வஞ்சகம் வாழ்கிறது – 5

பிப்ரவரி 01-15

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்) ‍

– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம்

காட்சி 9 – கூடாரம்
உறுப்பினர்கள்: பிரகலாதன், காங்கேயன்

சூழ்நிலை: காங்கேயன் ஓலையில் ஏதோ எழுதுகிறான். பிரகலாதன் வருகிறான்.

பிரக: காங்கேயா?

காங்: (எழுதுவதை வைத்துவிட்டு எழுந்து) என்ன பிரகலாதா! இரவு எங்கே தங்கினாய்! வீரர்கள் எல்லோரும் பயந்துட்டாங்க. நான்தான் அவாளுக்கு ஆறுதல் சொன்னேன்.

பிரக: எங்கே அந்த வீரர்கள்?

காங்: அதோ அங்கே சோமரசம் சாப்பிட்டுக்கிட்டிருக்காங்க.

பிரக: நாம் நேற்று ஒரு பெண்ணைச் சந்தித்தோமே!

காங்: என்ன! நாம நேத்து… மறுபடி சொல்லு.

பிரக: ஒரு பெண்ணைப் பார்த்தோமே.

காங்: ஒரு பெண்ணைப் பார்த்தோமா-? என்ன நண்பா உளறுறே?

பிரக: நீ கூட அவ ஆரியப் பெண்ணுன்னு சொல்லலே?

காங்: நான் சொன்னேனா? என்ன பிரகலாதா, உனக்கு என்ன ஆச்சி. நல்லாதானே இருக்கிறே!

பிரக: ஆச்சரியமா இருக்கு.

காங்: எது? நீ கண்ட கனவா? என்னப்பா அவ்வளவு ஆழமா கனவு கண்டுட்டு இருக்கே.

பிரக: அது இருக்கட்டும். நேத்து மாலை உலாவப் போனோமே. அதுகூட நினைவில்லையா?

காங்: நீ என்னமோ சாப்பிட்டு இருக்கே! சோமரசம் சாப்பிட்டாகூட இப்படிப் பேசமாட்டியே. பிரகலாதா! பிரகலாதா என்ன மூளை பிசகிப் போச்சா?

பிரக: சரி விடு. அவர் சொன்னது சரிதான்.

காங்: யார் சொன்னது?

பிரக: அதெல்லாம் ஒண்ணுமில்ல! வீரர்களை அழைத்துக்கொண்டு ஓர் இடத்துக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?

காங்: வரணும்னுதான் நினைக்கிறேன். ஆனா தேவகட்டளை உன்னைப் பிரிந்து போகச் சொல்கிறதே.

பிரக: தெய்வ கட்டளையா? அப்படியே செய் காங்கேயா! தெய்வ நிந்தனை பொல்லாதது.

காங்: சந்தேகமா? வீரப்பன் பட்டபாடு தெரியுமே.

பிரக: சரி, சரி! போய் வா காங்கேயா! எந்தப் பக்கம் போற!

காங்: ஆண்டவனைத்தான் கேட்கணும். எங்க போனாலும் உன் பட்டாபிஷேகத்துக்கு வந்துடுவேன்.

பிரக: அவசியம் வரணும். எதிர்பார்ப்பேன் காங்கேயா!

காங்: வந்துடுவேன். வருகிறேன். (போகிறான்)

காட்சி 10
அரண்மனை உறுப்பினர்கள்: இரணியன், அமைச்சர், வீரன்

சூழ்நிலை: இருவரும் உரையாடுகின்றனர்.

இரணி: அமைச்சரே! என் மனைவி இந்நாட்டின் பட்டத்தரசி லீலாவதி மிகவும் கவலைப்படுகிறாள்.

அமைச்: ஏன் அரசே?

இரணி: மகன் பிரகலாதனைப் பற்றித்தான். அவன் எங்கே இருக்கிறானோ! பகைவர்களால் ஏதேனும் துன்பப்படுகிறானோ. ஆரியர்களால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து விளைந்திருக்குமோ என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு அழுகிறாள்.

அமைச்: ஆம்! அரசே! நானும் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டுதான் இருக்கிறேன்.

வீரன்: (வந்து வணங்கி) வணக்கம் அரசே!

இரணி: என்ன?

வீரன்: மன்னர் மன்ன! அரச வீதியிலே ஆரியர்கள் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாராயணமூர்த்தி தோன்றி உங்களையும் ஆரிய வேதத்தை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களையும் அழிக்கப் போகிறாராம்.

அமை: அந்த நாடோடிக் கூட்டத்துக்கு அவ்வளவு ஆணவமா?

வீரன்: அது மட்டுமல்ல அமைச்சர் அவர்களே! ஆரியர்களை நாம் வணங்க வேண்டுமாம். தமிழர்களை நல்வழிப்படுத்த ஆரியக் கடவுள் அவர்களைப் பிறப்பித்து இங்கே அனுப்பி இருக்கிறாராம்.

இரணி: அப்படியா! இப்போதே செல்லுங்கள். அந்த ஆரியப் பேய்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள். நாளை அவர்களை அரசவைக்கு இழுத்து வாருங்கள். கீழ்ப்படியாதவர்களைக் கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்துங்கள். போங்கள்.

வீரன்: ஆணை மன்னா! (போகிறான்)

இரணி: பார்த்தீர்களா அமைச்சரே! வடவேந்தர்கள் இந்த ஆரியர்களை வளர விட்டுவிட்டார்கள். முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.

அமைச்: ஆம்! மன்ன! மரம்போல வளர்ந்து விட்டார்கள். கோடரி கொண்டு வெட்ட வேண்டியிருக்கிறது.

இரணி: தமிழ் வாலிபர் களை ஆரியப் பெண் களைக் கொண்டு வசமாக்கிவிடுகிறார்கள். சோமரசம், சுரா போன்ற மதுவைக் கொடுத்து நமது தமிழர்களின் மதியை மயக்கிவிடுகிறார்கள். வாளேந்திப் போரிட வகையற்றவர்கள். சூழ்ச்சியால் நம்மவர்களை, நம் வட வேந்தர்களை அடிமைப்படுத்தியும், கொன்றும் தங்கள் வேதக் கொள்கையைப் பரப்பி வருகிறார்கள். இனி அவர்களை வளரவிடக் கூடாது.

அமைச்: ஆம் மன்ன! வடநாட்டை அவர்கள் ஆரியா வர்த்தம் என்று கூறி கொக்கரிக்கிறார்கள். ஆரிய தர்மத்தை ஏற்றுக் கொள்பவர்கள் இறந்தபின் சொர்க்கம் போவார்கள், ஏற்காதவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள் என்று சொல்லி நம் தமிழர்களைப் பயமுறுத்துகிறார்கள்.

இரணி: தமிழ்நாட்டில் அவர்கள் நுழையாதபடி தடுப்போம். அவர்களைப் பூண்டோடு கருவறுப்போம்.

அமைச்: ஆணை மன்ன!

காட்சி 11
காட்டின் ஒரு பகுதி
உறுப்பினர்கள்: கஜகேது. சித்ரபானு, பிரகலாதன்

சூழ்நிலை: மூவரும் உரையாடல்

கஜகேது: (கோபத்துடன்) வேள்வி செய்வேன். பூதங்களை உண்டாக்குவேன். இந்த நாட்டு மன்னன் இரணியனைக் கொல்வேன். நம் ஆரிய மக்களைச் சிறை மீட்பேன்.
சித்ரபானு: அப்பா! வேணாமப்பா! ஆத்திரப்பட்டு என் மாமனாரைக் கொன்றுவிடாதீர்கள் அப்பா! அத்தான்! உங்க தந்தை செய்தது ஞாயமா? வழியேபோன என் ஜனங்களை,  எங்கள் உறவினர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டாரே! (அழுதல்)

பிரக: அழாதே சித்ரபானு அழாதே! உங்கள் உறவினர்கள் என் உறவினர்கள் அல்லவா? அவர்களை விடுவிப்பது என் கடமையல்லவா?

கஜகே: மாப்பிள்ளே! நினைத்தால் இப்போதே உன் தந்தையைப் பிடி சாம்பலாக்கிவிட முடியும் என்னால். என் சம்பந்தியாயிற்றே என்று பார்க்கிறேன்.

அவர் உன் தந்தையாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அழுது கொண்டிருக்க மாட்டோம். எங்கள் மகரிஷிகளைக் கொண்டு யாகம் செய்து பேய் கணங்களை உண்டாக்கி நாட்டையே அழித்து விடுவோம்.

பிரக: அவ்வளவு சிரமப்பட வேண்டாம் மாமா! நான் இன்று இரவு மாறுவேடத்தில் சென்று அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு வருகிறேன்.

கஜகே: நீ மட்டும் தனியாகப் போகாதே! உமது நவ வீரர்கள் ஆரிய மதத்தை விசுவாசிக்கிறார்கள். நம் நம்பிக்கைக்கு உரியவர்கள். ஆரிய தர்மத்தைக் காக்க தங்கள் உயிரையும் தர தயாராக இருப்பவர்கள். அவர்கள் துணையுடன் செல்.
சித்ர: நானும் வருகிறேன் கண்ணாளா!

பிரக: வேண்டாம் சித்ரபானு. கட்டுக் காவல் உள்ள ஆபத்தான இடம்.

சித்ர: அந்த ஆபத்தான இடத்துக்கு உங்களைத் தனியாக அனுப்ப மாட்டேன் அத்தான். உங்கள் பிரிவை என்னால் தாங்க முடியாது. நான் ஆணுடையில் வருகிறேன் அத்தான்.

பிரக: என்ன மாமா இது? சித்ரபானு பிடிவாதம் பிடிக்கிறாள்.

கஜகே: சித்ரபானு நீயும் போய்த்தான் ஆகணுமா?

சித்ர: ஆமாம் அப்பா. ஒரு கணம்கூட அவரைப் பிரிந்து இருக்க முடியாது அப்பா!

கஜகே: சரி! அழைத்துச் செல்லுங்கள் மாப்பிள்ளை. முகமூடியணிந்து செல்லுங்கள்.

பிரக: வீரர்களை ஆயத்தப்படுத்துகிறேன். சித்ரபானு இன்று இரவு புறப்படுவதற்குத் தயாராக இரு. (போகிறான்)

கஜகே: சித்ரபானு! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இரணியனின் அந்தப்புரத்தைத் தந்திரமாகக் கேட்டுத் தெரிந்துகொள். பிரகலாதன் நம்மவர்களை விடுவிக்க சிறைச்சாலைக்குச் செல்லும்போது இரவில் அவன் அறியாமல் அந்தப்புரம் செல். அங்கே இரணியன் தூங்கிக்கொண்டு இருப்பான். அவன் மார்பில் ஈட்டியால் குத்திக் கொன்றுவிடு. அவன் இறந்தால் தமிழ்நாடு நம் வசம். பிரகலாதனைக் கொண்டு இந்நாட்டை நாம் ஆளலாம். தவறினாலும் பாதகமில்லை. இரணியன் நீதிமான். பெண்களைக் கொல்ல மாட்டான். உன் கணவன் ஆயுதபாணியாக இருப்பதால் உன்னைக் காப்பாற்றிவிடுவான். எது நேரினும் நேரட்டும். தைரியமாகச் செயலாற்று. போய் வா மகளே! போ ஜெயத்தோடு திரும்பு.

சித்ர: கவலையை விடுங்கள் அப்பா! ஜெயத்தோடு திரும்புவேன்.

காட்சி 12. – காட்டின் ஒரு பகுதி

உறுப்பினர்கள்: காங்கேயன், கஜகேது
சூழ்நிலை: (காங்கேயன் நாராயணன் பற்றிப் பாடுகிறான். முடிவில்)

கஜகேது: சுவாமி! நமஸ்கரிக்கின்றேன். தங்கள் நாமதேயம்?

காங்: அப்பனே! மங்களமுண்டாகட்டும். (சிரித்தல்)

கஜ: ஏன் சுவாமி சிரிக்கிறீர்கள்?

காங்: என்னைத் தெரியவில்லையா அப்பா.

கஜ: ஓ! காங்கேயனா? அடையாளமே தெரியவில்லையே! ரிஷி வேஷம் மகா பொருத்தம்.

காங்: நம்ம ஆரிய ஜனங்களை இரணியன் சிறைப்பிடித்துள்ளானாமே. அவர்களை விடுவிக்க என்ன முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்?

கஜ: அதற்கான ஏற்பாட்டைச் செய்துமுடித்துவிட்டேன். ஆனால் நீ ஒன்று செய்ய வேண்டும்.

காங்: சித்தமாக இருக்கிறேன்.

கஜ: சேனாதிபதி வெற்றிவேலனிடம் சித்ரபானுவின் ஓலையைச் சேர்த்துவிட வேண்டும்.

காங்: என்ன ஓலை? நான் தெரிந்துகொள்ளலாமா?

கஜ: நமது சித்ரபானுவின் அழகில் வெற்றிவீரன் விழுந்துவிட்டது உனக்குத் தெரியுமல்லவா?

காங்: தெரியும்! தெரியும்! அவளை விவாகம் செய்துகொள்ளத் தவமிருப்பதும் எனக்குத் தெரியும்.

கஜ: இன்று இரவு அந்தப்புரத்தின் காவலாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். அது சம்பந்தமான ஓலை அது. சித்திரபானுவின் ஓலை என்றால் அதைத் தெய்வத்தின் கட்டளையாக மதிப்பவன்.

காங்: சரி! தந்தையே கொடுங்கள்.

கஜ: இதோ கொண்டு வருகிறேன்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *