முகப்புக் கட்டுரை : சனாதனத்தைத் தகர்க்கும் போர்க்கருவி பெரியாரியமே!

2022 செப்டம்பர் 16 -30 2022 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் அவற்றின் கிளை அமைப்புகளால் வெகுவாக உயர்த்திப் பிடித்துக் கொண்டாடப்படுவது சனாதன தர்மம்.
செத்துப்போன காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி (சந்திரசேகரன்) தனது தெய்வத்தின் குரல் முதல் பகுதியில், ஆதிசங்கரர் நெறியே சனாதனம்தான் என்கிறார்.
ஆரியர் அனைவரும் சனாதன தர்மமே சிறந்தது; நிலையானது, சமுதாய நலனுக்கு ஏற்றது என்கின்றனர். மேலும், ஆரியர் மேலாதிக்கத்தை, நலத்தை, உயர்வை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட சனாதனத்தை அவர்கள் தங்கள் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டனர்.
மற்றவர்களுக்கு எவ்வளவு கேடு செய்வதாய், இழிவு தருவதாய் இருந்தாலும், ஆரியர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கு நலம் பயக்கக் கூடியதாயின் அதைச் சிறந்தது, உயர்ந்தது, புனிதமானது என்பர். அதர்மத்தின் அசல் வடிவமான மனுசாஸ்திரத்தை மனுதர்மம் என்பர். அதேபோல் அதர்மத்தின் அடிப்படையாய் நிற்கும் சனாதனத்தையும் சனாதனதர்மம் என்றனர்.
ஆரியர்களுக்கு எது நன்மை பயக்கக் கூடியதோ அது ஆரியர் அல்லாதாருக்குக் கேடு தரக்கூடியது என்பது அப்பட்டமான உண்மை. அதனால்தான் தந்தை பெரியார், ஆரியர்கள் எதை ஆதரிக்கிறார்களோ அதை ஆரியர் அல்லாதார் எதிர்க்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டையே கொடுத்தார். அவர் சொன்னது நூறு விழுக்காடு நடைமுறைக்கு உகந்த நெறி, உண்மை நெறி.

சனாதனம் என்றால் என்ன?
சனாதனம் பற்றிப் பேசுகின்றவர்களில் பெரும்பாலோர் அதைப் பற்றி என்னவென்று அறியாமல் பேசுகின்றவர்களே ஆவர். வேதம் உயர்ந்தது என்று காலம் காலமாக கண்மூடித்தனமாகச் சொல்லிக்கொண்டு வருவது போன்றதே, சனாதனம் உயர்ந்தது என்பதும். எனவே, சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
‘சனாதன தர்மம்’ என்றால் நிரந்தரம் _ புராதன சட்டம் என்று பொருள்.
‘ஸ்மிருதி’ என்ற அடிக்கல் மீது எழுப்பப்பட்ட கட்டடம் போன்றது சனாதன தர்மம். செவிகளால் கேட்கப்பட்டது என்று இதற்குப் பொருள். ‘என்றும் நினைவில் நீங்காமல் இருப்பது’ என்று பொருள்.
தேவர்களிடமிருந்து கேட்டும் பெற்றும் அறிஞர்கள் வழங்கியது ‘ஸ்ருதி’. மனப்பாடமாக அவற்றை மனதில் பதித்துக் கொண்டவர்கள் தொடர்ந்து அவற்றை உச்சரித்து வந்ததால் ‘ஸ்ருதி’ பரவிப் படர்ந்தது.

ஆசிரியர் ஸ்ருதியைப் பாடப்பாட, அவரது சீடர்களும் தொடர்ந்து, நிறுத்தி நிதானமாக அவரைப் பின்பற்றிப் பாடுவது வழக்கம். மனதில் நன்கு பதியும் வரை அவர்கள் பாடி வந்தார்கள். பண்டைய நாள்களில் தங்கள் முன்னோர்கள் ஸ்ருதியைக் கற்றுக் கொண்டது போலவே இன்றும் பிள்ளைகள் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
ஸ்ருதியில் நான்கு வேதங்கள் உள்ளன. அவை _ ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம் ஆகியவையாகும்.
ஒவ்வொரு வேதமும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
1. மந்திரம் அல்லது சம்ஹிதா (தொகுப்பு)
2. பிராமணம்
3. உபநிஷதம்
மந்திரம் என்னும் முதல் பகுதி விசேஷ சக்தியும் நல்ல விளைவுகளும் தரக்கூடிய உச்சரிப்புகள் கொண்டதாய் நம்பப்படும் பகுதி. தேவர்களைத் துதிக்கும் பாடல்கள் வடிவில் இவை உள்ளன.
இரண்டாவது பகுதியான ‘பிராமணா’ ஒரு சடங்கு நடப்பதற்கான விதிமுறைகளை வழங்குகிறது. ஏற்கெனவே உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள் சார்ந்த பின்புலக் கதைகளைக் கூறும் ‘பிராமணா’, குறிப்பிட்ட சில சம்பிரதாயமான சடங்குகளை எப்படிச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று விளக்குகிறது.
மூன்றாவது பகுதியான உபநிஷதம், பிரம்மனைப் பற்றியும், அகம்_புறம் பற்றிய உண்மையையும், மனிதனுக்கும் உலகத்திற்கு மிடையே உள்ள பிணைப்பு மற்றும் விடுதலைக்கான வழிகள் பற்றியும் கூறுவது.

ஸ்ருதிக்கு அடுத்தபடியாக ஸ்மிருதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படை ஸ்ருதிதான். இதை தர்ம சாஸ்திரம் என்றும் கூறலாம். ரிஷி முனிகளால் படைக்கப்பட்ட நான்கு நூல்களை உள்ளடக்கியதே ‘ஸ்மிருதி’ (தர்ம சாஸ்திரம்).
அவை,
1) மனுஸ்மிருதி
2) யக்ஞவால்க்ய ஸ்மிருதி
3) ஷங்க லிகித ஸ்மிருதி
4) பராசர ஸ்மிருதி _ ஆகியவை.
இவை நான்குமே தனிமனித, சமூக வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளடக்கியவை. ஆரியக் கோட்பாடுகளின் சுருக்கமே மனுஸ்மிருதி. ஆரிய இனத்திற்கே சட்டம் வகுக்கும் வல்லுநராக விளங்கியவர் மனு.
விவாஸ்வத் என்பவரின் மகன்தான் இந்த ஏழாவது மனு என்பது மனுஸ்மிருதியின் சில சுலோகங்கள் மூலம் தெரிய வருகிறது. இந்த ஏழாவது மனு வகுத்த சில கோட்பாடுகள் மனுஸ்மிருதியில் உள்ளன.
சனாதன தர்மத்தின் அடிப்படை ஸ்ருதியும் ஸ்மிருதியும் என்றாலும், அவற்றுக்குப் பலம் சேர்க்கும் தூண்கள் போல் மேலும் இரு நூல்கள் உள்ளன. ஒன்று ‘புராணானி’. மற்றொன்று ‘இதிஹாஸ்’.(Ithias).

கல்வியறிவு குறைந்தவர்களுக்குப் புராணம் பல கதைகளை வழங்குகிறது. வேதங்களைக் கற்காதவர்களுக்கு புராணக் கதைகள் சுவையானவை. சில கதைகள் புரியாத புதிர்கள் போலவும் இருக்கும். ஓர் ஆசிரியரின் உதவியோடு புரிந்து கொள்ளலாம்.
இதிஹாஸ் (வரலாற்றில்) கவிதைகளால் ஆன இரு பெரிய தொகுப்பு நூல்கள். ஒன்று, ‘ராமாயணம்’. மற்றொன்று ‘மகாபாரதம்’.
சனாதனம் வாழ்வியலை இரு கூறுகளாகப் பிரிக்கிறது. ஷடங்கானி, ஆறு அங்கங்களைக் குறிக்கும் சொல். இந்த ஆறு அங்கங்களும் ஆறு கிளைகளாய்ப் பரந்து, விரிந்து, உலகளாவிய ஞானத்தை வழங்குகிறது. குறிப்பிட்ட ஆறு கிளைகளிலும் இலக்கணம், கைரேகை சாஸ்திரம், மொழியியல், கவிதை உள்பட 64 கலைகளும், 64 விதமான பாடங்களும் உள்ளன. இவையெல்லாம் எப்படிக் கற்றுக் கொள்வது என்பதையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆறு அங்கங்களையும் கற்று, தேர்ச்சி பெற்றவன் போற்றப்பட வேண்டிய மேதையாகிறான்.

இரண்டாவது பகுதியை ‘ஷட்தர்ஷனானி’ என்று அழைக்கிறது சனாதன தர்மம். ஆறு விதமான சமூகப் பார்வை என்று பொருள். ஆறு வழிமுறைகள் ஆறு விதிகள் என்றும் கூறலாம். இவற்றின் நோக்கம் _ தனி மனிதன் ‘நான்’ என்ற உணர்விலிருந்து விடுபட்டு வெளியேறி, பரமாத்மாவுடன் அய்க்கியமாகிவிட வழிவகுப்பது தான்.
நியாயா, வைஷேஷிகா
இறைவனைப் புரிந்து கொள்வது ஒன்றே உன்னதமான ஞானம் என்று பொருள். தனக்குள் இருக்கும் இறைவனை மனிதன் பல வழிகளில் புரிந்து கொள்ளலாம் என்பது மய்யக் கருத்து.
சனாதன தர்மம் விளக்கும் மேற்கண்ட ஆறு நெறிமுறைகளை கீழ்கண்டபடி பட்டியலிடலாம்.
1. நியாயா
2. வைஷேஷிகா
3. சங்க்யா
4. யோகா
5. மிமாம்ஸா
6. வேதாந்தம்
இவை அனைத்தையும் அறிந்தவன் உண்மையான ஞானம் பெறுகிறான் என்கிறது சனாதன தர்மம்.
மனிதன் தனது அனுபவங்கள் மூலமும், தர்க்கங்கள் மூலமும் அறிவு பெறுவதை ‘நியாயா’ ‘வைஷேஷிகா’ என்று சனாதனம் கூறுகிறது.

‘புருஷ்’ _ ‘பிரக்ருதி’ என்னும் இரண்டு அம்சங்களை ‘சங்க்யா’ என்ற பகுதி புரிய வைக்கிறது. ‘யோகா’ நமக்கு அய்ம்புலன்களின் ஆற்றலை விளக்குகிறது. அய்ந்து அங்கங்கள் நம்மை அன்றாடச் செயல்கள் புரிய வைக்கின்றன என்கிறது யோகா. இறைவனை அறிந்து கொள்ள அவற்றை மனிதன் சரியாகப் பயன்படுத்தி, தன்னை வளர்த்துக் கொள்ள முடியும். இறைவன் தனக்குள்ளேயே இருக்கிறான் என்ற புரிதல் மனிதனுக்கு ஏற்பட இவை யாவும் வழிவகுக்கின்றன.
‘மிமாம்ஸா’ என்னும் பகுதி ‘கர்மம்’ என்பதை விளக்குகிறது. நடப்பவை எல்லாமே கர்ம பலன்கள் என்பது மய்யக் கருத்து. கடைசிப் பகுதியான வேதாந்தம் _ கடவுள், ஆத்மா, ஜீவன் என்ற மூன்றையும் புரிய வைக்கிறது.
நான்கு வருணங்கள்
எண்ணற்ற பிறவிகள் மூலம் ஜீவாத்மாவின் நீண்ட பயணம் தொடர்கிறது. ‘வர்ணங்கள்’ என்ற பெயரில் அந்தப் பயணத்தில் நான்கு கட்டங்கள் உள்ளன என்கிறது மனு சாஸ்திரம்.
தான் வரையறுத்துள்ள சமூக ஆட்சி முறையில் அவற்றை நான்கு வகுப்புகள் அல்லது ஜாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார் மனு. சூத்திர ஜாதி, வைசிய ஜாதி, க்ஷத்திரிய ஜாதி, பிராமண ஜாதி என்பவை அவை.
ஜீவாத்மாக்கள் இந்த நான்கையும் கடந்தே செல்கின்றன. அந்த நான்கு நிலைகளையும் சமூக

 

ஆட்சி முறையின் அடிப்படையாக்கி விட்டது சனாதனம்.
சூத்திர ஜாதி:
சூத்திரன் ஊழியம் செய்வது மட்டுமே அவனுடைய கடமையாகிறது. இப்படிப்பட்ட இளம் ஜீவாத்மா, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள குடும்பத்தில் மட்டுமே பிறவி எடுக்கிறது. அப்படி பிறப்பவர்கள் சுமை கூலிகளாகவும், கைத்தொழில் செய்பவர்களாகவும், பிறருக்கு அடி பணிந்தே வாழ்பவர்களாகவும் காலம் கழிப்பார்கள். சனாதன தர்மத்தின் சமூகக் கோட்பாடுகளின்படி இப்படிப்பட்ட ஜீவாத்மாக்கள் சூத்திர ஜாதியில் பிறப்பார்கள்.
வைஸ்ய ஜாதி:
வைஸ்யா சனாதன தர்ம கோட்பாடுகளின்படி இரண்டாம் நிலை ஜீவாத்மாக்கள் வைஸ்ய ஜாதியில் பிறந்தவர்கள். சுயநலமின்றிப் பொதுநலம் கருதி வாழ்வதும், பிறர் வாழ்வு வளம் பெற உதவுவதும் இவர்களுடைய நோக்கமாகி அதற்கேற்றபடி பொருள்களை உற்பத்தியிடத்திலிருந்து மக்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்கள்.
க்ஷத்திரிய ஜாதி:
க்ஷத்திரியர் சட்டங்கள் இயற்றுவதிலும், ஆட்சி புரிவதிலும் வல்லவர்கள். இந்தப் பிரிவில் மன்னர்கள், நீதியரசர்கள், வழக்குரைஞர்கள், போர் வீரர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை உள்ள அனைவரும் இதில் அடங்குவர். சனாதன தர்ம ஆட்சிமுறைக் கோட்பாடுகளின்படி, இவர்கள் க்ஷத்திரிய ஜாதியினர்.
பிராமண ஜாதி:
பிராமணர் ஆலய வழிபாட்டில் ஈடுபடுபவர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள், வேதாந்திகள் _ இவர்கள் எல்லோரும் நான்காவது உயர்படிநிலை ஜாதியைச் சேர்ந்தவர்கள். இதற்கேற்ற ஜீவாத்மாக்களே பிராமணர்களாகப் பிறக்கிறார்கள் என்கிறது சனாதன தர்மம்.
ஒவ்வொரு ஜாதியினரும் மற்ற ஜாதியினரின் பணிகளை வர ம்பு மீறி செய்து விடுவதால்தான் பல தீங்குகள் விளைகின்றன. ஒவ்வொரு ஜாதியினரும் தங்கள் ஜாதிக்குரிய தங்கள் ஜாதிக்கேற்ற, கடமைக¬ ளப் புறக்கணிப்பதால் பல தீமைகள் உருவாகின்றன.
அவரவர் தங்கள் ஜாதிக்குரிய பண்பு-களுடன், குணாதிசயங்களுடன் நெறி தவறாமல் வாழ்ந்தாலே போதும். ஒவ்வொரு ஜாதியினரும் தத்தமது தர்மங்களைக் கடைப்பிடித்து அவற்றின்படி வாழ்ந்தாலே நாளடைவில் ஜாதிகள் சார்ந்த குழப்பங்களும் விவாதங்களும் மறைந்தே போகும்.
வேதங்களைக் கற்பது, கற்பிப்பது, வேள்வி, யாகம், வழி காட்டுதல், ஏற்பது, வழங்குவது போன்றவை _ பிராமணனுக்கு;
சமுதாய நலம், தியாகம், பற்றற்ற நிலை, வேதப் பாராயணம் போன்றவை _ க்ஷத்திரியனுக்கு; வணிகம், கால்நடை _ பராமரிப்பு, உழவுத்தொழில் போன்றவை _ வைஸ்யனுக்கு.
இறைவன் சூத்திரனுக்குக் கட்டளையிட்டுள்ள ஒரே கர்மம், கடமை – எவ்வித மறுப்பும் கூறாமல், தயக்கமில்லாமல் மற்ற மூன்று ஜாதியினருக்கும் கீழ்ப்படிந்து ஊழியம் செய்வது, சேவை செய்வது மட்டுமே.

 

சனாதன தருமத்தின் அடிப்படைக் கொள்கை வருணாஸ்ரமம். பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணப் பிரிவுகளையும் கடவுளே படைத்ததால், இவை பிறப்பால் வருபவை. இவை மாற்ற முடியாதவை. பரம்பரை பரம்பரையாய் வருபவை. எனவே, இப்பிரிவுகள் நிலையானவை. இதுவே சனாதன தருமம். சனாதனம் என்றால் நிலையானது. நிலையான மாற்ற முடியாத வருணாஸ்ரம தர்மம் என்பதால் அது சனாதன தர்மம் எனப்பட்டது” என்று சனாதனத்திற்கு விளக்கம் கூறியுள்ளனர்.
இப்படிப்பட்ட சனாதன தர்மம்தான் வேண்டும். அதன்படிதான் அரசு செயல்பட வேண்டும் என்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். அனைத்து மக்களின் நலனையும், உரிமையையும் காக்க வேண்டியவர். ஆனால், அவர் ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிதீவிரத் தொண்டராகவே செயல்பட்டு வருகிறார்.
அரசு விழாக்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் வலியுறுத்திப் பேசிவருகிறார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசும் அதன் முதன்மையான தலைவர்களும் சனாதன செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், சனாதன தர்மத்தையே அரசியல் சாசனமாக மாற்றவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையானாலும், ‘நீட்’ போன்ற தேர்வுகளானாலும், தனியார் மயமாக்கலானாலும் அனைத்தும் சனாதன தர்மத்தின் இலக்குகளை அடைய மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களேயாகும்.
தங்கள் சனாதன செயல்திட்டங்களை நிறைவேற்ற கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களையும், சி.பி.அய்., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றையும், நீதித்துறை, அரசு எந்திரங்கள் போன்றவற்றையும் ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு ஏற்ப செயல்படும் அமைப்புகளாக ஆக்கியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உள்வாங்கிப் பயிற்சி பெற்றவர்களை இவற்றில் நுழைத்து, அவர்கள் மூலம் இவ்வமைப்புகளை தங்களின் ஆணைக்கிணங்க செயல்படச் செய்கின்றனர்.
ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக் கூறாமல் பி.ஜே.பி. அரசின் பெருமைகளை மட்டுமே பேசக் கூடியனவாக ஆக்கி வைத்துள்ளனர். அரசின் முதன்மைப் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற ஆள்களை அமர்த்தி, அவர்கள் மூலம் ஆட்சி அதிகாரங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.
கடைசிப் புகலிடமான நீதிமன்றங்களிலும் தங்கள் ஆள்களை அதிக அளவில் அமர்த்தி, தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பெரியாரே தீர்வு!
இப்படிப்பட்ட சூழலில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்துவதன் மூலமும், மதச்சார்பற்ற அணியை ஆட்சியில் அமர்த்துவதன் மூலமும் மட்டுமே, இந்த பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அதற்கு தமிழ்நாட்டைப் போலவே மற்ற மாநிலங்களிலும், சுயமரியாதை உணர்வும், சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற பெரியாரிய சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும். முதல் கட்டமாக, எல்லா மாநிலங்களிலுமுள்ள மதச் சார்பற்ற தலைவர்கள் பெரியார் சிந்தனைகளை, கொள்கைகளை நன்றாக உள்வாங்கி, தங்கள் மாநில மக்களை தமிழ்நாட்டு மக்களைப் போன்று உணர்வுள்ளவர்களாக உருவாக்க வேண்டும்.
தங்கள் சுயகவுரவம், தன் முனைப்பு, பதவி வேட்கை, தற்செருக்கு போன்றவற்றை அறவே ஒதுக்கிவிட்டு, பி.ஜே.பி. ஆட்சியை அகற்றுவது ஒன்றையே ஒரே இலக்காகக் கொண்டு, தங்களுக்கிடையேயுள்ள விருப்பு வெறுப்புகளைக் கைவிட்டு மதச்சார்பற்ற, ஜனநாயக அணி என்ற ஒற்றைப் பிணைப்பில் உணர்வுபூர்வமாய் ஒருங்கிணைந்து, ஓயாது உழைத்து, மக்களின் முழு ஆதரவையும் தங்கள் பக்கம் திருப்பி வெற்றி காண வேண்டும்.

பி.ஜே.பி. ஆட்சி பணக்காரர்களுக்கும், உயர் ஜாதிக்காரர்களுக்குமான ஆட்சி; அவர்கள் நலனுக்காக மட்டுமே நடத்தப்படும் ஆட்சி. ஏழை எளிய மக்களை மேலும் கீழ்நிலைக்குத் தள்ளும் சூழ்ச்சி நிறைந்த ஆட்சி என்பதை அடித்தட்டு மக்கள் ஆழ உணரும்படி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சனாதனம் இவையெல்லாம் எடுபடாமல் போவதற்கு ஒரே காரணம் இங்கு பெரியார் கொள்கை பின்பற்றப்படுவதேயாகும்.
அதேபோல் எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., மதவெறி எதிர்ப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்பி, எழுச்சி உருவாக்கி, அவர்களை மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், சமூக சமத்துவத்துக்கும், சம உரிமைக்கும் ஆதரவாய் அணிதிரட்டி, தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும்.
யார் பிரதமர் என்ற போட்டா போட்டியை அறவே தவிர்த்து, தேர்தல் வெற்றிக்குப் பின் சரியான, பொருத்தமானவரை பிரதமராய்த் தேர்வு செய்ய வேண்டும் என்கிற புரிதல் அடிப்படையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும். அதுதான் பிளவையும், வாக்குகள் பிரிவையும் தடுத்து மதச்சார்பற்ற அணிக்கு வெற்றியை ஈட்டித் தரும்.

இந்து மதம் என்பது சனாதன மதம். சனாதனம் என்பது ஆரிய பார்ப்பனர் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமானது. ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு எதிரானது. அவர்களை மேலும் ஆழத்தில் தள்ளி புதைக்கக் கூடியது என்ற உண்மையை இந்தியா முழுமையிலும் உள்ள எல்லா மாநில மக்களும் உணரும்படி செய்ய வேண்டும். அதற்கு பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் உடனடியாக மக்கள் மத்தியில் தீவிரமாய்ப் பரப்பப்பட வேண்டும். ஆம். சனாதன ஒழிப்பிற்கும் பெரியார் கொள்கைகளே சரியான தீர்வு. சனாதன ஒழிப்புப் போருக்கு பெரியாரியமே சரியான கருவி!
பெரியார் பிறந்த நாள் விழா என்பது வெறும் ஆடம்பர நிகழ்வு அல்ல. அது கொள்கைப் பரவலுக்கான செயல்திட்டம். எனவே, பெரியார் பிறந்த நாளை சனாதன ஒழிப்பு செயல்முறையாக எல்லா இடங்களிலும் கொண்டாடுவோம்! வெற்றி பெறுவோம்! வெல்க பெரியார் நெறி!