முகப்புக் கட்டுரை: மோகன் பகவத்தின் முகமூடி வித்தைகள்!

2022 அக்டோபர் 16-30 2022 முகப்பு கட்டுரை

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
மஞ்சை வசந்தன்


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் எவை என்று நாம் தெரிந்து கொண்டால்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ஏமாற்றுப் பேச்சுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
ஆர்.எஸ்.எஸ். சட்டவிதி
“The aims and objects of the sangh are to weld together the diverse groups within Hindu Samaj and revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit, that it may achieve an all sided developments of Bharath varsha.”
அதாவது, இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு எழுச்சியூட்டி, இளமை ரத்தம் பாய்ச்ச வேண்டும். இந்து தர்மம் மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெறமுடியும்.
ஆர்.எஸ்.எஸ். சட்டவிதிகளில், ‘விதிகளும் ஒழுங்கு முறைகளும்’ என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவில் காணப்படும் சட்ட விதியே இதுவாகும்.

வர்ணாஸ்ரம ஆதரவாளர்கள்
இந்து தர்மம் என்பது வர்ணாசிரம தர்மந்தானே! ஆர்.எஸ்.எஸ். ஓர் ஆரியப் பார்ப்பன அமைப்பு என்பதற்கு வர்ணாஸ்ரம தர்மத்தில் (ஜாதி முறையில்) அவர்கள் கொண்டுள்ள தீவிரமே முக்கிய ஆதாரமாகும்.இவர்களின் அன்றாடப் பணிகளில் ஜாதி முறையை ஆதரிக்கின்ற, பாராட்டுகின்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
வர்ணாஸ்ரம அமைப்பு ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்று அதன்மீது தேன் தடவி ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“ஜாதிக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பதுதான் வர்ணாஸ்ரம தத்துவம். பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால் உயாந்தவர்கள்; ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள்; வாணிபம் செய்வதில் வல்லவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன்மூலம் சமூகத்திற்குச் சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இதில் இழிவு இல்லை’’ என்கிறார் கோல்வால்கர். (Bunch of Thoughts)

“We (aryans) are the good, the enlightened people. We were the people who know about the laws of nature the law of the sprit. We had brought into actual life almost every thing that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and so no distinctive same was given to us. Sometimes in trying to distinguish our people from others, we were called the enlightened – the Aryas – and the rest the melachas.”

-(ஆதாரம்:Bunch of Thoughts)
அதாவது,
“நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத் திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதி-களையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத் திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்-கள் (இழிமக்கள்)’’ என்று கோல்வால்கர் கூறுகிறார்.


இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும்?
ஆர்.எஸ்.எஸ். பிரிவுகள் அனைத்துமே ஆரியப் பார்ப்பன அமைப்புகளே என்பதைக் கீழ்க்கண்ட குறிப்பு தெளிவாய் விளக்கும்.
ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்புகளுக்கு கொள்கை நூல், சித்தாந்த நூல், வழிகாட்டு நூல் எல்லாமே கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ (Bunch of Thoughts)
என்பதேயாகும். அந்நூலில் 138_-139ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட கருத்து வலியுறுத்தப் படுகிறது. கதையாக எண்ணாமல் கவனமாகப் படியுங்கள்.
“தென்னாட்டில் ஆங்கில அதிகாரி ஒருவர் இருந்தார், அவருக்கு உதவியாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். தெருவில் பியூனோடு ஆங்கில அதிகாரி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த ஆங்கில அதிகாரியைப் பார்த்து கை குலுக்கினார். ஆனால், பிராமணப் பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கில அதிகாரி,
“நான் உன்னுடைய பெரிய அதிகாரி, என்னிடம் நீ கை குலுக்கினாய்; ஆனால், என்னுடைய பியூன் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே, இது என்ன பிரச்சினை?’’ என்று கேட்க, அதற்கு அந்த நாயுடு உதவியாளர் பதில் சொன்னார்,
“நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாய் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் (பிராமணர்) ஒரு பியூனாக இருந்தாலும் நாங்கள் வணங்கக் கூடிய பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எங்கள் கடமை” என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்! என்றார்” என்கிறார் கோல்வால்க்கர். இதன்படி வர்ணாஸ்ரம தர்மம் படிநிலை ஏற்றத்தாழ்வும், உயர்வு இழிவும் உடையது என்பது விளங்கும் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றி, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கடவுள், ஒரே மதம் என்று நாட்டைக் கட்டமைத்து, வருணாஸ்ரம தர்மத்தை நிலைநிறுத்தி, மனு சாஸ்திரத்தைச் சட்டமாக்கி, ஆரிய பார்ப்பன மேலாண்மைமிக்க பாசிச ஆட்சி நடத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் முதன்மை நோக்கம்.

மோடியின் ஆட்சியில் இந்த இலக்கை அடைய ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறார்கள்.
ஆனால், இந்த அப்பட்டமான உண்மையை அறவே மறைத்துவிட்டு, மக்களின் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து தங்கள் இலக்கை அடைய, ஏமாற்றுப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
அதன் ஒரு பகுதிதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் அண்மைப் பேச்சு.
டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் ரேணுகா போகரே எழுதிய வஜ்ரசூசி துங்க் என்ற புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோகன் பகவத், “ஜாதி, வருணம் என்பது பேதத்தினை வலியுறுத்தும் அருவருக்கத்தக்கவை. அவை அறவே நீக்கப்படல் வேண்டும். இப்போது யாராவது ஜாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை. அவைகள் மறக்கப்படவேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
வருண தர்மத்தையும், மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்ட பாசிச ஆர்.எஸ்.எஸ் தலைவர் இப்படி இன்று பேசுகிறார் என்றால் அதை நம்பி ஏமாற நாம் என்ன முட்டாள்களா?


வருணாசிரம தர்மத்தையும் ஜாதியையும் ஒழிக்கும் திட்டமோ, லட்சியமோ ஆர்.எஸ்.எஸ்.க்குக் கிஞ்சிற்றும் கிடையாது.
இக்கேள்வி கேட்கப்படும் பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கழுவிய மீனில் நழுவிய மீனாகவே பதிலளிக்காமல் சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுவர்; அல்லது சற்று குழப்பி விடுவர். இது நமது கற்பனையான குற்றச்சாற்று அல்ல.
தினேஷ் நாராயணனின் The RSS and the Making of the Deep என்னும் நூலில் இடம் பெற்றுள்ள ஒரு நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
“At an internal RSS meeting in Kerala in 2014, Mohan Bhagwat, who was touring the state, faced a question from a taluk sanghchalak. ‘It appears caste consciousness is increasing even as the Hindu society progresses. Many incidents in Kerala and elsewhere point to that. Do you think the Sangh can stop such thinking?’ Bhagwat replied, “The Sangh should not get into eradicating or opposing caste. Caste is a system (though now perverted) that exists in the society. It would remain until the society believes in it. When it becomes disagreeable, society itself will reject it. The society should think about it. Not just the Sangh.

It was a peculiar answer that reveals a dilemma. It is accused of casteism if it portrays caste as a useful social system gone a way. If it rejects it, it risks upsetting its own well-wishers and supporters. Either position also comes with a political cost that the Sangh is not prepared to pay.
We are not supporting it because if we do then those who are anti-caste will become anti-Sangh. We are not opposing it because if we do then those who support it will stand against us. We are neither supporters nor opposers. That the age-old caste system is now decrepit is a fact but it does not have an alternative. But it is not the Sangh’s job to find one, Bhagwat said. The only way out then is ‘to take the high ground away from the turbulent waters. ‘Our job is to create a Hindu society that is not casteist by nature. Affection and respect should grow to eliminate casteism. Differences and discrimination in society should go and a brotherhood of Hindus should develop among all sections.’
(The RSS and the Making of the Deep Nation, pg: 290-291)

இதன் தமிழாக்கம் :
2014ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தாலுகா ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஒருவரின் கேள்வியை ஒரு கூட்டத்தில் எதிர் கொள்ளவேண்டி நேர்ந்தது. “ஹிந்து சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட, அது ஜாதி உணர்வு கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. கேரளாவிலும், மற்ற பல இடங்களிலும் நடந்தேறியுள்ள சில நிகழ்வுகள் இதனைச் சுட்டிக் காட்டுகின்றன. அத்தகையதொரு சிந்தனையை சங்பரிவாரத்தால் தடுத்து நிறுத்த-முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’’ என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்குப் பதில் அளித்த பகவத் கூறினார். “ஜாதி நடைமுறையை ஒழிப்பதிலோ அல்லது எதிர்ப்பதிலோ சங்பரிவார் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. இன்று அது நெறி தவறியதாகத் தோற்றமளித்தாலும், ஜாதி என்பது ஒரு நடைமுறையே ஆகும். சமூகத்தினால் நம்பப்படும் வரை அது இருக்கத்தான் செய்யும். ஏற்றுக் கொள்ள முடியாததாக அது ஆகும்போது, சமூகமே அதனை நிராகரித்துவிடும். சங் பரிவாரம் மட்டுமே நினைத்துப் பார்ப்பதில் பயனில்லை; ஒட்டு மொத்த சமூகமும் அதனைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்’’ என்று பதிலளித்தார்.

இது சிந்தனையில் உள்ளதொரு ஊசலாட்டத்தை வெளிப்படுத்தும், விசித்திரமான ஒரு பதிலாகும். ஜாதி நடைமுறை பயன்மிகுந்த ஒரு சமூக நடைமுறை என்று ஆர்.எஸ்.எஸ். எடுத்துக் காட்டுமேயானால், ஜாதி உணர்வு கொண்ட அமைப்பு அது என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஜாதி நடைமுறையை அது நிராகரிக்குமேயானால், தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளை கவலை கொள்ளச் செய்யும் ஓர் ஆபத்தினை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது பற்றி எந்த ஒரு முடிவை மேற்கொண்டாலும் அதற்கான மிகப் பெரிய விலை ஒன்றை அது கொடுக்க வேண்டியிருக்கும்; ஆனால் அத்தகைய விலையைக் கொடுப்பதற்கு அது தயாராக இல்லை.

“நாம் அதனை ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்தால், ஜாதி நடைமுறைக்கு எதிரானவர்கள் _ சங் பரிவாரத்துக்கு எதிரானவர்-களாக ஆகிவிடுவார்கள் என்பதே இதன் காரணம். நாம் அதனை எதிர்க்கவுமில்லை. அவ்வாறு செய்தால், ஜாதி நடைமுறையை ஆதரிப்பவர்கள், நமக்கு எதிரானவர்களாக ஆகிவிடுவார்கள். எனவே, நாம் ஜாதி நடைமுறையை ஆதரிப்பவர்களும் அல்ல; எதிர்ப்பவர்களும் அல்ல. காலம் காலமாக நிலவி வரும் ஜாதி நடைமுறை இப்போதும் ஒரு நிதர்சன உண்மையாக இருப்பதாகும். அதற்கு ஒரு மாற்று இருக்கவில்லை. ஆனால், அத்தகைய ஒரு மாற்றைக் கண்டுபிடிப்பது சங் பரிவாரத்தின் வேலையல்ல.’’ என்று பகவத் கூறினார். இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, கொந்தளிக்கும் கடலை விட்டுவிட்டு உயர்ந்ததொரு இடத்தை அடைவதுதான். “உண்மையில் ஜாதி உணர்வு அற்ற ஒரு ஹிந்து சமூகத்தை உருவாக்குவதே நமது பணியாகும். ஜாதிய உணர்வை ஒழிப்பதற்கு மக்களிடையே அன்பும் மரியாதையும் வளரவேண்டும். சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகள், பாகுபாடுகள் ஒழியவேண்டும். அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் ஹிந்து சகோதர உணர்வு வளரவேண்டும்.’’(மேற்கண்ட நூல், பக்கம் 290-291)


பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று பம்மாத்துக் காட்டும் போக்கைத்தான் மேற்கண்ட பதிலில் நாம் காண முடியும். “தானாய் எல்லாம் மாறும்” என்ற பழைய பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே அதற்கு மாறாக வருண ஜாதிப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆர்.எஸ்.எஸ்.சின் பாணி.
இதைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது கீழ்க்கண்ட அறிக்கையில் விளக்கி விழிப்பூட்டி மக்களை எச்சரித்துள்ளார்கள்.
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் உருமாற்ற வித்தைகளில், இதற்குமுன் இருந்த பல முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைவிட மிகவும் கைதேர்ந்த சாணக்கியப் பார்ப்பனர்!
1. திடீரென்று டில்லியில் இமாமை சந்திப்பார்; இஸ்லாமியர்களை வெறுப்பதல்ல எங்கள் அமைப்பு என்று வெறுப்பு அரசியல் குடியுரிமைச் சட்டங்களை மூடி மறைத்து அதன் மீதே அமர்ந்துகொண்டு புதிய வித்தை காட்டுவார்; நமது மக்களில் _ குறிப்பாக அறிவு ஜீவிகளில் சிலரும்கூட, ‘‘ஆஹா, பாருங்கள் ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு மாறிவிட்டது பாருங்கள்; முந்தைய ஆர்.எஸ்.எஸ். வேறு; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். வேறு” என்று விளக்கங்கள், வியாக்கியானங்களைத் தருவார்கள்.
இன்று ஊடகங்கள் அவர்கள் காலடியில்தானே பெரும்பாலும்!
திடீரென்று இஸ்லாமிய மக்களின் மதத் தலைவர்மீது பொழிந்த பாசப் பிணைப்பும் _ அவரும் அந்த நிலை கண்டு புளகாங்கிதம் அடைந்து புகழ்ந்ததும் இதற்குமுன் காணாத அரிய வித்தைக் காட்சிகள்.
2. அதற்கடுத்து ‘‘ஜாதி, வருணம் என்பது பேதத்தினை வலியுறுத்தும் அருவருக்கத்தக்கவை. அவை அறவே நீக்கப்படல் வேண்டும்” என்று ஒரு சரவெடியைக் கொளுத்திப் போட்டு வெளிச்சம் காட்டியுள்ளார்.

கோல்வால்கர் எழுதியது என்ன?
இதற்குமுன் இவரின் கூற்று, ‘அவாளின்’ தத்துவகர்த்தா ‘‘குருஜீ கோல்வால்கர்” ஜாதி, வருணம் பற்றி, அவர்களது கொள்கை நூலான ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்” என்ற ‘ஞானகங்கையில்’ எழுதியது என்ன?
படியுங்கள்!
‘‘நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதி வாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூகநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.” ( பக்கம் 102 )
‘‘இன்று ஹிந்து சமுதாயத்தின் வருண அமைப்பு முறை உருத் தெரியாத அளவிற்குக் கெட்டுவிட்டது. காலப் போக்கில் ஏற்பட்ட தீய சக்திகளால் வருணம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஜாதி முறையை வானளாவப் பேசிக் கண்டிக்கும் கூட்டத்தாரின் போக்கினாலேயே ஜாதிமுறை கட்டுப்பாடு இறுகி வரக் காண்கிறோம்” என்று கோல்வால்கரின் ‘ஞானகங்கை’யில் கூறப்பட்டுள்ளது.

1935இல் பெயரளவுக்குப் பெண்களை அனுமதித்தனர்!
3. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட 1925இல் _ அடுத்த பத்தாண்டுகள் _ 1935 வரை பெண்களையே அதில் சேர்க்காமல், அவர்களது பணி அடுப்பங்கரையில்தான் _ வீட்டில் அடைந்து மனுதர்ம முறைப்படி வளர்க்கப்பட்டு, வாழ்க்கைப்பட்டு, வதைக்கப்பட்டு இருந்தாலும், பொறுத்து வாழ வேண்டியதே ‘ஸ்திரீ தர்மம்’ என்ற தத்துவம் பேசியவர்கள் 1935இல் சற்றுக் கதவு திறந்து பெயரளவுக்குப் பெண்களை அனுமதித்தனர்!
இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவரும், அமைப்பும் பெண்களுக்கான உரிமைகள் _ பங்களிப்புகளின் முக்கியத்துவம்பற்றி திடீரென்று வற்புறுத்திப் பேசி, புதிய ஞானோதயத்தை ஞாலத்திற்குக் காட்டுகிறார்கள்!
இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். கொள்கை கர்த்தா அதே நூலில் பக்கம் 176இல் என்ன கூறுகிறார்?
‘‘தற்போது பெண்களுக்குச் சம உரிமை _ ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து பெண்களை மீட்போம் என்று அறைகூவல்கள் எழுந்துள்ளன. பதவி நிலை _ நிலைகளில் ஆண், பெண் என்ற பால் பிரிவினையின் பெயரில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு ஏற்கெனவே உள்ள ஜாதி, மொழிப் பிரிவினைகளோடு புதிதாக இந்த பால் பிரிவினையும் சேர்க்கப்பட்டுள்ளது.
(ஹிந்துப் பெண்களுக்கு குடும்பத்தில் ஆண் மகன்களைப்போல மகள்களுக்கும் சொத்துரிமை சட்டத் திருத்தத்திற்காகவே சட்ட அமைச்சரின் சட்டத்தினை எதிர்த்து நிறைவேற்ற போட்ட முட்டுக்கட்டைதானே அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரை வெளியேற வைத்தது என்பதை எவரே மறக்க முடியும்?)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தனது நிலைப்பாட்டில் மாற்றம் என்று காட்ட முன்வருவாரா?
இப்போது கோல்வால்கரை மூலையில் தள்ளி, மோகன் பகவத் பேசிடும் பேச்சு உண்மையாகவே அவர்கள் உரிமையில் அக்கறைக் காட்டும் கவலை மிக்க கருத்துதான் என்று அவர்கள் சார்பில் பதில் கூறப்படுமானால், கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்குமேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் ஊறுகாய் ஜாடியில் ஊறிடும் 33 சதவிகித மகளிர் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் அழுத்தம் கொடுத்து, தனது நிலைப்பாட்டில் மாற்றம் என்று காட்ட முன்வருவாரா? அதுபோலவே,

இனி ஒரே ஜாதிதான் என்று அவசர சட்டம் கொண்டு வருவார்களா?
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்று தொடர்ந்து ‘‘கோரஸ்” பாடும் ‘‘ஒரே, ஒரே” வரிசையில், ஏன் உடனடியாக தற்போதுள்ள புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசு ‘‘இனி ஒரே ஜாதிதான்” என்ற ஒரு அவசரச் சட்டத்தையோ அல்லது நாடாளுமன்றம்மூலம் தனிச் சட்டத்தையோ கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வந்து, எங்களது குரல் உண்மையான கொள்கை நிலைப்பாடு மாற்றமே தவிர, வெறும் உதட்டளவிலான உருமாற்ற உச்சரிப்பல்ல _ என்பதை உலகுக்கு உணர்த்திட முன்வரலாமே ஆர்.எஸ்.எஸ்.
செய்யுமா? _ இந்த இரண்டை நிறைவேற்ற இப்போது அவர்களுக்கு எது தேவை?

மாற்றம் வேறு; ஏமாற்றம் என்பது வேறு
‘‘ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ”, அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ‘‘அதிசயம், அற்புதத்தை” நிகழ்த்த முடியும். எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள்.
2024இல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே இதனை நினைவில் நிறுத்துங்கள்!’’ என்று ஆசிரியர் எச்சரித்து விழிப்பூட்டியுள்ளார்.
இன்று ஜாதிக்கு எதிராய், பெண்ணடிமைக்கு எதிராய் புதிய முகமூடி அணிந்து புரட்சியாளர்போல் பேசும் பகவத் 2013ஆம் ஆண்டு கூறியது என்ன?

இதே மோகன் பகவத் 2013 இல் கூறியது!
டில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின்னரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகளைப் போலவே நமது நாட்டிலும் கலாச்சார மாற்றங்களால் பிரச்சினைகள் எழுகின்றன என்றும், குடும்ப உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்குக் காரணம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், இதனை தெரிவித்த அவர், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது என்றார்.


திருமணம் என்பது சமூதாயத்தில் நடக்கும் ஒரு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி,‘‘நீ நமது வீட்டைப் பார்த்துக்கொள்; நான் உனது எல்லாத் தேவைகளையும் பார்த்துக் கொள்கிறேன்; உன்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அந்த ஒப்பந்தப்படி மனைவி நடக்கும்வரை அவன் அவளுடன் இருக்கிறான்.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறினால், அவள் அவனுக்குச் சொந்த மில்லாதவளாக ஆகிறாள். எனவே, பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், கணவரின் தயவில் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும். வீட்டைக் கவனிப்பது பெண்களின் பொறுப்பு. குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டுவது ஆண்களின் வேலை என்று அவர் மேலும் கூறினார். விசுவ ஹிந்து பரிசுத் தலைவர் அசோக் சிங்காலும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மோகன் பகவத்தின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
சில நாள்களுக்கு முன்னர்தான் பலாத்காரங்கள் ‘‘இந்தியா”வில்தான் நடக்கின்றனவே தவிர, ‘‘பாரத”த்தில் அல்ல என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் மோகன் பகவத் என்பது குறிப்பிடத்தக்கது. (6.1.2013).

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, திரித்துப் பேசுவது எல்லாம் ஆர்.எஸ்.எஸின் உடன்பிறந்த குணம்.
இப்பொழுது வேறு தொனியில் இரட்டை நாக்கில் பேசுவானேன்? பெண்கள் வாக்கு வங்கி தேவைப்படுகிறதல்லவா? _- அதுதான் காரணம்!
எனவே, ஆசிரியர் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளது போல் ஓநாய் ஒரு நாளும் சைவம் ஆகாது. பகவத் அவர்களின் இந்த பம்மாத்துப் பேச்சு, 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பேசப்பட்ட கபடப் பேச்சாகும். எப்படியாவது ஏமாற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டால்,. இப்போது பேசியதை எல்லாம் காற்றில் கலக்க விட்டுவிட்டு, அவர்களின் பழைய அஜண்டாவை அப்பட்டமாக அமல்படுத்தி, இந்து ராஷ்ட்ராவை அமைப்பர். அப்போது மனுதர்மம் சட்டமாகும், வர்ணாஸ்ரமம் நடைமுறைப்படுத்தப்படும். 90% மக்கள் சூத்திரர்களாய்; ஆக்கப்பட்டவர்களாய் கடைநிலை ஊழியர்களாய் ஆக்கப்படுவர்.

எனவே, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக விழிப்போடு இருக்க வேண்டும். முகமூடி விலக்கி உண்மை உருவத்தை அடையாளம் காண வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.க்கு எதிரான பிரச்சாரத்தை ஒவ்வொருவரும், ஒவ்வொரு தெருவிலும் ஓயாது மேற்கொள்ள வேண்டும். மதமயக்கத்தில் மயங்காமல் மக்களுக்கு விழிப்பூட்டி, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை பெருந்தோல்வியடைச் செய்து, மதச்சார்பற்ற மாற்று அணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதற்காக அன்றாடம் உழைக்க வேண்டும்! அதுவே இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் ஒரே வழி!