங்கிலத்தில் பேசினார். அந்நாளில் ஆந்திரத்தை உள்ளடக்கிய சென்னை இராஜதானியினை ஆண்ட நீதிக்கட்சி, நடைமுறைக்கு கொண்டு வந்த – ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கான, வாழ்வு மேம்பாட்டிற்கான, சமத்துவ நிலையினை எட்டுவதற்கான முற்போக்குச்சட்டங்கள் குறித்து,- அதன் தலைவர்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் முதல்வராக அரும்பணி ஆற்றிய இராமராய நிங்கர் எனும் பனகல் அரசர் பற்றிக் குறிப்பிட்டார். அண்ணல் அம்பேத்கருக்கு உந்து நிகழ்வாக அமைந்திட்ட, மனித உரிமை காத்திட பெரியார் முன் நின்று நடத்திய வைக்கம் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டார். திராவிட இயக்க நூற்றாண்டின் மாண்பினையும் எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் சிலைதிறப்பு நிகழ்வு பகுத்தறிவு கொள்கை பரப்பலில் ஒரு புது அத்தியாம் எனக் கூறி நிறைவு செய்தார்.
அமைச்சர் பெருமக்களின் உரை
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பேச்சினை, உன்னிப்பாக அமைச்சர் பெருமக்கள் கவனித்தனர். காங்கிரசு கட்சியைச் சார்ந்த அமைச்சர்களாக இருந்தும், காங்கிரசு இயக்கத்தின் பழைய வரலாற்றுக் குறிப்புகளை – குறிப்பாக காந்தியார் காலத்துச் செய்திகளை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டபொழுது வியப்படைந்தனர். தாங்கள் உரையாற்றும்பொழுது தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையின் மூலம் புத்துணர்ச்சி பெற்றோம். புதுப்புதுச் செய்திகளை தெரிந்துகொண்டோம். அவர் கூறிய, தங்களது அமைச்சர் பணித்துறை சார்ந்த வரலாற்றுச் செய்திகள் தங்களது பணிக்கு செழுமை ஊட்டும் என வெளிப்படையாகத் தெரிவித்தனர். தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் மூலம் அடித்தட்டு மக்கள் மேம்பாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டறத்தை மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி தெரிவித்துப் பேசினர். அமைச்சர்கள் உரையாற்றிய விதம் போலவே,தமிழர் தலைவரின் உரையினை செவிமடுத்த அனைவரும், நிகழ்ச்சி முடிந்தபின்னர், தமது மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்தினர். மனிதநேய அமைப்பான பெரியார் இயக்கத்திற்கு மாநில எல்லைகள் பொருட்டல்ல; நாட்டு எல்லைகளும் பொருட்டல்ல; பேசுகின்ற மொழியும் இடைஞ்சல் அல்ல; மனிதநேயப் போற்றுதலே அடிப்படை என்ற அளவில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மாட்சிப் பெருமையுடன் நடைபெற்றது.
அண்டை மாநிலத்தில் தோன்றி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து சமுதாயப்பணி ஆற்றிய தலைவருக்கு, ஆந்திர மாநிலத்தில் மாநகராட்சிப் பகுதியில் முக்கிய இடத்தில் அனுமதி பெற்று, பல்வேறு பகுத்தறிவாளர் அமைப்பினர், சமூகநீதிப்பற்றாளர்கள் பொதுநல உணர்வாளர்கள், என அனைத்துத்தரப்பு மக்கள் ஆதரவுடன் சிலையினை நிறுவி, மாநில அரசின் அமைச்சர்கள் பங்கேற்புடன், அந்த தலைவர் உருவாக்கிய இயக்கத்தின் இன்றைய தலைவரை அழைத்து சிலை திறப்பு விழாவினை நடத்துவது என்பது அரிது. அனைத்து ஈடுபாட்டிற்கும் முக்கியக் காரணம் பகுத்தறிவாளர் அமைப்பினர் மற்றும் சிலை அமைப்புக்குழுவினரின் கொள்கை உணர்வே. எடுத்துக்கொண்ட பணியினை செய்துமுடிக்கும் ஆற்றல்மிக்க அந்த கொள்கைக்குணாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்! அமைப்பு ரீதியாக இணைந்து பணியாற்றும் களப்பணியில், தந்தை பெரியாரின் மனிதநேய பகுத்தறிவுக் கருத்துகள் ஆந்திர மாநிலத்தில் மேலும் பரவிடும் என்பது உறுதி.