முகப்புக் கட்டுரை : பகுத்தறிவைப் பரப்பி மூடச் செயல்களை முறியடிப்போம்!

2022 கட்டுரைகள் ஜூன் 16-30 2022

மஞ்சை வசந்தன்


உலகில் அறிவார்ந்த வாழ்க்கை வாழ்ந்த இனம் தமிழினம். அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றும் அறிவியல் அடிப்படையில் அமைந்தவை. தொன்மைத் தமிழரிடம் கடவுள் நம்பிக்கையில்லை, மூடச் செயல்கள் இல்லை, ஜாதிப் பிரிவுகள் இல்லை, பெண்ணடிமை நிலை இல்லை, சடங்குகள் இல்லை.
தமிழரின் செயல்கள் ஒவ்வொன்றும் காரணம் உடையவையாய் இருந்தன. அவர்களது வாழ்வியல் இயற்கை சார்ந்தும், அறிவு அடிப்படையிலும் அமைந்தன. பயன்படு பவற்றைப் போற்றும், மதிக்கும் மாண்பு அவர்களிடம் மிகுந்து காணப்பட்டது.
நிலத்தலைவர், வீரர், உயர்குணப் பெண்டிர், கற்றோர், கற்பிப்போர், சமூகத்திற்குத் தொண்டாற்றுவோர் இவர்களைப் போற்றினர், மதித்தனர். உழவை மேம்பட்ட தொழிலாகக் கொண்டனர். உழவினால் விளையும் பொருள்களை பல இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பனையும் செய்தனர். கடல் கடந்தும் வணிகம் செய்தனர். நீரைத் தேக்கி, கால்வாய்கள் மூலம் வயல்களுக்குக் கொண்டு சென்று வேளாண்மை செய்தனர். மழை நீரைத் தேக்கி வைக்க ஏரி, குளம் அமைத்தனர்.

ஆரியர் நுழைவால் அனைத்தும் பாழ்
தெற்காசியப் பகுதி முழுவதும் பரவி பகுத்தறிவுடன் வாழ்ந்த தமிழரிடையே ஆரியர்கள் பிழைப்புக்காகப் புகுந்தனர். தொடக்கத்தில் தமிழரிடம் பிச்சை பெற்று வாழ்ந்த ஆரியர்கள், காலப்போக்கில் குழுக்களாகத் தங்கி வாழத் தொடங்கினர். சிறுபான்மையினரான ஆரியர்கள் பெரும்பான்மை இனமான தமிழர்களிடம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மூடச் சடங்குகளைச் செய்தனர்.
காற்று, மழை, இடி, மின்னல், தீ போன்றவற்றை வணங்கி, தங்களுக்கு நன்மை செய்யும்படியும் இந்த மண்ணுக்குரிய தமிழ் மக்களுக்குத் தீங்கு செய்யும்படியும் பிரார்த்தனை செய்தனர். அப்பிரார்த்தனைகளே பின்னாளில் வேதங்கள் ஆயின.

யாகங்கள்
மேற்கண்ட இயற்கைச் சக்திகளை வணங்க யாகங்கள் செய்தனர். தீ மூட்டி, அதில் பல பொருள்களைப் போட்டுக் கொளுத்தி, நெய்யை ஊற்றி, விலங்குகளைப் பலியிட்டு பிரார்த்தனை செய்தனர். தமிழர்கள் வாழ்ந்த இந்த நிலப் பரப்பில் முதலில் செய்யப்பட்ட மூடச் சடங்கு ஆரியர்கள் செய்த இந்த யாகங்களே!

தமிழர் – ஆரியர் எதிர்நிலை
தமிழர்கள் வாழ்வியலும் ஆரியர் வாழ்வியலும் நேர் எதிராய் முரண்பட்டு நின்றன. தமிழர்கள் தங்களுக்குப் பயன்படும் பொருள்கள், இயற்கை சக்தியை மனிதர்கள் போன்றவற்றிற்கு நன்றி செலுத்தினர். ஆனால், ஆரியர்கள், எல்லாம் தங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், எதிரிகளை அழிக்க வேண்டும் என்று வேண்டினர்.
தமிழர்கள் ஆற்றுநீரைத் தேக்கி அணை கட்டி, கால்வாய்கள் மூலம் நீரைப் பாய்ச்சி வேளாண்மை செய்து விளைச்சலைப் பெருக்கி மக்களுக்கு வாழ்வதற்கான பொருள்களை அளித்தனர். உழவை மதித்தனர்.
ஆனால், ஆரியர்கள், நீரைச் சிறைபிடிக்கக் கூடாது என்று குறுக்கே கட்டப்பட்ட அணைகளை உடைத்தனர். உழவைப் பாவச் செயல் என்று எண்ணினர்.
தமிழர்கள் தன்னம்பிக்கையுடன், தங்கள் வலிமை, உழைப்பு, அறிவு, ஆற்றல் இவற்றில் நம்பிக்கை கொண்டு அதன்படி வாழ்ந்தனர். ஆனால், ஆரியர்கள் சடங்கு, மந்திரம், யாகம் என்று பல மூடச் செயல்கள் மூலம் வளமும், வாழ்வும் பெறலாம் என்று நம்பினர்.
தமிழர்கள், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர் இலக்கில் வாழ்ந்தனர். ஆனால், ஆரியர்கள் மனிதர்களை பிறப்பின் அடிப்படை-யில் வர்ணங்களாகப் பிரித்து, உயர்வு தாழ்வு படி நிலைகளை உருவாக்கினர். அந்த படி நிலைகளில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டனர்.
தமிழர்கள் தாய்வழிச் சமுதாயமாக வாழ்ந்தனர். பெண்களை உயர்நிலையில் வைத்து மதித்தனர். பெண்களுக்கே சொத்துரிமையும் நிருவாக ஆளுமையும் அளிக்கப்பட்டது. ஆரியர்களோ பெண்களைப் பிள்ளைபெறும் விளைநிலங்களாகக் கருதினர். ஆணுக்குப் பணிசெய்யும் அடிமைகளாகப் பெண்களை நடத்தினர். பெண்களுக்கு சொத்துரிமையோ, பிற உரிமைகளோ இல்லை என்று மறுத்தனர். ஆணைச் சார்ந்தே பெண் வாழ வேண்டும், பெண் படிக்கக் கூடாது, அயற்பணிகளில் அமரக் கூடாது, சமைப்பதும், வீட்டைப் பராமறிப்பதும் அவள் பணி என அறிவித்தனர். அதன்படியே வாழ்ந்தனர்.
தமிழர்கள் தங்கள் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை மணந்து சேர்ந்து வாழச் செய்தனர்.
ஆரியர்கள், பெண்களை பொருளாகக் கருதி, அவர்களைத் தங்கள் விருப்பப்படி தானமாகப் பிறருக்கு அளித்தனர்.
தமிழர்கள் பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் நல்ல உடல் முதிர்ச்சியும், உள்ள முதிர்ச்சியும் பெற்ற பின் தாங்கள் விரும்பு-கின்றவரை மணக்கச் செய்தனர். ஆரியர்களோ குழந்தைப் பருவத்திலே ஆணுக்குப் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

மூடநம்பிக்கைகள் திணிப்பு
தமிழர்கள் எவ்வித மூடநம்பிக்கையையும், மூடச் சடங்குகளும் இன்றிப் பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்தனர். கடவுள் நம்பிக்கையோ, ஜாதிப் பிரிவுகளோ தமிழரிடையே இல்லை. ஆனால், ஆரியர்கள் தமிழர்களோடு கலந்து வாழத் தொடங்கிய பின் தங்கள் மூடநம்பிக்கைகளை, மூடச் சடங்குகளை தமிழர்கள் மீது திணித்தனர். முதலில் தமிழ்ச் சமுதாயத்தில் உயர்நிலையில் இருந்தவர்களிடம் நுழைத்து பின்னர், எளிய மக்களின் வாழ்விலும் நுழைத்தனர். பிறப்பு முதல் இறப்பு வரை ஏராளமான சடங்குகளை நுழைத்தனர். தங்களின் பிழைப்புக்கு வருவாய் தரும் வழியாகவும் அவற்றை ஆக்கிக் கொண்டனர்.
இதன் வழி உழைத்து வாழ்ந்த தமிழர்கள் உள்ளத்தில் சடங்குகள் வழி வளமான வாழ்வு பெறலாம் என்ற மூடநம்பிக்கையை நுழைத்தனர்.
உழைத்து உயர முடியும் என்று வாழ்ந்த தமிழர்களிடையே உன் வாழ்வு கடவுள் விதித்த விதிப்படி, நீ பிறந்த நேரத்தின்படியே நடக்கும் என்ற நம்பிக்கையை ஆழமாகப் பதித்தனர்.
தங்கள் உயர்வு, தாழ்வு, இறப்பு, இழிவு, நோய், கேடு, வளம், வறுமை எல்லாம் கடவுள் விதித்த விதிப்படி என்று ஆழமாய் நம்பினர். பிறந்த நேரத்தில் கோள்கள் எப்படி உள்ளன என்பதைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமையும் என்று ஜோதிட நம்பிக்கையைப் பதித்தனர்.
கடவுள், பிராமணனை உயர் ஜாதியாகவும், மற்றவர்களை அவர்களுக்கு அடிமை வேலை செய்ய சூத்திரர்களாகவும் படைத்தது. எனவே, பிராமணனுக்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் கடமை என்று சாஸ்திரங்கள் எழுதி, ஆட்சியாளர்களின் உதவியுடன் அதை நடைமுறைப்படுத்தினர்.

அறிவியல் கருவிகளுக்குக் கூட பூசை செய்யும் அவலம்
அறிவியல் வளர்ச்சியினால் கண்டுபிடிக்கப்-பட்ட அறிவியல் கருவிகளுக்குக் கூட படையல் போட்டு, குங்குமம் வைத்து, சூடம் காட்டும் உச்சநிலை மடமை மக்களிடையே ஆரியர்-களால் வளர்க்கப்பட்டது.
விண்ணில் ஏவப்படும் இராக்கெட்டுக்குக் கூட படையல், பூசை நடத்தி, நல்ல நேரம் பார்த்துச் செலுத்தும் அவல நிலை அறிவியல் படித்தவர்களுக்குக்கூட இருப்பது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.
கட்டடம் கட்டுவதற்குப் பூஜை, வாகனம் வாங்கினால் பூஜை, வீடு குடி போனால் பூஜை என்று எல்லா நிகழ்வுகளையும் சடங்கு மயமாக்கி தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டு, தமிழர்களை கடனிலும் வறுமை-யிலும் தள்ளினர்.

புரட்சியாளர்களும் விழிப்புணர்வும்
சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே கருநாடகாவில் பெம்மான் பசவர், ஆரிய பார்ப்பனர்களின் ஜாதி, மூடச் சடங்கு, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.
அதன்பின் சித்தர்கள் பலர் பல்வேறு விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி விழிப்பூட்டினர். இராமலிங்க வள்ளலார் தம் வாழ்நாளையே மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்புக்குச் செலவிட்டு, சமத்துவ சமுதாயம் உருவாக்கப் பெரிதும் உழைத்தார்.

பெரியாரின் பெரும் புரட்சி!
பெரியாருக்கு முன் புரட்சியாளர்கள் பலர் முயன்றும் பெரும் விளைவுகளை ஏற்படுத்த முடியாத நிலையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியார் தொடங்கிய பெரும் புரட்சி, பெருமளவு மாற்றத்தை இச்சமுதாயத்தில் ஏற்படுத்தியது.

மூலமறிந்து போரிட்டார்!
தந்தை பெரியார் அவர்கள், மூடச் சடங்குகள், மூடநம்பிக்கைகள், ஜாதிக் கொடுமைகள், பெண்ணடிமை நிலை, கல்லாமை, இல்லாமை, பணிகளுக்குச் செல்ல முடியாமை என்று எல்லாவற்றுக்கும் எது மூல காரணம் என்று நுட்பமாய்க் கண்டறிந்தார். கடவுள், மதம் இரண்டுமே முதன்மைக் காரணங்கள் என்ற முடிவுக்கு வந்தவர், அவற்றுக்கும் மூல காரணம் யார் என்று கூர்ந்தாய்ந்து, ஆரியப் பார்ப்பனர்களே அந்த மூல காரணம் என்று முடிவுக்கு வந்தார்.
எனவே, ஆரிய பார்ப்பன ஆதிக்கம், சதி, மோசடி இவற்றுக்கு எதிராய் தனது போராட்டங்களை அமைத்தார். பார்ப்பன ஆதிக்கத்துக்கு கருவிகளாய்ப் பயன்படும் கடவுளையும், மதத்தையும் அறவே ஒழிப்பது ஒன்றே அனைத்திற்கும் தீர்வு என்கிற முடிவுக்கு வந்தார்.

மானமும் அறிவும் மாற்றுத் தீர்வு!
மேற்கண்டவற்றை அகற்றி மக்கள் சமுதாயம் சமத்துவமாய் வாழ மானமும் அறிவும் முதன்மைத் தேவை என்று உறுதி செய்தார். எனவே, தன்மானத்தை மக்களுக்கு ஊட்டுவதையும், பகுத்தறிவை மக்களிடையே வளர்ப்பதையும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் தனது முப்பெரும் இலக்குகளாகக் கொண்டார்.

சுயமரியாதை இயக்கம்
மக்களிடையே மானத்தை ஊட்டி, ‘யாமார்க்கும் குடியல்லோம்’ அடிமையல்லோம்; எமக்கும் எல்லா உரிமையும் உண்டு, பிறப்பால் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை, மானமே மனிதனுக்கு முதன்மைத் தேவை என்பதை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய தன்மான இயக்கமாம் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். மக்களின் சுயமரியாதை, சமத்துவத்திற்கு எவையெல்லாம் தடையாய் இருக்கின்றனவோ, அவற்றைத் தகர்த்தெறிய முற்பட்டார். அதனடிப்படையில் சுயமரியாதைத் திருமண முறையையும் உருவாக்கி, நடைமுறைப்-படுத்தினார். அத்திருமணங்கள் செல்லாது என்ற நிலை இருந்தபோதும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாது சுயமரியாதைத் திருமணங்களை நாடு முழுவதும் நடத்தினார். பெரியாரின் நன்முயற்சி நாளடைவில் பெரும் வெற்றி பெற்றது. ஆம்! அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்ததும் சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் செல்லும் என்று சட்டம் இயற்றினார்.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு
தன்மானம், பகுத்தறிவு இரண்டையும் மக்களிடையே பரப்பிய பெரியார், முதன்மை எதிரி யார் என்பதையும அடையாளங் காட்டினார். ஆரிய பார்ப்பன கோட்பாடுகளும், பிராமணிய சித்தாந்தங்களும் தமிழ் இனத்திற்கு மட்டும் எதிரானது அல்ல, மனித குலத்திற்கே எதிரானது என்பதைக் காரணங்களோடு எடுத்துரைத்தார்.
ஆரியர்கள் மட்டுமே படிக்க வேண்டும்; உயர் பதவியில் இருக்க வேண்டும், உயர்நிலையில் இருக்க வேண்டும்; மற்றவர்கள் படிக்கக் கூடாது, உயர் பதவியில் வரக் கூடாது, உயர்நிலைத் தகுதி பெறக் கூடாது என்ற நிலையைத் தகர்க்க உறுதியுடன் போரிட்டார்.
அதன் விளைவாய் இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கான திறவுகோல் கிடைத்தது. பெரியாரின் போராட்டங்களின் விளைவாய், இந்திய அரசியல் சட்டமே முதன்முதலாய் திருத்தப்பட்டு, சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. கல்வி கற்கவும், பதவிகளுக்குச் செல்லவும் இருந்த தடைகள் தகர்க்கப்பட்டன. அடித்தட்டு மக்களும் உயர்கல்வி, உயர் பதவி பெற முடிந்தது.

பகுத்தறிவாளர் கழகம்
அரசுப் பணிகளில் உள்ளவர்கள் சமூகப் பணி ஆற்றத் தடை இருக்கக் கூடாது என்பதற்காக, அரசியல் சார்பற்ற அமைப்பாய் பகுத்தறிவாளர் கழகத்தை 1971இல் உருவாக்-கினார். இதற்கான தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் (அன்றைய பாலர் அரங்கம்) சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய சட்டப் பேரவைச் செயலாளர் திரு சி.டி.நடராஜன் தலைவராகவும், கா.திரவியம், வி.எஸ்.சுப்பையா துணைத் தலைவர்களாகவும், பேராசிரியர் சி.வெள்ளையன் செயலாளராகவும் கொண்ட பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப் பட்டது. அமைச்சர் என்.வி.நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இவ்வாறு தொடங்கப்பட்ட பகுத்தறிவாளர் கழகம் நாடெங்கும் அதன் கிளை அமைப்புகளை விரிவுபடுத்தியது. நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்ந்தனர். பகுத்தறிவாளர் கழகத்தில் ஆசிரியர்களும், அரசு அலுவலர்-களும் பெருமளவில் இருந்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடுகள் மூலம் எழுச்சி
தந்தை பெரியார் தன் கொள்கைகளை நிறைவேற்ற, இலக்கை எட்ட ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ‘பகுத்தறிவு’, ‘உண்மை’, ‘ரிவோல்ட்’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ போன்ற இதழ்களை அவர் காலத்திலே தொடங்கி நடத்தினார். இந்த ஏடுகள் மக்கள் மத்தியிலும், அரசியல் தளத்திலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. ஆட்சியாளர்களின் திசை காட்டியாய், ஒளி விளக்காய், வழிகாட்டியாய் இவ்வேடுகள் பணியாற்றுகின்றன. தமிழர் தலைவர் ஆசிரியர், ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆகியவற்றை மிகச் சிறப்பாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அரிய பணியைச் செய்து வருகிறார். இந்த ஏடுகளுக்கு சந்தா அளித்து தமிழர்கள் இல்லந்தோறும் கொண்டு சேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.

பயிற்சி முகாம்கள்:
தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கற்பித்து, புடம் போட்ட பெரியாரிஸ்டுகளாய் இளைஞர்களை உருவாக்க, பயிற்சி முகாம்கள் ஆண்டுதோறும் பல இடங்களில் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

பழகு முகாம்கள்:
குழந்தைகளுக்குக் கொள்கைசார் பயிற்சியளிக்க பழகுமுகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு குழந்தைகள் கொள்கை வழியில் வார்க்கப்படுகிறார்கள்.
பகுத்தறிவாளர் கழக பொன்விழா
பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் அதற்கான பொன்விழா செஞ்சியில் 19.6.2022 ஞாயிறு அன்று காலை தொடங்கவுள்ளது.
கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், திறந்தவெளி மாநாடு என்று நிகழ்வுகள் நிரல் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக இதில் பங்கு கொண்டு பகுத்தறிவு வளர துணை நிற்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

பகுத்தறிவு ஒரு பேராயுதம்
பகுத்தறிவு என்பது, மூடநம்பிக்கைகளை ஒழிக்க மட்டுமல்ல; ஜாதி ஒழிப்பு, உரிமை மீட்பு, இழிவு ஒழிப்பு, ஆதிக்க ஒழிப்பு, ஏற்றத்தாழ்வு ஒழிப்பு, சமத்துவம் நிலைநாட்டல், பொருள் இழப்பை, கால இழப்பைத் தடுக்க என்று எல்லாவற்றிற்கும் அது ஒரு பேராயுதம்.
பெரும்பகுதி மக்களை, சிறுபான்மை உயர் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்துவதும், நமக்குரிய உரிய வாய்ப்புகளை, உரிமைகளைப் பறிப்பதும் கடவுள், மதம், சடங்கு போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பியே செய்கின்றனர். எனவே, பகுத்தறிவுப் பரப்புரை மூலம் விழிப்புண்டாக்கி, நாம் அவற்றை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்; கடமையுமாகும்!
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!’