சல்மான் ருஷ்டி: காங்கிரஸ் ஆட்சி தடுப்பதா?

பிப்ரவரி 01-15

சரசுவதி பூஜை: சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல!

நம் நாட்டில் அண்மைக் காலத்தில், வாக்கு வங்கி அரசியல் ஜனநாயகத்தை அசல் கேலிக் கூத்தாக்கி வருகிறது!

மதவெறி சக்திகளுக்கு அரசியல் கட்சிகள் அடிபணிந்து நடக்க இந்த வாக்கு வங்கி அரசியல் – மனச்சாட்சியை அடகு வைப்பதோடு, மக்கள் நலத்தையும், மனிதநேயத்தையும் அதற்குப் பலியாக்கி வரும் போக்கு நாளும் வளர்ந்தோங்கி வருகிறது!

 

ஊழலை ஒழிப்பதாக உத்தமர் வேடந்தாங்கும் போலிகளுக்கு நாட்டில் குறைவே இல்லை;  ஊடகங்கள் (மீடியாக்கள்) என்ற தொலைக்காட்சிகள், ஏடுகள் – இவைகளுக்குத் தத்தம் ஆதிக்கத்தைப் பெருக்கி, மக்களை ஏமாளிகளாக்கிடுவதில் முந்திக் கொள்வது யார் என்பதுதான் போட்டியாக உள்ளதே தவிர, பொது ஒழுக்கம் காக்கப்படவோ, உயர்த்தப்பட வேண்டும் என்ற கவலையோ அறவே அவைகளுக்கு இல்லை.

அண்மையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய மாநாடு – கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சல்மான் ருஷ்டி என்ற பிரபல எழுத்தாளர் வரவிருந்தார்.

அவர் பூர்வீகம் இங்கே என்றாலும், அவரது சாத்தானின் கவிதைகள் (Satanic Verses) என்ற பிரபல நாவல், மதவெறியர்கள் எதிர்ப்பினால் 20 ஆண்டுகளுக்குமுன்பே (இந்தியாவில்) இங்கே தடை செய்யப்பட்டது. அதற்காக அவர் தலைக்கு விலை வைக்கப்பட்டது – அடிப்படை மதவெறியர்களால்.

அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்; இங்கிலாந்து நாட்டில் அவர் தற்போது வாழ்ந்து இலக்கியச் சேவை புரிந்து வருகிறார்!

அவரை வரவேண்டாம் இங்கு என்று ஜெய்ப்பூரில் உள்ள (காங்கிரஸ்) அரசு வற்புறுத்தி மறைமுக அழுத்தம் கொடுப்பதா?

மத்திய பிரதேச அரசு (பா.ஜ.க. அரசு) சூர்யநமஸ்கார் யோக என்பதைப் பள்ளிகளில் கட்டாயமாக்குவதை காங்கிரஸ் கட்சி – அதன் பொதுச்செயலாளர்களுள் ஒருவரான திக் விஜய்சிங் எதிர்க்கிறார். வரவேற்கத்தக்கதுதான். இஸ்லாமியர்களையும் இதனைச் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர்; இது இந்துத்துவா திணிப்பு என்று கூறி அவர்கள் எதிர்க்கின்றனர்.

அதைக் கண்டித்துவிட்டு, அதே ராகத்தை ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அரசு பாடுவது – அவரை வரவிடாமல் தடுக்க, அவர் உயிருக்குக் கூலிப் படையால் ஆபத்து என்று ஒரு கட்டுக் கதை கட்டிவிட்டு தடுத்துவிட்டது எவ்வளவு கீழிறக்கமான செயல்?

முற்போக்குச் சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள் இதற்காகக் கண்டனம் தெரிவித்து உள்ளனர்!

டில்லி பல்கலைக்கழகத்தில் மறைந்த சிகாகோ பேராசிரியரின் ஆய்வுரை  – பல ராமாயணங்கள் பற்றிய பாடத்தை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ மதவெறி சக்திகள் எதிர்க்கின்றனர் என்பதால் பாடத் திட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டது டில்லி பல்கலைக்கழக நிருவாகம்!

பல்கலைக் கழக தன்னாட்சி என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா?

இதேபோல மராத்திய மாநிலத்திலும் பாடத் திட்டம் மதவெறி – சிவசேனா சிலரின் எதிர்ப்பு காரணமாக பாடங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன!

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இரு நீதிபதிகளின் அமர்வு மதச் சார்பற்ற நாட்டு அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை நடத்தலாமா? என்று தொடரப்பட்ட வழக்கில்,

சரஸ்வதி கல்விக் கடவுள் விடுமுறையின் போது அந்தப் பூஜை நடந்தது என்று சொல்லி, சப்பைக் கட்டு கட்டி, தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (இது மேல்முறையீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டதா என்று தெரியவில்லை) எவ்வளவு மோசமான தீர்ப்பு இது?

விடுமுறையில் நடத்தப்படலாம் என்று கூறுவதேகூட தவறு. அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மதவாதியும் இதைச் செய்ய ஆரம்பித்தால், நாத்திகர்களும் நிகழ்ச்சியை _ கடவுள் மத மறுப்பை நடத்த அனுமதித்தால் வீண் கலவரம்தானே வெடிக்கும்!

பாபர் மசூதி இடிப்பு காரணமாக ஏற்பட்ட ரணங்கள் இன்னும் ஆறாமல், அதன் எதிரொலி மத தீவிரவாதத்தில் கொண்டுபோய் முடியும் அவலம் அன்றாடக் காட்சிகளாகி விட்டதே!

பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி காங்கிரசை மக்கள் அங்கே உட்கார வைத்தது எதற்காக? இதற்காகவா?

உருட்டைக்கு நீளம், புளிப்பில் அதற்கப்பன் என்பது போன்ற நிலையிலா காங்கிரஸ் அரசுகள் நடந்துகொள்வது?

உலகப் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளருக்கு மிரட்டல் உண்மையிலேயே இருந்தால்கூட, ராஜஸ்தான் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? போதிய பாதுகாப்பு கொடுப்பது – நிகழ்ச்சி முடிந்து பத்திரமாக அனுப்பி வைப்பது அதன் தலையாய கடமை அல்லவா? அது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் சரியான முறை.
மதவெறியாளர்களும், நாலு காலிகளும், கூலிகளும் மிரட்டினால், வராதீர்கள் என்று கூறுவது சரியான பரிகாரம் – அணுகு முறைதானா?

வெட்கம்! மகா வெட்கம்! சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் இப்படி நழுவுவதா? பழியைப் பரப்புவதா – கொடுமை!

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

– கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *