ஒரு நாகரிகச் சமூகத்தில் மரண தண்டனை அவமானகரமான ஒரு செயல்பாடு. தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலமாகக் கொலை செய்கிறார்கள். ஆனால், தூக்குத் தண்டனை நம் மக்களின் பெயரால் அரசாங்கம் செய்யும் கொலை. அரசாங்கமும் கொலைகாரர்களும் ஒன்றா? தூக்குத் தண்டனை கண்டிப்பாகக் கூடாது.
ஒரு சாதாரண பிளாஸ்டிக் குப்பையைக்கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத இந்த அரசாங்கம், அணு உலைகளைப் பராமரித்து, கழிவுகளைப் பத்திரமாக வெளியேற்றப் போவதாகக் கூறுவது நகைப்புக்கு உரியது. அருந்ததி ராய், எழுத்தாளர்
தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்துப் பலப்படுத்த வேண்டும். அப்படி இணைத்தால் தண்ணீருக்கு அடுத்த மாநிலத்தை நம்பியிருக்க வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் மழையினால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரைச் சேமிக்க நீர்நிலைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். வறண்ட தமிழகத்தை வளமான தமிழகமாக மாற்றமுடியும். தமிழக நதிகளை இணைப்பதற்குத் தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசு, உலக வங்கி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திட்டத்தை உருவாக்க வேண்டும்.
– அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்
இந்தியாவில் பெண்கள் வளர்ச்சியடைந்து விட்டார்கள் என்றால் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடு என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். பெண்கள் நலனில் முக்கியத்துவம் கொடுப்பதில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. கேரளத்தில் கூட்டுக் குடும்ப முறையே ஒழிக்கப்பட்டுள்ளது. குடும்ப அமைதியைத் தக்க வைத்துக் கொள்வது பெண்கள்தான். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க பெண் வழக்குரைஞர்கள் முன்வர வேண்டும். நீதித்துறையில் பெண்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
– சதாசிவம், நீதிபதி, உச்ச நீதிமன்றம்
ஆசிரியர் நியமனங்கள் சொல்லிக் கொள்ளும்படி நடந்துவிடவில்லை. பாடப் புத்தகங்களோ மாணவர்களின் வயதுக்கு ஏற்ற தரத்தில் இல்லை. மத்திய அரசு பாடத் திட்டத்தை வகுக்கத்தான் முடியுமே தவிர அதற்கான புத்தகங்களைத் தயாரிப்பது மாநில அரசுகளின் வேலை. அது, சரிவர நடக்கவில்லை என்று துணிந்து சொல்வேன். கபில் – சிபல், மத்திய அமைச்சர்
சர்வதேச சமூகம் பெண்களுக்குச் சம உரிமை அளிக்க முன்வர வேண்டும். தொழில் முனைவோர், அலுவலக உயர் அதிகாரிகள், கொள்கை முடிவெடுப்பவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு அதிக வாய்ப்புகளையும், உரிமைகளையும் அளித்தால்தான் சமூகத்தில் மாற்றமும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
– ஜெனிபர் மெக்இன் டயர், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர்
வேலைக்காகப் படிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பல்லாயிரம் ரூபாய் ஊதியத்தில் வேலையில் சேரவேண்டும். தனது குடும்பத்துடன் கவலையின்றி வாழவேண்டும் என மட்டும்தான் பெற்றோர்கள் எண்ணுகின்றனர். நமது நாட்டின்மீதும் நமது பண்பாட்டின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள 3ஆவது உலக யுத்தம் குறித்து எந்த இளைஞரும் கவலைப்படுவதில்லை.
உலகிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 1 ஆண்டுக்கு 1 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். சுனாமி வந்து 6 வருடங்கள் ஆகியும் சுனாமியை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பக் கருவியைக் கண்டுபிடிக்கவோ அந்த முயற்சியில் ஈடுபடவோ அந்த 1 லட்சம் இளைஞர்களில் ஒருவர்கூட முயற்சிக்கவில்லையே. இளைஞர்கள் மாற்றுச் சிந்தனையை நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வளர்ச்சி பெறும்.
– கோபிநாத், ஊடகவியலாளர்