இது மாணவர்களுக்காக!

பிப்ரவரி 01-15

– க.அருள்மொழி


அனைவருக்கும் கல்வி அதிலும் சமச்சீர் கல்வி என்ற நிலையில் மாணவர்கள்  கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். மாணவர்களின் கவனத்தைச் திசைத்திருப்பப் பல்வேறு சூழல்கள் அவர்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.  இவற்றையெல்லாம் தவிர்த்து ‘என் கடன் (பள்ளிப்) பணி செய்து கிடப்பதே’ என்று அவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால்தான் அவர்கள் தங்களை ஒரு முக்கிய இடத்தில் நிறுத்திக் கொள்ள முடியும்.

இப்போதெல்லாம் ‘நன்று”(Good) என்ற நிலையில் தேர்ச்சி பெறுவதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது. அதையும் தாண்டி சிறப்பு நிலையில் (Excellent) தேர்ச்சி பெற்றால்தான் உயர் கல்விக்கோ வேலைவாய்ப்பிற்கோ வழியுண்டு. அதுதான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளமும் ஆகும். எனவே, மாணவர்கள் இப்போது செய்யும் வேலையை  (படிப்பில்) முறைப்படுத்தியும் ஒருமுகப்படுத்தியும்  செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

முறைப்படுத்துதல்:

உங்கள் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முதல் படி முறைப்படுத்துதல் ஆகும்.

உங்கள் பாடத்திட்டத்தையும் வகுப்பில் கொடுக்கப்பட்ட குறிப்புகளையும் பாட வாரியாகத் தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கான தனிக் குறிப்பேட்டையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் உதிரிக் காகிதங்களில் குறிப்புகளை எடுத்திருந்தால் அதனை உடனடியாக பாடவாரியாக குறிப்பேடுகளில் எழுதிக் கொள்ளுங்கள். மீண்டும் உதிரிக் காகிதங்களில் குறிப்பெடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அது நேரம் வீணாவதைத் தவிர்க்கும் வழி.

முன் திட்டமிடுங்கள்:

உங்கள்  பாடத் திட்டத்தைத் தவிர்க்காமல் அந்தந்த நேரத்தில் படித்து அல்லது எழுதி முடித்துவிடுவது உங்களைப் பெருமிதமாக உணர வைக்கும். எந்த ஒரு பாடத்தையும் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடாதீர்கள். அப்படிச் செய்வது அரை குறையாக தயார் செய்வதாகிவிடும். இதனால் பயம் பதட்டம் ஏற்பட்டு தேர்வின்போது கவனக் குறைவை உண்டாக்கும்.

காலக்கெடு: ஒவ்வொரு பருவத் தேர்வு அல்லது இடைத்தேர்வு நாள் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். முறைப்படியான தேர்வு அட்டவணை கொடுக்கப்படாவிட்டாலும் உத்தேசமாக எப்போது தேர்வு நடக்கும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதற்கேற்ப நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களைப் படித்து, எழுத்து வேலைகள் இருந்தால் அதையும் முடித்து வைத்து இருக்க வேண்டும். தெளிவான நோக்கத்தைத் தீர்மானியுங்கள்.

நீங்கள் தேர்வை எதிர்கொள்ளப்போகும் வடிவம் எப்படி? அதாவது எப்படி எழுதப் போகிறீர்கள்? எத்தனை மதிப்பெண்ணை எதிர்பார்த்து உங்களைத் தயார் செய்துகொண்டிருக்கிறீர்கள்? அவை எல்லாம் முழுமையாகத் தெரிகிறதா? இன்னும் ஏதேனும் செய்யவேண்டியிருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள்  தேர்வு நாளையொத்து முன்னுரிமை கொடுக்கவேண்டிய பாடங்கள் அதிலுள்ள பிரச்சினைகள் முடிக்கவேண்டிய நாள் ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்.

இந்தக் காலக்கெடு பற்றிய குறிப்பில் பாடத்திட்டம் அல்லாத பிற பணிகள் அதாவது விளையாட்டுப் போட்டிகள், ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது போன்ற நடவடிக்கைகளையும் சேர்த்துக்கொண்டு அதற்கேற்ப உங்கள் முயற்சியைத் திட்டமிடுங்கள். திட்டமிடலை சிறு சிறு பகுதியாகப் பிரித்துக் கொள்வது எளிதாக அமையும்.

திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்:

உங்கள் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து முடிவெடுங்கள். உங்கள் திட்டத்தைப் பற்றி உங்கள் பெற்றோருக்குத் தெரிவித்து அவ்வப்போது அவர்களை உங்களுக்கு நினைவூட்டச் சொல்வதோடு உங்கள் திட்டத்தில் நீங்கள் எதுவரை சென்றிருக்கிறீர்கள் என்பதையும் சோதிக்கச் சொல்லுங்கள்.

உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் காலக்கெடுவிற்குள் பாடத்தைப் படித்து முடிப்பதிலும் சிரமம் ஏதேனும் இருப்பின் உங்கள் ஆசிரியரைக் கலந்தாலோசியுங்கள். அவர்கள் உங்கள் திட்டத்தை மாற்றியமைக்க உதவுவார்கள்.

ஒரு வேளை கவனக்குறைவால் தேர்வு நாள் நெருங்கியது தெரியாமல் இருந்து விட்டாலும் அதிர்ச்சியடையாதீர்கள். மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்வதின் மூலம் உங்களை அமைதிப்படுத்திக் கொண்டு கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். படித்து முடிக்க வேண்டியதை அணுகுவது பற்றியும் சமாளிப்பது பற்றியும் சிந்தியுங்கள். நாள் என்பதை மாற்றி மணி என்ற அளவில் காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்துகொண்டு வந்தால் இடையில் ஏதேனும் சிறு தொல்லைகள் வந்தாலும் விரைவில் சரிப்படுத்திக்கொண்டு பழைய நிலைக்கு மீளலாம்.

படிக்கும் இடம்:

நீங்கள் படிக்கும் இடத்தைத் தேர்வு செய்வதிலும் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துங்கள். அது தூய்மையாகவும் அமைதியாகவும் கவனச் சிதறல் ஏற்படாத இடமாகவும் இருக்கட்டும். எல்லோரும் நடமாடும் இடமாகவோ சமையலறை போன்ற இடமாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எளிதாக படிப்பில் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

உங்கள் படுக்கையறை அல்லது தனியான படிக்கும் அறை அல்லது வேறு ஏதேனும் சத்தமும் இடையூறும் இல்லாத இடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேசையுடன் நாற்காலி போன்ற இருக்கையில் அமர்ந்து படிப்பது சிறந்தது. உங்கள் முதுகு நேராக இருக்கும்படியும் கால்கள் தரையில் நன்கு பதியும்படியும் அமர்ந்து கண்களை உறுத்தாத அளவிற்குத் தேவையான வெளிச்சமுள்ள மின் விளக்கை எரிய விடுங்கள். மேலும் உங்கள் படிக்கும் அறையில் அதிக வெப்பமோ அதிக குளிரோ இல்லாதவாறும் உங்கள் வீட்டுச் செல்லப் பிராணிகள் உங்களைத் தொந்தரவு செய்யாதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

படிக்கத் தேவையானவை:

நீங்கள் படிக்கும்போது வேறெந்தத் தடங்கல்களும் வராதவாறு பார்த்தாயிற்றா? பிறகென்ன? நீங்கள் படிக்க அல்லது எழுத அல்லது வரையத் தேவையான புத்தகங்கள், குறிப்பேடுகள், அகராதி, பேனா, பென்சில், ரப்பர் இன்னும் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு படிக்க அமருங்கள். இல்லையென்றால் ஒவ்வொன்றுக்கும் எழுந்து சென்று படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

இன்றைய பாடங்கள் அனைத்தையும் படித்து, எழுதி முடித்தாயிற்றா? இனி அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் செல்லவேண்டிய அனைத்தையும் இப்போதே முறையாக எடுத்து வைத்துவிடுங்கள்.

ஒருமுகப்படுத்துங்கள்:

மாணவர்கள் அடிக்கடி தொலைப்பேசியில் பேசுவதும் பாட்டுக் கேட்பதும் தொலைக்காட்சி பார்ப்பதும்  அனுப்புவதும் அவர்களின் படிப்புத் தரத்தைப் பாதிக்கும் விஷயங்களாகும். ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது எதையும் உருப்படியாகச் செய்ய முடியாததாகிவிடும். மாணவர்களுக்குப் படிப்பைத் தவிர மேற்சொன்ன விஷயங்கள் எதுவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுபவை அல்ல.

ஒரு சிலருக்கு மிக அமைதியான இடத்தை விட  மிக மெல்லிய இசை கேட்டுக் கொண்டு படிப்பதால் சிறந்த பலன் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்றாலும் தமிழ் நாட்டு இசை வேறு வகையாயிற்றே? பாடுபவருக்குத் துணையாக நீங்களும் கோரஸ் பாடவும் ஆடவும் ஆரம்பித்துவிட்டால் என்னாவது? படித்த பக்கத்தையே திரும்பத் திரும்பப் படிக்கிறீர்கள் அல்லது அதிகமான பிழை செய்கிறீர்கள் என்றால் இசை கேட்டுக்கொண்டு படிப்பதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது என்று புரிந்து கொண்டு உடனடியாகப் பாட்டை நிப்பாட்டுங்கள்.

ஒரு வேளை உங்கள் பாடத் திட்டத்தை நீங்கள் கணினியின் மூலம் வலைதளத்தின் உதவியோடு செய்ய வேண்டியிருப்பின் பாடத் திட்டத்தை விட்டுவிட்டு புத்தி ‘மேய’ (Browsing) போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால் கணினியில் வேலை செய்யும்போது உங்கள் வீட்டுப் பெரியவர்களின் மேற்பார்வையில் செய்யவும். பொதுவாக, கணினியை வீட்டின் பொது இடத்தில் வைப்பது நல்லது.

முழுக் கவனம் தேவை:

தொடர்ந்து பலமணிநேரம் படிக்கும்போது 45 நிமிடங்களுக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது அடுத்த 45 நிமிடங்களுக்கு மூளையைப் புத்துணர்ச்சியோடும் கவனத்தோடும் படிக்க உதவும். அந்தப் பத்து நிமிடத்தில் அறையை விட்டு வெளியே வந்து ரிலாக்சாக வேடிக்கை பார்க்கலாம். லேசான உடற்பயிற்சி செய்வது அப்போது படித்ததை மூளையில் நன்கு பதிய வைக்க உதவும். அது மட்டுமல்லாமல் நீங்கள் இசையைக் கேட்டுப் பாடவும் ஆடவும் அந்தப் பத்து நிமிடத்தைப் பயன்படுத்துங்கள். சோம்பல் முறியுங்கள். சிறு விளையாட்டு விளையாடுங்கள். இந்த இடைவேளை அதிக அளவாக 15 நிமிடத்தைக் கடந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனம் அடிக்கடி எங்கெங்கோ அலையும் என்பது இயல்பே! ஆனால், அதை அப்படியே விட்டு விடாமல் இழுத்துக் கட்டுங்கள். பகல்  கனவும் கற்பனைகளும் உங்கள் படிப்பு நேரத்தைப் பாழடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு ஒரு ஓய்வான நேரத்தை ஒதுக்குங்கள்.

சாதித்துக் காட்டுங்கள்:

நீங்கள் செய்யவேண்டியவை பற்றிய சுருக்கம்.

* உங்கள் கால எல்லை பற்றி விழிப்புடன் இருங்கள்.

* தேர்வு நேரம் குறித்து தகுந்த வகைப் படுத்தலைச் செய்து கொள்ளுங்கள்.

* நேர ஒதுக்கீட்டில் படிப்பு அல்லாத பிற நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

* படிக்க வேண்டிய அளவு, மதிப்பெண் எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

* படிக்கத் தேவையான இடம், தேவையான பொருள்கள் பற்றி கவனமாக இருங்கள்.

*  படிப்பிற்கிடையே சிறிய இடைவேளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.நோக்கத்தில் தீவிரமாக இருங்கள்.

* வீட்டுப் பாடங்களை நள்ளிரவிலும் படுக்கையிலும் அமர்ந்து செய்யாதீர்கள்.

* ப்ராஜெக்ட் போன்றவற்றிற்கு  உங்களுக்குப் பிடித்தமான பாடங்களைத் தேர்வு செய்யுங்கள்.

*மேலும், உங்களுக்குத் தேவையான ஆலோசனையை அவ்வப்போது பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கேளுங்கள்.

மேலும் சில குறிப்புகள்:

கண்களை மூடிக்கொண்டு படிக்க முடியுமா?

பெரும்பாலான மாணவர்கள் படுக்கையில் (கட்டில்-மெத்தை) அமர்ந்துகொண்டு படிப்பதுண்டு. அது மிக வசதியாகத் தெரியலாம். ஆனால், அது படிப்பதை விட்டு ஒரு தூக்கம் போடலாம் என்றுதான் தூண்டும்.

வீடியோ கேம் வேண்டாம்: தேர்வுக்காகப் படித்து முடித்துவிட்டு வீடியோ கேம் விளையாடாதீர்கள். அது மறதியையும் தவறான விடை எழுத வாய்ப்பாகவும் அமைந்துவிடும்.

தூங்குங்கள்:

போதுமான அளவு தூங்குவது மனதை ஒருமுகப்படுத்துவதற்கு உதவும்.

சோம்பலைப் போக்க ஒரு வழி என்னவென்றால் நாள்தோறும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் எழுந்துகொள்வதுதான். அது விடுமுறை நாளாக இருந்தாலும்கூட.

“கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”  என்பதை உணர்ந்து மாணவர்களாகிய உங்களுக்கு வரவேண்டும் பொறுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *