முகப்புக் கட்டுரை: திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்!

2022 நவம்பர் 1-15 2022 முகப்பு கட்டுரை

ஆளுநர் அறியாமை அகலட்டும்!
மஞ்சை வசந்தன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
‘‘தமிழ்நாட்டிற்கு ஆளுநராகப் பொறுப்-பேற்றவுடன் எனக்குத் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழி பெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு அர்த்தங்கள் நிறைந்துள்ளன.
திருக்குறள் நூலைப் பலரும் மொழி-பெயர்ப்பு செய்துள்ளனர். பக்தி தொடங்கி, அய்ந்து புலன்களை அடக்கி ஆளுதல் வரை ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் திருக்குறள் பேசுகிறது. வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகக் கருதப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை.

இந்தப் பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் தொடங்கியது. குறிப்பாக, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதி பகவன் என்றால், முதன்மைக் கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜி.யு.போப், இதற்கான அர்த்தத்தைப் புரிந்திருந்தாலும், ‘முதன்மைக் கடமை’ (றிக்ஷீவீனீணீறீ ஞிutஹ்) என எழுதியுள்ளார்.
திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. இந்தப் புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறி-முறைப் புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த நூலை முழுமையாகப் புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.

இந்தியா வளர்ந்துகொண்டுள்ளது. இந்தியா வரும் 2047 ஆம் ஆண்டு உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளரக் கூடாது. நாடு வளர வளர ஆன்மிகமும் வளர வேண்டும். திருக்குறளுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதனை யாராலும் தடுக்க முடியாது. உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரவேண்டும்.
திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்தேன். ஆனால், திருக்குறளின் உண்மை நிலையை அந்தப் புத்தகங்கள் பேசவில்லை. திருக்குறள் புத்தகத்தை முழுமையாக மொழி பெயர்க்கவேண்டும்’’ என்று கூறினார்.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக் கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அய்ந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார்.

திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: “திருவள்ளுவர் பழங்கால இந்தியத் துறவிகளின் விண்மீன் மண்டலத்தில் ஒரு பிரகாசமான சூரியன்’’ என்று பாராட்டினார்.
அப்போது, “ஆதி பகவன்தான் இந்த உலகத்தைப் படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் கூறுகின்றார். ஆனால், திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிகச் சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது.’’

திருக்குறளில் பக்தி ஆன்மா வேண்டு-மென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப்பின் திருக்குறளில், ஆதி பகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளார்’’ என்று பேசியுள்ளார்.
கனடாவில் பிறந்து கிறிஸ்துவ மிஷனரியாக இந்தியா வந்து 40 ஆண்டுகாலம் தமிழுக்குச் சேவை செய்த பெருமைக்கு உரிய ஜி.யு.போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்தின் மேன்மையை உலக அரங்குக்குக் கொண்டு சென்றவர்.
தமிழுக்குத் தொண்டு செய்த ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பில், பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘‘திருக்குறளில் எந்த இடத்திலும் ‘ஆன்மிகம்‘ என்ற சொல்லோ, ‘கடவுள்’ என்ற சொல்லோ, ‘மதம்’ என்ற சொல்லோ பயன்படுத்தப் படவில்லை.
கடவுள் வாழ்த்து என்று முதல் அதிகாரத்துக்குப் பெயர் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அந்த பத்துக் குறள்களில் எந்த ஓர் இடத்திலும் ‘கடவுள்’ என்ற சொல் கிடையாது.
இந்த நிலையில், திருக்குறள் ஆன்மிக நூல் என்று ஆளுநர் குறிப்பிட்டது எந்த அடிப்படையில்?
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் தன் ‘ஞானகங்கை’ என்ற நூலில் (பஞ்ச் ஆஃப் தாட்ஸ்) திருக்குறள்பற்றிக் கூறும்போது, ‘‘இது ஒரு ஹிந்து நூல்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில், அவரின் சீடராகத் தம்மை வரித்துக் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள், திருக்குறளை ஆன்மிக நூல் என்று குறிப்பிட்டுள்ளார்’’ என்ற ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்து ஆழமானது, அர்த்தம் நிறைந்தது, ஆதாரமானதுமாகும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் (குறள் 1062)
‘‘உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப்போல் எங்கும் அலைந்து கெடுவானாக’’ என்பது இக்குறளின் பொருள் என்கிறார் டாக்டர் மு.வரதராசனார்.
கடவுளுக்கே ‘சாபம்’ விடுகிற திருவள்ளுவர் எப்படி ஓர் ஆன்மிகவாதியாக இருக்க முடியும்?
ஆன்மிகம், சனாதனம் என்பது மாறாதது என்பது உண்மையானால், அந்த சனாதன மதத்தின் அடிநாதமாகிய பிறப்பால் வர்ணம் என்ற அடித்தளத்தை- ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’’ என்ற குறள்மூலம் அடித்து நொறுக்கித் தள்ளிவிட்டாரே திருவள்ளுவர்.

சனாதனம் _- ஆன்மிகத்தில் முக்கியமாகக் கூறப்படும் (அறம், பொருள்,

 

இன்பம், வீடு) – நம்பப்படும் வீடு பேறு (மோட்சம்) என்பதை தம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல், கூட்டி ஒதுக்கித் தள்ளிவிட்டாரே திருவள்ளுவர்.
தமிழுக்கும், தமிழன் பண்பாட்டுக்கும் சம்பந்தமில்லாத ஒருவரின் கூற்றுக்காகப் பதில் சொல்லவேண்டுமோ என்ற கேள்வி எழக் கூடும். ஆனாலும், அவர் ஆளுநர் என்ற இடத்தில் பேசுகிறாரே – அதற்காகப் பதில் எழுத வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டு விட்டது என்பதைத் தவிர, வேறு எந்த வெங்காயமும் கிடையாது. வெட்டிவேலைதான் என்று தெரிந்தே, மறுப்பு சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தவறக் கூடாது என்ற கட்டாயத்தில் பதில் எழுதுகிறோம்.

ஆதிபகவன்
முதலில் “ஆதிபகவன்’’ என்பதை ஜி.யு.போப் மாற்றிவிட்டார் என்ற ஆளுநரின் குற்றச்சாட்டு சரியா? என்பதைப் பார்க்க வேண்டும்.
திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுளைப் பற்றிக் கூறுகிறதா? என்பதை ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டிய ஒன்று. கடவுளைக் குறிப்பதாயின் கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார். அந்த அதிகாரத்தில் வரும் பத்துக் குறளிலும் கடவுள் என்ற சொல் இல்லை. எனவே, அந்த அதிகாரம் கடவுளைச் சுட்டவில்லை என்பது முதல் நோக்கிலே உறுதியாகிறது.

ஆதிபகவன் யார்?

 

ஆதிபகவன் என்றால் அவருக்குப் பின் சில பகவன்கள் உள்ளனர் என்று பொருள். பகவன்களுள் முதலில் வாழ்ந்தவர் ஆதிபகவன் என்பதே உண்மைக் கருத்து.சமணர்களின் 24 தீர்த்தங்கரர்கள் பகவன்கள் ஆவர். அவர்களுள் முதலில் வாழ்ந்த அருகதேவர் (இடப தேவர்) ‘ஆதிபகவன்’ எனப்பட்டார்.
சமண மதத்தைச் சேர்ந்த ஆதிபகவன் தான் முதல் அதிகாரத்தில் சுட்டப்படுகிறார் என்பதற்கு அந்த அதிகாரத்தில் வரும் 10 குறள்களில் வரும் 10 சொற்களை ஆய்வு செய்தாலே உண்மை விளங்கும்.
1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. வேண்டுதல் வேண்டாமை இலான், 5. இறைவன், 6. அய்ந்தவித்தான், 7. தனக்குவமை இல்லாதான், 8. அறஆழி, 9. எண்குணத்தான், 10. இறைவன்.
மேற்கண்ட பத்து குறிப்புகளில் இறைவன் இருமுறை வருகிறது. எனவே, இங்குள்ள ஒன்பது குறிப்புகள் யாரைக் குறிக்கின்றன என்பதில் பலரும் பலவிதமாய்ப் பொருள் கொள்கின்றனர். சிலர் கடவுளைக் குறிக்கிறது என்கின்றனர். சிலர் சான்றோரைக் குறிக்கிறது என்கின்றனர். சிலர் அறிவாளியைக் குறிக்கிறது என்கின்றனர்.

ஆனால், நடுநிலையில், முன் முடிவுகள் இன்றி பத்துக் குறளிலும் வரும் பத்து குறிப்புகளையும் ஒட்டுமொத்தமாக நோக்கின் அது வரலாற்றில் வாழ்ந்த அருகதேவரையே குறிக்கிறது என்பது அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்படும். இந்த ஒன்பது குறிப்புகளும் பொருந்தக்கூடிய ஒருவர் வரலாற்றில் அருகதேவரைத் தவிர வேறு எவரும் இலர். சமண நூல்களை ஆய்வு செய்தால் இது உறுதியாகும்.
இந்த ஒன்பது குறிப்புகளும் கடவுளைக் குறிப்பதல்ல என்று மட்டும் உறுதிபடக் கூறமுடியும்.
1. இறை வாழ்த்து, 2. வான்சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4. துறவு, 5. கொல்லாமை, 6. அவா அறுத்தல், 7. நிலையாமை, 8. ஊழ் ஆகிய எட்டு அதிகாரங்களும் முழுக்க முழுக்க சமணக் கருத்துகளைக் கொண்டவை. இந்த எட்டு அதிகாரங்களும் சமணர்களால் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்ற ஆய்வு முடிவுகளும் உண்டு.

சமணக் கருத்து அதிகம் இருக்கக் காரணம்:

பொதுவாகவே திருக்குறளில் சமணக் கருத்துகளே அதிகம் காணப்படுகின்றன. திருக்குறள் ஆய்வில் உலக அளவில் புகழ் பெற்ற காலஞ்சென்ற பேராசிரியர் இரா.சாரங்கபாணி அவர்கள் திருவள்ளுவர் மதம் சார்ந்து திருக்குறள் எழுதவில்லை; திருக்குறளில் உள்ள கருத்துகள் மிகவும் பொருந்துவது சமணக் கருத்துகளுடன்தான் என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள்.
திருக்குறளில் சமணக் கருத்து அதிகம் இருக்கக் காரணம் திருக்குறள் ஆரியத்திற்கு எதிராய் எழுதப்பட்ட நூல். இந்தியா முழுவதும் சமணம் பெருமளவு பரவி மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த நிலையில் அதை அழித்து தங்கள் கலாச்சாரத்தைப் பரப்ப ஆரியர்கள் முயன்றபோது, சமணத்திற்கு ஆதரவாய், ஆரியத்திற்கு எதிராய் எழுதப்பட்டதே திருக்குறள்.
சமணர்கள் திருக்குறளை “எம் ஓத்து’’ என்பர். அதாவது எங்கள் வேதம் என்பர்.

சனாதனத்திற்கு எதிரானது திருக்குறள்
திருக்குறள் சனாதனத்திற்கும், சாஸ்திரத்-திற்கும் எதிரானது. ஆரியக் கோட்பாடுகளுக்கு எதிரானது.

பிறவி ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு:
ஆரிய சனாதனம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிப்பது. திருக்குறள் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவம் கூறுவது.

வேடதாரிகள் வெறுப்பு:
சனாதனம் புனைவேடங்களைப் போற்றி ஏற்றக் கூடியது. ஆனால், திருக்குறள் அதை எதிர்க்கக் கூடியது.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
என்று வேடதாரிகளை வெறுத்தவர் வள்ளுவர்.

அறமே குறளின் அடிப்படை:
திருக்குறளின் அடித்தளம் “அறம்’’ தான். சரியாக ஆய்வு செய்தால் திருக்குறளின் முதல் அதிகாரமாய் இருக்க “அறன் வலியுறுத்தல்தான்’’ சரியானது ஆகும். திருக்குறளின் உயிரோட்டமாய், மய்ய இழையாய் அமைத்து திருக்குறள் முழுவதும் விரவிக் கலந்து காணப்படுவது அறமேயாகும்.
ஆனால், சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு, பேதம், ஆதிக்கம், ஒரு குலத்துக்கொரு நீதி போன்ற ஒவ்வாத கருத்துகளே முழுக்க முழுக்க உள்ளன.

பரிமேலழகரும் ஜி.யு.போப்பும்
திருக்குறளை மொழிபெயர்த்ததோடு, தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்தவர் ஜி.யு.போப். திருக்குறளின் இயல்பு கெட அவர் தன் கருத்தை எங்கேயும் திணித்தாரில்லை. உண்மை அப்படியிருக்க, ஜி.யு.போப் திருக்குறளை தன் விருப்பப்படி மாற்றி கேடு செய்துவிட்டார் என்று ஆளுநர் அப்பட்டமான, தப்பான, ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
உண்மையில் திருக்குறளின் இயல்புக்கு மாறாய் தன் கருத்துகளைத் திணித்தவர் பரிமேலழகர் என்ற ஆரியப் பார்ப்பனர்தான்.
பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதத் துவங்கும் போதே, அதாவது எடுத்த எடுப்பிலேயே,
“அறமாவது, மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழித்தலும் ஆம்’’ என்றும்,
“ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற்கோதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்’’ என்றும்,
“அதுதான் (அவ்வொழுக்கம்)நால்வகை நிலைத்ததாய், வருணந்தோறும் வேறுபாடுடைமை-யின், சிறுபான்மையாகிய அச்சிறப்பு இயல்புகள் ஒழித்து, எல்லோர்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி, இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடமொழி நூலாராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற தருமம் என்பது ஒன்று; வள்ளுவப் பெருந்தகையார் திருக்குறளில் உணர்த்துகின்ற ‘அறம்’ என்பது முற்றிலும் மாறுபட்ட வேறொன்று. மனுவின் கருத்துப்படி, மனிதகுலம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்ட விதியின்கீழ் நீதி கூறப்படுவதாகும். அதுதான் மனுவின் ‘தருமம்’ என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், வள்ளுவரின் கருத்துப்படி, ‘அறம்’ என்று அழைக்கப்படுவது, மனிதகுலம் அனைத்திற்கும் வேறுபாடு இல்லாமல், ஒரே தன்மையதாய், அன்பு நெறி, அருள் நெறி, அறிவு நெறி, பண்பு நெறி, ஒழுக்கநெறி போன்றவற்றின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள கடமை-களை உணர்த்துவதாகும்.
எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையானதாகத்தான் அமையும்; பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்னும் கருத்துப்பட,
“பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும், மற்ற எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்குவதற்குரிய தலைவனாகிறான்.’’ – (மனு த.சாத். அத். 1 சுலோ. 100) என்றும்,
சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், அவனது நாக்கை அறுக்க வேண்டும்.’’ (மனு த.சாத். அத். 8 சுலோ. 270) என்றும்,
“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இடவேண்டும்.’’ (மனு த.சாத்.அத்.2.சுலோ. 31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்த கற்றவர்களைப் போல, பெருமைக்குரியவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட,
“மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் 409)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், பிராமணர் இந்த மனுநூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தார்க்கு அதனை ஓதுவிக்கக் கூடாது.’’ (மனு த.சாத். அத்.1 சுலோ. 103) என்றும்,
“சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது பிராமணன் வேதம் ஓதக்கூடாது.’’ (மனு த.சாத்.அத்.1. சுலோ. 99) என்றும்,
“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில், ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விடவேண்டும். வேதத்தைச் சொல்லுகின்ற சூத்திரனது நாக்கை, அறுத்தெறிய வேண்டும். பொருளை உணர்ந்து வைத்திருக்கிற அவனது நெஞ்சைப் பிளக்க வேண்டும்.’’ (வேதம்) என்றும் கூறுவது, மனு, வேதம் ஆகியவற்றின் தருமம் ஆகும்.

ஒருவர் தாம் தேடிய உணவுப் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், தாம் மட்டும் தனியாக இருந்து உண்ணுதல் என்பது, வறுமையின் காரணமான இரத்தலைக் காட்டிலும் கொடியது ஆகும் என்னும் கருத்துப்பட,
“இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்” (குறள் 229)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும்கூடக் கொடுக்-கலாகாது.’’ (மனு த.சாத். அத்.4. சுலோ. 80) என்பது மனுவின் தருமம் ஆகும்.

உலகத்தார், பல்வேறு தொழில்களையும் செய்து பார்த்து, அலைந்து திரிந்து சுழன்று வந்தாலும், இறுதியில் ஏர்த் தொழிலின் பின்னேதான் நிற்கவேண்டியிருக்கிறது. ஆகையினால் எவ்வளவு துன்பமுற்றாலும் உழவுத் தொழில்தான், தலைசிறந்த தொழிலாகத் திகழ்கின்றது என்னும் கருத்துப் பட,
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (குறள் 1031)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று பலர் நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்ட ஒன்றாகும்.’’ (மனு த.சாத். அத்.10. சுலோ. 84) என்பது மனுவின் தருமம் ஆகும்.
ஒருவன் எப்பொழுதும் பொய் சொல்லாமல் நடப்பானேயானால், அவன் வேறு அறங்களைக் கூடச் செய்யவேண்டிய இன்றியமையாமை இல்லை. அதுவே எல்லா அறங்களின் பயனையும் ஒருங்கே தரக்கூடியதாகும் என்னும் கருத்துப் பட,
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று” (குறள் 297)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், பல மனைவிகளையுடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை.’’ – (மனு த.சாத். அத்.8 சுலோ. 112) என்பது மனுவின் தருமம் ஆகும்.
உயிர்களைக் கொன்றும், நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிட, ஓர் உயிரின் உயிரைப் போக்கி, அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லது ஆகும் என்னும் கருத்துப்பட,
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள் 259)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “ஒரு பிராமணன், தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும், விதிப்படி சிரார்த்தத்தில் வரிக்கப்பட்டபோதும், கொல்லப்-பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்’’ என்றும்,
“அஜீகர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கி, கொன்று, வேள்வி செய்து, தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை.’’ – (மனு த.சாத். அத். 10: சுலோ. 105) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
கொலையின் மூலம் ஒருவருக்கு நன்மையாக ஆகின்ற ஆக்கமானது, மிகப்-பெரியதாக இருந்தாலும் அப்படிப்பட்ட ஆக்கமானது, சிறந்த சான்றோர்களால் மிக இழிவானதாகவே கருதப்படும் என்னும் கருத்துப்பட,
“நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக்
கொன்று ஆகும் ஆக்கம் கடை”. (குறள் – 328)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால்,  “உண்ணத்தக்க உயிர்களை  நாள்-தோறும் கொன்று உண்டாலும், பாவத்தை பிராமணன் அடையமாட்டான். பிரமனாலேயே உண்ணத்தக்கவையும், கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன.’’ (மனு த. சாத். அத். 5: சுலோ. 30) என்று கூறுவது மனுவின் தருமமாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் எவரெவர், என்ன என்ன சொல்லக் கேட்டாலும், கேட்டவாறு அப்படியே அதனை ஏற்றுக்கொண்டு விடாமல், அந்தப் பொருளின் உண்மையான பொருளை ஆராய்ந்து கண்டறிவதே அறிவுடைமையாகும் என்னும் கருத்துப்பட,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள் – 423)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “வேதத்தைச் சுருதி என்றும், தரும சாத்திரத்தைச் சுமிருதி என்றும் அறியத்தக்கனவாகும். அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்திகன் ஆவான்’’ என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து -_ பார்த்து, யார் ஒருவர் பக்கமும் சாயாமல், நடுவு நிலைமை பொருந்துமாறு நின்று, யாராக இருந்தாலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து, அதற்கு ஏற்றபடி நீதி வழங்குவதே, அரசனது செங்கோல் முறையாகும் என்னும் கருத்துப்பட,
“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை” (குறள் – 541)
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால், “பிராமணனின் பொருளை அபகரிக்கும் சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லலாம். ஆனால், சூத்திரனுடைய பொருளை பிராமணன் தன் விருப்பப்படி கொள்ளை இடலாம்’’ (மனு த. சாத். அத். 9: சுலோ. 248) என்றும்,
“பிராமணன் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும், அவனைத் தூக்கில் போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அவனது தலையை மட்டும் மொட்டை அடித்து விட்டுவிட்டால் போதுமானது. அதுவே அவனுக்குத் தூக்குத்தண்டனையைக் கொடுப்பதற்கு ஒப்பாகும். மற்ற வருணத்தார்க்குக் கொலையே உரிய தண்டனையாகும்.’’ (மனு த. சாத். அத்.8: சுலோ. 379) என்றும்,
“மிகக்கொடிய குற்றம் செய்தாலும், பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய-தொரு துன்பத்திற்கும் ஆளாக்காமலும், அவனுடைய பொருள்களையெல்லாம், அவனிடமே கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.’’ (மனு த. சாத். அத்.8: சுலோ. 380) என்றும்,
“அரசனானவன், எத்தகையதொரு குற்றத்திற்கும் பிராமணனனைக் கொல்ல நினைக்கக்கூடாது.’’ (மனு த. சாத். அத். 8: சுலோ. 381) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

பிறரையும் அற நெறியில் நடக்கச் செய்து, தானும் அற நெறிதவறாது, மனைவியோடு வாழ்கின்றவனின் இல்வாழ்க்கையானது, தவம் செய்வோரைவிட மிகவும் வல்லமை வாய்ந்த ஒன்றாகும் என்னும் கருத்துப்பட,
“ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.” (குறள் – 48)
என்பது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “நான்கு வருணத்தைச் சார்ந்த பெண்களையெல்லாம், பிராமணன் மட்டும், அவன் விரும்பியவாறு திருமணம் செய்து கொள்ளலாம்.’’ என்பது மனுவின் தருமம் ஆகும்.
சனாதனத்திற்கு எதிர்நூல் திருக்குறள்!
மேற்கண்ட கருத்துகளை ஒப்பு நோக்கினால் சனாதனம், சாஸ்திரங்-களுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டது திருக்குறள் என்பது விளங்கும். அதனால்தான் பரிமேலழகர் முதற்-கொண்டு இன்றைய பார்ப்பனர்கள் வரை திருக்குறளை வெறுக்கின்றனர், இழிவுபடுத்துகின்றனர்.

திருக்குறளை – வள்ளுவரை இழிவு செய்தவர்கள் ஆரிய பார்ப்பனர்களே!
தீமை பயக்கும் கோள் சொல்லுதலை வெறுத்து, “தீக்குறளைச் சென்றோ-தோம்’’ என்ற ஆண்டாள் பாடியதன் பொருள் புரியாத காஞ்சிபுரத்து, காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரன், “தீய திருக்குறளை ஓத மாட்டோம்’’ என்று கூறி வெறுத்து, இழிவுபடுத்தியவர்.
திருவள்ளுவர் பிறப்பை கொச்சைப்-படுத்தியவர்-களும் பார்ப்பனர்கள். திருவள்ளுவரின் அறிவு கூர்மை, ஆற்றல் மேன்மை, நேர்மை இவற்றைப் பொறாத ஆரிய பார்ப்பனர்கள், தமிழன் ஒருவனுக்கு இவ்வளவு சிறப்பா என்று வயிற்றெரிச்சல் கொண்டு, திருவள்ளுவர் இவ்வளவு சிறப்பாய் இருக்கக் காரணம் அவர் பார்ப்பானுக்கு பிறந்ததுதான் என்று அயோக்கியத்தனமாக ஒரு கற்பனைக் கதையை எழுதி, வள்ளுவர் பிறப்பை இழிவு செய்தனர்.

வள்ளுவர் சொர்க்கம் நரகத்தில் நம்பிக்கை இல்லாதவர். அதனால், வீடுபேறு பற்றி அவர் குறள் செய்யவில்லை. ஆனால், இந்த உண்மையை மறைத்து வள்ளுவர் சூத்திரர் என்பதால் வீடுபற்றி எழுத அவருக்கு உரிமையில்லை, தகுதியில்லை என்று இழிவு செய்தவர் வ.வே.சு.அய்யர்.
திருக்குறளைப் பரப்பியவர் பெரியார்!
ஆனால், தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் உள்ள குறைகளைக் கண்டித்த பெரியார், திருக்குறளில் தனக்கு சில கருத்து வேற்றுமை இருப்பினும், அது சிறந்த வாழ்வியல் நூல் என்பதால் அதை மலிவான விலையில் அச்சிட்டுப் பரப்பினார். மாநாடுகள் நடத்தி திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தார்.இவற்றையெல்லாம் ஏதும் அறியாத ஆய்வு நுட்பம் இல்லாத ஆளுநர் அரைகுறையாய் அறிந்தவற்றை வைத்துக்கொண்டு திருக்குறளை பக்தி நூலாய், சாஸ்திர நூலாய்க் காட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

தமிழர் தலைவர் கண்டனம்!
ஆளுநரின் இக்கருத்து ஊடகங்-களில் வந்தவுடனே, திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடுமையாகத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார். அண்மையில் இதற்கு ஒரு காணொலிக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து அறிஞர் பெருமக்களின் கண்டனத்தையும் தமது கண்டனத்தையும் தெரிவித்தார்கள்.
தன் அரசியல் கடமைகளைப் புறந்தள்ளி-விட்டு, ஆளுநர் தனக்குப் போதிய புலமையில்லாதவற்றில் அறைகுறையாய் கருத்துகளைக் கூறுவதை இனி கைவிட்டு, மேற்கண்ட உண்மைகளை உள்வாங்கி, அதன் ஒளியில் தமது அறியாமையை விலக்கிக் கொள்ள வேண்டும்! அறிவு ஒளி பெற வேண்டும். அதுவே அவருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகு!