Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை – வெட்டியான்

– வீர தமிழன்

எரிப்பதா
புதைப்பதா
வெட்டியானின்
குல வழக்கம்?

எரியூட்ட விறகையும்,
புதைக்க மண்ணையும்
மட்டுமே
வெட்டிப்போட்டுப்
பழகியதால்
வெட்டியானாகிப்போனவன்!

லாபம் ஏதும்
இல்லாத வேலை
என்பதால்தான்
இவன் செய்யும் வேலை
வெட்டிவேலை
என்றானதோ!

துண்டிலே விழும்
சில்லரைகளில்
தொடங்குவதால்
அவன் வரவு செலவுத் திட்டம்
முழுவதும்
துண்டுகளாலேயே
நிரப்பப்படுகிறது!

அவன் மீது
இரக்கம் வந்துவிடக்கூடாது
என்பதற்காகவும்தான்
கண்கள் மூடப்படுகிறதோ
பிணங்களுக்கு!

திரும்பிப்பார்க்காமல்
செல்லுங்கள்
அரைஞாண்கயிறின்
வெள்ளி வரை
அறுத்துப்பெற்ற பிறகு
திரும்பிப்பார்க்க
என்ன இருக்கிறது?

ஜாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லா சுடுகாட்டுக்கும்
ஒரே ஜாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?

இந்தத் தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!

சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியைத்
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்கச் சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றிப் படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?

கருப்பன் வந்திருக்கின்றான்
என இருந்த இடத்திலிருந்தே
கத்தித் தெரிவிக்கின்றன
செத்துப்போனவனின்
பேரக்குழந்தைகள்!
இந்த வருசம்
எதுவும் கிடையாது
எனத் தெரிந்தும்
வந்து நிற்கிறான் பாரு
முறுக்கிக்கொள்கிறாள்
கிழவி!

தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
கூலியை!