மஞ்சை வசந்தன்
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், கணினியின் பயன்பாடும், மின்னணு யுகத்தின் அதிவேக வளர்ச்சியும் உலகில் புதிய தொழில்துறை அத்தியாயத்தைப் படைத்து வருகின்றன.
வெளிநாடுகளில் நமது இளைஞர்கள்
இத்துறையில் பொறியியல் _ மின்னணுவியலில் படித்த நம் நாட்டு இளைஞர்களின் நேர்மையான உழைப்புக்கு உலகளாவிய வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தொழில்துறையில் நல்ல தேவை (Demand) ஏற்பட்டு, பலரும் அந்நாடுகளில் தங்கி தொழில் புரியும் வாய்ப்பை _ குடியுரிமை பெறாவிட்டாலும்கூட பெற்றுள்ளனர்!
இது அந்த உள்நாட்டுவாசிகளுக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் தந்தாலும், இவர்கள் அளவுக்குக் கடு மையாக உழைத்துக் கடமையாற்றுவதில் அவர்களால் ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், வேறு வழியின்றி நம் இளைஞர்களைப் புறந்தள்ள முடியாத நிலையே உள்ளது.
அக்கிரகாரத்தின் _ பார்ப்பனர்களின் தனி உடைமை யாகவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கல்வி, உத்தியோக உரிமை, 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் மற்ற
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொது உடைமை, பொது உரிமையாக ஆயிற்று!
அதனால்தான் கல்வியைக் கற்று, வெளிநாட்டில் தொழில்நுட்பத் துறையில் ‘இந்தியர்கள்’ நுழைந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்களுக்குள்ள தந்திர உபாயங்கள்மூலமும், ஆரிய பார்ப்பனர்கள் படிப்பில் முந்திய பந்தியில் அமர்ந்து பயன்பெற்ற காரணத்தாலும் அவர்களில் பலர் அங்கும் முந்திக் கொண்டனர்!
ஒடுக்கப்பட்டோர், ‘சூத்திர _ பஞ்சம’ தலித்துகளான நமது இளைஞர்கள் அந்தப் பந்தயத்தில் இப்போது பங்கேற்று, அவர்களைத் தாண்டும் அறிவு ஆற்றலும், தகுதியும், திறமையும் பெற்று (பெரிய தனியார் துறையான அய்.டி. கம்பெனிகளில் நுழைந்து பணியாற்றி) முன்னேறி வரும் நிலை உள்ளது.
இதைத் தடுக்க, அங்கே முன்னே சென்று அக்கம்பெனிகளின் முக்கிய பதவிகளில் மேலாளர்களாக உள்ள பார்ப்பனர்கள் அடுத்து பதவி உயர்வு பெற்று, அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் மேலே வரவிடாமல் நமது இளைஞர்களை அழுத்தி வைக்க ‘அவாளுக்கே’ உரிய ‘சூழ்ச்சி’ வலைகளையும், உள்ளடி வேலைகளையும் செய்து தடுத்து வருகின்றனர்!
ஜாதிப் பாகுபாடுகள் தலைமுறை தலைமுறையாக இந்தியர்களைப் பிரித்து, கூறுபோட்டு வந்துள்ளன என்பது நமக்கெல்லாம் தெரிந்த கசப்பான உண்மையே. அமெரிக்க மாநிலங்களில் இயங்கிவரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்போது ஜாதிகளின் படிநிலை அமைப்புப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக ராய்டர்ஸ் (Reuters) என்னும் செய்தி பரிமாற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற பதில்
“சிஸ்கோ சிஸ்டம்ஸ்” என்னும் அந்த நிறுவனத்தில் தலித் ஜாதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். உயர்ஜாதியைச் சேர்ந்த மேலதிகாரிகள் இருவர் தனக்கு பல விதங்களில் இடையூறு செய்து வருவதாக பணி நியமன கட்டுப்பாட்டு அமைப்பிடம் அந்தப் பொறியாளர் புகார் செய்துள்ளார். அவர் சார்பில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டை நிறுவனம் ஏற்க மறுத்துள்ளது. தீவிரமாக விசாரித்ததில் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது, அப்படியே நடந்திருந்தாலும் அது குற்றமல்ல என்றும், கலிஃபோர்னியாவில் ஜாதிக் குறியீடு சட்ட விரோதமானதல்ல என்றும் இந்த நிறுவனம் இறுமாப்புடன் பதிலளித்துள்ளது. இந்த விவகாரம் நாற்புறமும் பரவிவிட்டது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதமே பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனால் விழித்துக் கொண்டன.
பணிநியமன விவகாரத்தில் அமெரிக்காவில் இத்தகைய வழக்கு தொடுக்கப்பட்டது இதுவே முதன்முறை எனலாம். இந்த விவாதம் இதற்கு முன் இந்த அளவுக்கு பேருரு எடுத்ததில்லை. CISCO SYSTEMS விவகாரம் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களை வலைவீசிப் பிடித்து பணியில் அமர்த்தி வருவது ஏன்? திறமைசாலிகள், ஆற்றல் மிக்கவர்கள் இந்தியர்கள் என்பதால்தான். எனவே, அவர்களை இழந்துவிட அமெரிக்க நிறுவனங்கள் தயாராக இல்லை. எனவே, கோட்பாடுகளில், விதிமுறைகளில் அவசர அவசரமாக மாறுதல்கள், ஜாதிக்குறியீடு / ஜாதி வேறுபாடு நீக்கம் போன்றவை செய்யப்படுகின்றன.
சட்டத் தெளிவின்மை
வேறுபாட்டு விதிமுறைகள் குறித்து அமெரிக்க நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாகக் கண்டறிவதில் பல சமூக ஆர்வலர்களும், தொழிலாளர் கூட்டமைப்பு-களும் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஜாதிப் பாகுபாட்டை பணி நியமனங்களின் போது தவிர்க்கும்படி எல்லா தொழில்நுட்ப நிறுவனங்களும் வற்புறுத்தி வருகின்றன.
இருப்பினும், முழுமாற்றம் ஏற்படவில்லை என்கிறது “ராய்டர்ஸ்’’ ஊடக நிறுவனம். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், சில நிறுவனங்கள் மட்டும்தான் பணிநியமன விதிகளைத் திருத்தி வருகின்றன என்பது “ராய்டர்ஸ்’’ வழங்கும் தகவல்.
“சட்டமே தெளிவாக இல்லாததுதான் குழப்பத்துக்குக் காரணம்’’ என்கிறார் தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரும், சட்ட வல்லுநருமான கெவின் பிரவுன் (Kevin Brown) என்பவர். ஜாதிகள் சார்ந்த பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வரும் அறிஞர் இவர். பல நிறுவனங்களில் நியமனக் கோட்பாடுகள் நிரந்தரமாக ஒருவிதமாக இருப்பதில்லை “ஜாதி வேறுபாடு சட்டப்படி தடுக்கப்படுமா என்பதை உறுதியாக பலரால் கூறமுடியவில்லை. எனவே, பல பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றன’’ என்கிறார் பேராசிரியர் கெவின்.
“பணி நியமனங்களின்போது ஜாதி பற்றிய குறிப்புகளை அடியோடு நீக்கும்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் நிருவாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டோம்’’ என்கிறார்கள் ‘Apple’ நிறுவனத்தினர். “எந்தப் பணியாளருக்கும் ஜாதி வேறுபாட்டால் இடையூறு ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் கண்டிப்பாக இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் சமத்துவம் பாதிக்கப்படாது. பணியாளர்களின் பயிற்சிக் காலத்தில்கூட ஜாதி சார்ந்த குறிப்புகளும் விவரங்களும் தவிர்க்கப்படுகின்றன” என்கிறார்கள் ‘கிஜீஜீறீமீ’ நிறுவன உயர்மட்ட அதிகாரிகள்.
IBM (அய்.பி.எம்) நிறுவனமும் ஜாதி வேறுபாட்டை அறவே நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. CISCO SYSTEMS விவகாரம் ஏற்படுத்திய சலசலப்பால் இவர்களும் பணி நியமனங் களின்போது ஜாதி சார்ந்த குறிப்புகளைத் தவிர்க்க முடிவு செய்து விட்டனர். இருப்பினும் மிஙிவி நிறுவனத்திற்காக இந்தியாவில் பணிபுரியும் நிருவாகிகள் பற்றிய விவரங்களிலிருந்து ஜாதி சார்ந்த குறிப்புகள் இன்னும் நீக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் _ தாமதமின்றி.
ஜாதியால் பேதம்:
“ஜாதி வேறுபாட்டுக் கொடுமை அமெரிக்க மாகாணங்களில் பெருமளவில் இன்றும் நிலவி வருகிறது’’ என்கிறார், பொறியாளர் மயூரிராஜா என்பவர். கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர் இவர். கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான Alphabet Workers Union (AWU) என்னும் தொழிலாளர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளவர் இவர். ‘தலித்’ வகுப்பைச் சார்ந்த ஊழியர்களுக்கு இலவசமாகச் சட்ட ஆலோசனை வழங்கியும் உதவி வருகிறதாம் AWU என்னும் கூட்டமைப்பு.
பணிநியமன விதிமுறைகளில் ஜாதி சார்ந்த தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை 1600 கூகுள் பணியாளர்கள் உலகம் முழுவதும் உள்ள Google கிளைகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்தக் கோரிக்கையைப் படித்துப் பார்த்த REUTERS அதிகாரிகள், அதனை அப்படியே தலைமை நிருவாகி சுந்தர் பிச்சைக்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். ஜூலை மாதம் அனுப்பப்-பட்டதை, கடந்த வாரம் மறுபடியும் சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ளனர் _ அவரிடமிருந்து பதில் எதுவும் வராததால்.
விவாதிக்க மறுப்பு:
“பிறந்த நாடு, மரபு மற்றும் இனம் சார்ந்த வேறுபாடுகளுக்குள்ளேயே ஜாதி வேறுபாட்டு அம்சமும் சேர்ந்துள்ளது. எனவே, தனியாக விதிமுறைகளிலிருந்து எதை நீக்குவது?” என்று கூகுள் நிறுவனம் கேட்டு, REUTER அதிகாரி-களையே குழப்பியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தற்போதைய பணிநியமனக் கொள்கைகள் குறித்து REUTER அதிகாரிகள் பல முறை கேட்டும், தெளிவாகவும் விரிவாகவும் விளக்கம் அளிக்கவே இல்லையாம், கூகுள் Google நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள். இதுபற்றி மேலும் விவாதிக்கவும் மறுத்து விட்டார்களாம் அவர்கள்.
ஜாதி வேறுபாட்டை எதிர்ப்போம்:
“ஜாதி வேறுபாட்டை நாங்களும் எதிர்க்-கிறோம், தவிர்க்கிறோம்” என்கிறார்கள் அமேஸான், டெல், ஃபேஸ்புக், மைக்ரோ-சாஃப்ட், கூகுள் ஆகிய பிரபல நிறுவனத்தினர். “மரபு, குடியுரிமை போன்ற விவரங்களைத் தவிர்ப்பது போலவே ஜாதி வேறுபாட்டையும் பணிநியமனங்களில் இனிமேல் தவிர்ப்போம் என்று உறுதியளித்துள்ளனர் _ ஃபேஸ்புக்கின் உரிமையாளர்களான META நிருவாகிகள்.
இடஒதுக்கீட்டின் பயன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பல மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு முறை நல்ல பலனை அளித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் மேற்கத்திய நாடுகளில், தொழில்நுட்பம் சார்ந்த (I.T.) நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். பிரபலமான இந்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி வழங்கப்-பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அயல் நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் ஜாதி அவலம்!
அமெரிக்க தொழில்நுட்ப (அய்.டி) நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பன்னிரண்டு ‘தலித்’ வகுப்பினரை அதிகாரிகள் அணுகி விசாரித்தபோது, “ஜாதி வேறுபாட்டுக் கொடுமை எங்களை அயல்நாட்டிலும் விட்ட-பாடில்லை!’’ என்று வேதனையோடு கூறினார்-களாம். பன்னிரண்டு ஊழியர்களும், “பெயருக்கு முன்னால் நாங்கள் போடும் இனிஷியல்களை விலாவாரியாக விளக்கச் சொல்கிறார்கள். வட்டம், மாவட்டம், மண்டலம், பூர்விகம், மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கம் இவற்றையெல்லாம் கேட்டு, துருவித் துருவி ஆராய்ந்த பிறகே வேலைவாய்ப்பு’’ என்று பன்னிரண்டு பேரும் புலம்பினராம்.
“இப்படிப்பட்ட தகவல் சேகரிப்புகளின் விளைவு? பல ஊழியர்கள் முன்னுரிமை பெற்றுவிட்டனர். பலருக்குப் பதவி உயர்வுகளும் பல சலுகைகளும் வழங்கப்பட்டு நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்” என்று REUTERS அதிகாரியிடம் கூறியுள்ளனர் _ பாதிக்கப்பட்ட இந்தியப் பணியாளர்கள். அன்றாட நிருவாகப் பணிகளிலும், நிகழ்வு-களிலும் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறார்-கள் என்கிறது REUTERS . _ மாற்றங்கள் முழுமையடையவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றுகிறது. எனவே, இப்பதிப்பை அறவே அகற்றி அனைவரும் சமம் என்ற நிலை பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம்.
ஊழியர்களின் அச்சம்
இந்தியப் பணியாளர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து REUTERS நிறுவனத்தால் நேரடி நடவடிக்கையில் இறங்க முடியவில்லை. காரணம்? தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று பன்னிரண்டு ஊழியர்களும் அச்சத்துடன் கேட்டுக்கொண்டதுதான் காரணம்.
“வேலை பறிபோய்விடுமே என்று அவர்கள் பயந்ததால் நாங்களும் அத்துடன் வேறு வழியின்றி விட்டுவிட்டோம் _ என்கிறார்கள் REUTERS அதிகாரிகள். ஜாதி வேறுபாட்டுக் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் ஏற்கெனவே இந்தியப் பணியாளர்கள் இருவர் வேலையை உதறிவிட்டு நாடு திரும்பிவிட்ட-தாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்த-தாம். “எனவே, அந்தப் பன்னிரண்டு ஊழியர்-களும் வாய்திறக்கவே பயந்ததில் வியப்பேது-மில்லை என்கிறார்கள் REUTERS அதிகாரிகள்.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை:
1,65,000க்கும் அதிகமான முழுநேரப் பணியாளர்களைக் கொண்ட ‘Apple’ நிறுவனம் ஏற்படுத்திய அதிரடி மாற்றம் தான் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. அய்ஃபோன் (I – Phone) தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இவர்கள், இனிமேல் பணி நியமனங்களில் ஜாதி சார்ந்த தகவல்கள் எதையும் கேட்கப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பதினெட்டு விதிமுறைகள் இவர்களுடைய “தவிர்க்கப்பட வேண்டியவை’’ பட்டியலில் உள்ளன. இது 19ஆவது சேர்ப்பு.
ஆப்பிள் நிறுவனம்தான் ஜாதிய வேறுபாடு-களை, விருப்பு வெறுப்புகளை தடை செய்ததில் முதல் இடத்தில் உள்ளது. பணியாளர்களுக்-கிடையே பேதம், விருப்பு வெறுப்பு காட்டுவதைத் தடை செய்யும் பல விதிமுறை-கள் முன்னவே இந்நிறுவனத்தில் இருப்பினும், தற்போது ஜாதி, பால் வேறுபாடு, இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் எந்த பேதமும், விருப்பு வெறுப்பும் காட்டக் வடாது என்ற விதியையும் ஆப்பிள் நிறுவனம் சேர்த்து அதைக் கடுமையாகப் பின்பற்றவும் செய்துள்ளது.
மேலும் இந்த நிறுவனம் தன் பணியாளர்-களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இதுபோன்ற பேதங்களைக் காட்டக் கூடாது என்று சிறப்பு வகுப்புகள் நடத்தி விளக்கியும் வருகிறது. இதனால், இந்த நிறுவனத்தைப் பணியாளர்-களும், மக்களும் வெகுவாகப் பாராட்டி-யுள்ளனர். IBM என்ற மற்றொரு பெரிய நிறுவனமும் ஜாதிக்கு எதிரான விதிமுறைகளை வகுத்துள்ளது.
நிறுவனங்களுக்குப் பயிற்சி…
Emtrain (எம்ட்ரெய்ன்) என்னும் அமெரிக்க நிறுவனம், பாரபட்சமான செயல்பாடுகளைத் தவிர்க்க, ஏறத்தாழ 550 நிறுவனங்களுக்குப் பயிற்சியளித்து வருகிறதாம். இதை ‘anti-bias training’ என்கிறார் Emtrain அமைப்பின் தலைமை நிருவாகி ஜெனைன் யான்ஸி (Janine Yancey) என்பவர்.
“தேவையற்ற விதிமுறைகளாலும் தகவல் சேகரிப்புகளாலும் பணியாளர்களை இழந்து-விட எந்த நிறுவனமும் விரும்பாது. பணியாளர்களின் உற்சாகமின்மையால் உற்பத்தி பாதிக்கப்படும். ஜாதிப் பாகுபாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, நிறுவனங்கள் அதைத் தவிர்க்கவே விரும்பும்” என்கிறார் ஜெனைன் யான்ஸி. மனிதவள மேம்பாடு சார்ந்த புகார்களும் ஜாதி வேறு பாட்டு விவகாரங்களால் வரக்கூடும் என்கிறார் அவர்.
CISCO SYSTEMS நிறுவனத்தில் பாதிக்கப்-பட்டிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அந்தப் பொறியாளருக்கு நீதி கிடைக்க தொடரப்பட்ட வழக்கால், அனைத்து அமெரிக்க அய்.டி. நிறுவனங்களிலும் அசாதாரணச் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. காலப்போக்கில் வெற்றி சமூகநீதிக்காகப் போராடுபவர்களுக்கே!
இந்தியாவில் பல நூறாண்டுகளாக ஜாதிய ஆதிக்கமும், அடக்குமுறையும், புறக்கணிப்பும், உரிமை மறுப்பும், இழிவும் செய்து வந்த ஆரிய பார்ப்பனர்கள், அயல்நாடுகளுக்குச் சென்று பணியாற்றும் நிலையிலும் இந்த ஆதிக்கத்தை, மனித எதிர் செயலைத் தொடர்வ்து மிகவும் கண்டிக்கத்தக்து ஆகும்.
ஆரிய பார்ப்பனர்கள் சாஸ்திரப்படி பார்த்தால் அவர்கள் கடல் தாண்டி செல்லவே கூடாது. மற்றவர்களை ஒடுக்க, அடிமைப்படுத்த சாஸ்திரங்களைக் கடுமையாக நடைமுறைப்-படுத்த நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாட முயலும் அவர்கள், அவர்களின் சுயநலம் என்று வருகின்றபோது அவற்றைச் (சாஸ்திரங்களைக்) குப்பையில் தள்ளிவிட்டு தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வது அவர்களின் வழக்கம். அப்படித்£ன் கடல் தாண்டக் கூடாது என்ற சாஸ்திரத்தையும் சாக்கடையில் வீசிவிட்டு அயல்நாட்டிற்கு அணி அணியாய் சென்று வாழ்வை வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அப்படி சாஸ்திர விரோதமாய், சாஸ்திரத்தை எறிந்துவிட்டுச் சென்றவர்கள் ஜாதியை மட்டும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு சென்று அயல்நாடுகளிலும் அதை நிலைநாட்ட முற்படுவது அடாவடிச் செயல், அநியாயச் செயல் அல்லவா?
எனவே, அயல்நாடுகளில் இல்லாத பேதங்களை இங்கிருந்து கொண்டு சென்று அமல்-படுத்த முற்படும் ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராய் அயல்நாட்டில் பணிபுரியும் ஆரிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்கள் அணி-வகுத்து போராட வேண்டும். நல்வாய்ப்பாக அயல்நாட்டில் உள்ள பெரும் கம்பெனிகள் மனித தர்மத்தை உணர்ந்து செயல்படுவதால் அதிகம் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், எதிர்வினை ஆற்றாமல், எதிர்ப்பு காட்டாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் அவர்களின் சதிவேலை தொடரும். எனவே, இப்போதே அதை முறியடித்து பேதமற்ற நிலையை உருவாக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
அயல்நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் ஜாதி பேதத்தால் பாதிக்கப்படும் அவலம் அன்றைக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தது. தந்தை பெரியார் அவர்கள் அந்நாடுகளில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் பெரும் விளைவாய், அங்கு திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டு, விழிப்பு ஏற்பட்டு, ஜாதி அடிப்படையிலான பாதிப்புகள் பெருமளவிற்கு ஒழிக்கப்பட்ட வரலாறு உண்டு. அதன் விவரங்களை அடுத்த இதழில் காண்போம்.