எண்ணம்

பிப்ரவரி 16-29

இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்ப்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவையாக இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டி இருக்கிறது. – கவிஞர் சேரன்,ஈழப் பேராசிரியர், கனடா


 

ஒபாமாவும் சரி, குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களும் சரி போர் வெறி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்கின்றனர். இதனால் அமெரிக்க மக்கள்  வெறுத்துப் போய் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரண்டு தரப்புக்கும் எதிராக ஒரு ரோபோவை நிறுத்தினால் கண்டிப்பாக மத்திய தர மக்கள் அந்த ரோபோவுக்குத்தான் வாக்களிப்பார்கள். அந்த அளவு அரசியல்வாதிகள் மீது கடுப்பில் இருக்கிறார்கள். – ஃபிடல் காஸ்ட்ரோ, அதிபர், கியூபா


 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21, ஒருவருடைய அந்தரங்க சுதந்திரத்தையோ அல்லது உயிர் வாழும் உரிமையையோ பறிக்க யாருக்கும் உரிமையில்லை என்கிறது. அய்.பி.சி. பிரிவு 312 முதல் 318 வரை கருக்கொலை யின் அபாயங்களையும் அதைச் செய்தால் கிடைக்கும் சிறைத் தண்டனையையும் வரையறை செய்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஆண்டுக்கு 2.5 லட்சம் பெண் குழந்தைகள் ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டு கருவிலேயே அழிக்கப்பட்ட பிறகும்கூட யாருக்கும் இச்சட்டங்கள் தண்டனை பெற்றுத் தந்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தின் பங்கு இதில் 20,000 ஆகும். எந்த பயமும் இன்றி, குற்ற உணர்வும் இன்றி பெண் இனம் சத்தமின்றி அழிக்கப்பட்டு வருவது இனப் படுகொலைக்கு ஒப்பானது. – கவிஞர் சல்மா, மேனாள் தலைவர், தமிழக சமூக நல வாரியம்


 

திருமணமான பெண் ஒருவர் தமக்குக் குழந்தை இல்லாத நிலையில் உயில் எழுதாமல் இறக்க நேரிட்டால் அவரது வங்கி சேமிப்பு உள்ளிட்ட சொத்துக்களுக்கு அவரது கணவரும் அவரைச் சார்ந்த உறவினரும்தான் உரிமை கொண்டாட முடிகிறது. அச்சொத்துக்களைக் கேட்க அப்பெண்ணின் பெற்றோருக்கோ உறவினருக்கோ உரிமை தரப்படவில்லை.

இதுகுறித்த ஒரு வழக்கில் இந்து சொத்துரிமைச் சட்டத்தில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இப்படி, சட்டங்களை இயற்றுவோரும் அவற்றைச் செயல்படுத்துவோரும் ஆணாதிக்க மனநிலையுடன் உள்ளதால் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற இன்னும் போராட வேண்டியுள்ளது. – பிரபா சிறீதேவன், (ஓய்வு), நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்


 

நாங்களும் மனிதர்கள்தான். எங்களை மட்டும் சமுதாயம் ஏன் வேறுவிதமாகப் பார்க்கிறது? பெண்கள் இப்போது வாழ்வில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களில் கூட சிலர் பாலியல் தொழில் செய்கிறார்கள். அவர்களை அரவணைத்துக்கொள்ள பெற்றோர், உற்றார், உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு யாரும் இல்லை. – ரோஸ், அரவாணி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்


 

நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. 10ஆம் வகுப்புவரை மாணவனைப் படி படி என விரட்டிவிட்டு, 11இல் சுதந்திரமாக விட்டுவிடுகிறோம். மீண்டும் 12ஆம் வகுப்பில் விரட்டுகிறோம். அதேபோல் 12ஆம் வகுப்புப் பாடம் ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து மார்ச் வரை நடத்தத் தயாரிக்கப்பட்டது.

10 மாதத்திற்குப் புத்தகம் எழுத வேண்டியது, பின் அதை ஆறு மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டியது. அதையும் அலுவலாகவே முடிக்கிறோம். அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

– கார்மேகம், இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர், தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *