கேள்வி : தந்தை பெரியார் கேட்ட திராவிட நாடு கிடைத்திருந்தால், இன்றைக்கு நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? – காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : வரலாற்றில் இப்படி நடந்திருந்தால் என்ற வாதத்திற்கே இடம் கிடையாது. இது மட்டுமா? எத்தனையோ பிரச்சினைகள் தலைவலிகள் எழாதே! சுண்டைக்காய் இலங்கை ஈழத்தமிழர் வாழ்வுரிமையை எப்படி கேள்விக் குறியாக்கியுள்ளது. அந்நிலை ஏற்பட்டிருக்குமா? இப்படி பல விடைகள் சொல்லலாம். ஆனால் அது நடைமுறைக்கு எந்த அளவுக்கு உதவும் என்றும் பகுத்தறிவுப் பார்வையோடு பார்த்து, தற்போதுள்ள சூழலில் மக்கள் கடமையை நினைவூட்டுவதே மேலானது.
கேள்வி : திருப்பதி தேவஸ்தானம் மாதிரி கோவில்களை நாடெங்கும் அமைப்பது எந்த வகையில் நாட்டுக்கு நன்மை பயக்கும்? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி
பதில் : பார்ப்பனப் புரோகித வர்க்கத்தின் சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்கம் வளரும்; பக்தியில் மக்கள் புத்தியைப் பரவலாக இழப்பார்கள்! அதன் விளைவு இது!
கேள்வி : திராவிடர்கள், ஆதிதிராவிடர்கள், இவர்களுக்குள் வேற்றுமை என்ன? ஒற்றுமை என்ன? – வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில் : ஆதி என்ற இரண்டு எழுத்துகள்தான்! ஆதி அதிக உரிமையுடைய உழைப்பாள சகோதரர்கள் கொண்ட பிரிவு!
கேள்வி : எம்.ஜி.ஆர் மறைந்து 24 ஆண்டுகள் ஆகியும்கூட, அவருக்கு மக்கள் செல்வாக்கும், புகழும் இன்னும் நிறைவாகவே இருக்கிறதே… அதன் காரணம் என்ன? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : அவரது கொடைவள்ளல் தன்மை! மேலும் பிரச்சாரம் _ ஊடகங்கள், தொலைக்காட்சிகள் சக்தி.
கேள்வி : உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சில மாநில அரசுகளே மதிக்கத் தவறுகிறதே. இதற்கு என்ன தீர்வு? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சட்ட நிபுணர்களும் இந்த நீர் எழுத்தை, தடுக்க உபாயம் புது வழி காணவேண்டும்!
கேள்வி : கேரளாவில் உள்ள தேசியக் கட்சிக்காரர்களான காங்கிரஸ்காரனும், பி.ஜே.பி.காரனும், கம்யூனிஸ்ட்காரனும் மலையாளி என்ற உணர்வோடு இருக்கும்போது, இங்கேயுள்ள தேசியக் கட்சிக்காரர்கள் மட்டும் இந்தியனாய் இருந்துகொண்டு தமிழர்களைக் காட்டிக்கொடுப்பது சரியா? – நா. இராமன், சென்னை
பதில் : தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு என்று காங்கிரஸ் தேசியக்கவிஞர் பாடினாரே – மறந்துவிட்டீர்களா?
கேள்வி : என்றுமே இருளில் மூழ்காத நெய்வேலி நகரத்தை இருளாக்கி, பசுமையாக இருந்த அந்நகரைப் பாலைவனமாக்கிய தானே புயல், எங்கள் கடலூர் மாவட்டத்தையே பாழாக்கி கதிகலங்க வைத்துவிட்டதே… இதைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது தங்களின் மனநிலை எப்படி இருந்தது?
பொ.சுந்தரம், கடலூர்
பதில் : மனம் நொந்தேன். துன்பத்தையும் துயரத்தையும் அடக்கிக் கொண்டேன். விரைந்து செயலாற்றும் ஓர் ஆட்சி இந்நேரத்தில் _ செயல்திறனோடு வேகமாகச் செயல்பட இல்லையே தற்போது என்று எண்ணி வேதனையை அதிகமாக்கிக் கொண்டேன். வாக்களித்த மக்கள்பால் அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்!
கேள்வி : அய்யாவின் தாக்கத்தால்தானே எம்.ஜி.ஆர். நடித்த படமும், பாடல்களும் என்றும் மக்கள் விரும்பும் அளவுக்குத் திராவிட இனமான சுயமரியாதையைத் தாங்கி நிற்கிறது?
ல. சங்கத்தமிழன், செங்கை
பதில் : அதிலென்ன சந்தேகம்? அவரே பெரியார் திடலில் அய்யா முன்னிலையில் அதை ஒப்புக்கொண்டு பேசினாரே! அய்யாவும் பதில் அளித்து ஏற்றுக்கொண்டாரே.
கேள்வி : பெண்டாட்டி பிள்ளையுடன் குடும்பம் நடத்தும் சாமியார்கள், அவதாரம் என்று தங்களை அறிமுகம் செய்கிறார்களே, அவர்களும் ஆசிர்வாதம் செய்தால் பலிக்குமா? – ச.நா.சத்துவாச்சாரி, சாமிசம்மாரன்
பதில் : நீங்கள் தப்பாகப் புரிந்துகொண்டீர்கள். ஹி…ஹி..ஹி.. அவ _தாரம் என்று சொல்லியதை அவசரப்பட்டு சேர்த்துப் படித்துவிட்டீர்கள்!
கேள்வி : பா.ஜ.க._அ.தி.மு.க. கூட்டணி இயற்கையானது என்கிறாரே அத்வானி….? – தமிழரசன், திருமுக்கூடல்
பதில் : ஆம்! அதிலென்ன அட்டி? இனம் இனத்தோடுதான் சேரும்! வருணாசிரமப் பாதுகாப்பாளர்கள் இருவரும் _ எனவே இயற்கை தானே!