கல்வித் துறையைக் கேள்வி கேட்கும் வெள்ளித்திரை

மார்ச் 01-15

– சமா.இளவரசன்

1960களில் நடக்கிறது வாகை சூடவா கதை. புதுக்கோட்டை (இன்றைய) மாவட்டப் பகுதியில் கல்வியறிவற்ற, செங்கல் சூளைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர வரும் சேவா சங்க ஆசிரியராக  கதாநாயகன், பள்ளிக்கூடம் வர மறுக்கும் பிள்ளைகளுக்கும், அவசியமில்லாதது என்று கருதும் பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியத்தைப் புரியவைத்து, அவர்களைக் கொத்தடிமைத் தனத்திலிருந்து மீண்டெழச் செய்வதுதான் கதையின் மயயக்கரு.

அத்தனைக் காலமும் தாங்கள் ஏமாற்றப்பட்டு, சுரண்டப்படுகிறோம் என்று தெரிய வரும்போது, இந்தப் புள்ளைக்கு எதையாவது சொல்லிக் கொடுய்யா என்று தாய் தன் மகளை இழுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கையளிக்கிறாள். அந்தப் பிஞ்சுகள் ஈரமண்ணைக் குழைத்து ஆனா… ஆவன்னா… இனா என்று எழுதிப் பார்க்கும்போது நம் கண்கள் குளமாகி, உடல் புல்லரிப்பதைத் தடுக்க முடியாது. பாவலர் அறிவுமதியின் வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் நம் உணர்வை ஒரு படி தூக்கிச் செல்லும்.

அய்யனாரு சாமி… அழுது… பார்த்தோம்.

சொரணைகெட்ட சாமி சோத்தைத்தானே கேட்போம் என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் உரக்கக் கேட்கும் கேள்விக்கு சாமிகள் வந்து பதில் சொன்னதில்லை. களவாணி படத்தின் மூலம் நிகழ்காலத் தஞ்சை மண்ணைப் பதிவுசெய்த இயக்குநர் சற்குணம் இயக்கிய வாகை சூட வா பிரச்சாரமாக அல்லாமல் கல்வியின் அவசியத்தைக் கலை நேர்த்தியோடு வலியுறுத்திய படைப்பு!

சிறுவர், சிறுமிகளின் வாழ்க்கையை அதே தளத்தில் பதிவு செய்யும் சினிமாக்கள் உலகம் முழுக்க இருக்கையில், தமிழ்ச் சினிமாவின் வணிகத் தளத்தில் இல்லாமல் இருந்த சிறுவர் சினிமா என்ற வகையை தன் பசங்க மூலம் கொண்டு வந்தவர் இயக்குநர் பசங்க பாண்டிராஜ். அவரது அண்மைப் படமான மெரினா பிழைப்புத் தேடி கடற்கரைக்கு வரும் சிறுவர்களைப் பற்றிப் பேசுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  எத்தனையோ பிரச்சினைகளின் காரணமாக சென்னைக்கு வரும் சிறுவர்கள் பிச்சையெடுத்தோ, வேலை செய்தோ பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் இடம் மெரினா கடற்கரை. படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வந்துவிடும் அச்சிறுவர்களுக்குக் கல்வியின் சிறப்பைச் சொல்லி அழைக்கிறது. வெகு இயல்பாக சிறுவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்வதில் வல்லவரான இயக்குநர், கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆவணப்படமாகி இருக்கும் வாய்ப்புள்ள கதைக்கருவை லாவகமாகக் கையாண்டுள்ளார்.

வீட்டில் கன்னம் வைத்துத் திருடியும், கொள்ளையடித்தும் சம்பாதிப்பதைவிட, மிக விரைவாக, காவல்துறை பிரச்சினை இல்லாமல் சம்பாதிக்க ஏற்ற வழி தனியார் பள்ளிதான் என்று காண்கிறான் உடும்பன். தன் பரம்பரைத் தொழிலான திருட்டின் மூலம் சேர்த்து வைத்த தொகையைத் திரட்டி சி.பி.எஸ்.சி. பள்ளி ஆரம்பிக்கும் உடும்பன், ஆறு மாதம் சிறை சென்று திரும்புவதற்குள் பன்மடங்கு வளர்ச்சியடைந்து விட்ட தன் கல்வி நிறுவனத்தையும், கல்வித் தந்தையாகிவிட்ட தன் கொலைகார அண்ணனையும் பார்க்கிறான். எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்கே பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்கும் கல்வி நிறுவனங்களை எள்ளல், சாடலோடு படம் பிடிக்கிறார் உடும்பன் இயக்குநர் ராம்ஜி எஸ்.பாலன்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் 3 இடியட்ஸ். ரேஸ் குதிரையைப் போல மாணவர்களை இன்றைய போட்டி உலகிற்குத் தயார் செய்யும் கல்வி முறையைக் கடுமையாகச் சாடிய படம் இது. கற்றல் குறைபாடு உள்ள டிஸ்லெக்கியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய தாரே சமீன்பர் படத்தை எடுத்த அமீர்கான் நடித்திருந்தார். புதிய முயற்சிகளையும், சிந்தனைகளையும் வளர்க்காமல், ஊக்குவிக்காமல், புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் பாடல்களை மட்டும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நபர்களைப் பெரிய அறிவாளிகளாகக் காட்டும் போக்கை இப்படம் தோலுரித்துக் காட்டியது.

தமிழில் இப்படத்தை நண்பன் என்ற பெயரில் உருவாக்கினார் இயக்குநர் ஷங்கர். இதுவரை அவர் எடுத்த படங்களைவிட இப்படத்திற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம். பேசாமல் நல்ல கதைகளை வாங்கிப் படமாக்கும் இம்முயற்சியை அவர் தொடரலாம். சிறந்த படைப்பாற்றலுடனும் பெரும் விளம்பரத்துடனும் வெளிவரும் அவர் படங்களில் நல்ல கருத்துகள் இடம்பெறும் வாய்ப்பாவது இருக்கும். தன் பழைய படத்தில் பாரி மகளிர் பெயரைக் கிண்டல் செய்திருந்த இயக்குநர் ஷங்கர், இப்படத்தில் பாரி என்ற பெயரைக் கிண்டல் செய்யவே, அதற்கு எதிர்ப்பு எழுந்தது தனிக்கதை. ஆனால் அதைத்தாண்டிப் பாராட்ட வைப்பது 3 இடியட்ஸ் கதைதான்.

தனக்கு விருப்பமான காட்டு வாழ்க்கை ஒளிப்படக் கலையை (Wild Life Photography) விட்டுவிட்டு, பிறக்கும்போதே எனக்கொரு இஞ்சினியர் பிறந்துட்டான் என்ற நோக்கோடு குழந்தையைப் பார்த்த தன் அப்பாவின் ஆசைக்காக பொறியியல் படிக்கும்  இளைஞன்; வறுமையில் இருக்கும் தன் குடும்பத்தைக் காப்பது மட்டுமே நோக்கம் என்று படிக்க வந்து, தன் மேல் நம்பிக்கை துளியுமில்லாமல் விடிந்தெழுந்ததும் கடவுளையும், கை நிறைய மந்திரித்த கயிறுகளையும் கட்டிக் கொண்டு அலையும் இளைஞன்; ஞான சூனிய சூரணம் சாப்பிட்டபடி புத்தகத்திலிருப்பதை அப்படியே மனப்பாடம் செய்யும் இளைஞன். அப்படிப்பட்ட கல்விமுறைதான் சிறந்தது, போட்டி உலகிற்குத் தயாராவதுதான் வாழ்க்கை என்ற பார்வையுடனே தன் வாழ்க்கையைக் கழித்துவிட்ட ஒரு பேராசிரியர், இவர்களோடு, ராஜபரம்பரை வாரிசு ஒருவருக்காக டூப் போட்டுப் படிக்க வந்திருக்கும் இளைஞன் – இவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டதுதான் இப்படத்தின் கதை.

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தாமல் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழலச் சொல்லும் கல்லூரிச் சூழலில், பேராசிரியர்களின் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை உழவனின் மகன் கதாபாத்திரம் – இன்று அய்.அய்.டி.களில் தற்கொலை செய்து மரிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வெளிப்பாடு. இந்தப் படத்தையொட்டி எழுந்த பெயர்ப் பிரச்சினைக்குத் தான் பொறுப்பல்ல, உரையாடல் ஆசிரியரைக் கேளுங்கள் என்று தட்டிக்கழித்த ஷங்கர், படத்தின் கதைக்கான பாராட்டைத் தனக்கானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றாலும்கூட, இக்கதையைப் படமாக்க விரும்பியதற்கு அவருக்கு நம் பாராட்டைத் தெரிவிப்போம்.

கிட்டத்தட்ட இதே விசயத்தை இன்னும் இளம் வயது மாணவனை வைத்துச் சொல்கிறது தோனி. நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழில் இயக்கியிருக்கும் இப்படமும் தழுவல் படம்தான். மராத்தியில் மகேஷ் மஞ்சரேஜ்கர் இயக்கிய ஷிக்சனாச்சா ஆய்க்சாகோ என்பது மூலப்படம். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் சிறுவனுக்கும், படித்துப் பட்டம் பெற்று கைநிறைய  சம்பாதிப்பவனாகத் தன் மகன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்க மனநிலை உடைய தந்தைக்கும் இடையிலான கதைதான் தோனி. இன்றைய கல்விமுறையை உருவாக்கும் உளவியல் நெருக்கடியைக் குறித்தும் இப்படம் பேசுகிறது.

* * *

கடந்த 6 மாத காலத்திற்குள் இப்படி 5 படங்கள் வந்திருப்பது பெரும் ஆச்சரியம்தான். கலவியை விட்டுவிட்டு கல்வியை நோக்கி வந்துள்ள திரைத்துறையினரின் கவனம், ஒரு முக்கியமான அடையாளம். சமூகத்தின் சமகாலப் பிரச்சினையாக திரையுலகமும் படைப்பாளிகளும், பொதுமக்களும் எதைக் கருதுகிறார்களோ, அதுவே அவர்களின் படைப்பாகிறது. இதற்கு முன்பு லஞ்சம், ஊழல், தீவிரவாதம் என்று செக்குமாடு போல சுற்றிக் கொண்டிருந்த திரைக்கதைகள்  இப்போது கல்வியைப் பிரச்சினையாகக் காணத் தொடங்கியிருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது.

அக்னிபாத் படத்தைப் பார்த்துக் கொலை செய்தான் மாணவன் என்று திரைத்துறையை நோக்கிக் கையை நீட்டும் அதே நேரத்தில், கல்வி முறையும், அது ஏற்படுத்தும் மன அழுத்தங்களையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் விட முடியாது. அதை நோக்கித்தான் கேள்விகளை வீசுகின்றன மேற்சொன்ன படங்கள். இதற்கு முன்பும் இதே கருத்தில் படங்கள் வந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் காலத்தின் பிரதிபலிப்புதான் படைப்பிலக்கியம் என்று பார்த்தால் இப்படி வரிசையாக கல்வியை முன்னிறுத்தி படங்கள் வருவதைப் புரிந்துகொள்ள முடியும்.

வெள்ளித்திரை கேள்வி கேட்பதானாலேயே இவைதான் பெரிய பிரச்சினைகள். அவர்கள் கேட்பதெல்லாம் சரியானவை என்று நாம் சொல்லிவிட முடியாது. அதேநேரம் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பதை இன்றைய நடப்புச் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

வெற்றியை நோக்கி ஓடுங்கள் என்று துரத்தப்படும் மாணவ சமுதாயம், வழியில் இடறி விழுவதையும், ஓட்டத்திலிருந்து விலகி விடுவதையும், உளவியல் பாதிப்புக்குள்ளாகி மரணத்தை நோக்கி ஓடிவிடுவதையும் அன்றாடம் பார்க்கிறோம். தற்கொலைகள் மலிந்திருந்த கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே கொள்ளை, கொலைச் சிந்தனை தோன்றியிருப்பதை நாம் பார்க்கிறோம். இது பிரச்சினையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. கோடியில் ஒரு மாணவன் கொலை செய்துவிட்டான் என்று அலட்சியமாக விடமுடியாது. அந்தச் சிந்தனை இன்னும் எத்தனைப் பேரிடம் செயல்வடிவம் பெறாமல் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
தேர்வுக்குப் பயந்து குண்டு புரளியைக் கிளப்பிவிடும் மாணவர்களையும், சுனாமியோ பூகம்பமோ வந்து வீட்டுப் பாடத்திலிருந்து நம்மைக் காப்பாற்றாதா என்ற மனநிலை உடைய பெரும்பான்மையான மாணவர்களையும் நாம் பார்க்கிறோம்.

நம் மாணவ சமூகத்தின் மீது பூகம்பமோ, சுனாமியோ ஏற்படும் முன் எச்சரிக்கை அவசியம்! அதற்கு, தன் பங்குக்கு மணியடித்து எச்சரிக்கும் வெள்ளித்திரைக்கு நம் பாராட்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *