பாரதியின் வழக்குரைஞர்கள்!
நேயன்
பாரதி பிறப்பதற்கு முன்பே, மராட்டிய மாநிலத்தில் கோலோச்சிய ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் மகாத்மா ஜோதிராவ் பூலே (1827_1890) உறுதியுடன் தீவிரமாகப் போராடினார். ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்ததுபோலவே, அவர்களுடைய புராணங்கள், சாஸ்திரங்கள், சனாதன தர்மங்கள், சடங்குகள் போன்றவற்றையும் கடுமையாக எதிர்த்தார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி வளர்ச்சி, உழைப்பாளர் உரிமை போன்றவற்றிற்கு அவரும் அவருடைய துணைவர் சாவித்திரியும் களத்தில் இறங்கி தொண்டாற்றி, வெற்றியும் பெற்றனர்.
பாரதி காலத்திலே, கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியில், சாணார் சமுதாய மக்களால் தோள்சீலைப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. நாராயணகுரு ஜாதிக்கு எதிராய் வலுவான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
அதேபோல் அய்யா வைகுண்டர், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய்க் கடுமையாகக் கருத்துகள் கூறி, மக்களைத் திரட்டியுள்ளார். சாஸ்திர, சம்பிரதாயங்களைத் தகர்த்து தன்மானத்தோடு வாழ வழிகாட்டி-யுள்ளார்.
ஆனால், அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த பாரதி வர்ணாஸ்ரமம், சனாதனம், சாஸ்திரம் இவற்றை ஆதரித்ததோடு, ஜாதிக் கொடுமைகளை அலட்சியப்படுத்தியும் கருத்துகள் வெளியிட்டுள்ளார்.
“ஜாதி பேதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எல்லாத் தேசங்களிலும் உள்ளது. இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகவும் மாற்றுவதற்கு கஷ்டமாகவும் உள்ளது’’ என்கிறார் பாரதி. இது உண்மைக்கு மாறான பொய்யான கருத்து. ஜாதிமுறை இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மை! மேலும், சனாதன தர்மத்தில் உள்ள ஜாதிகள், சூரிய ஜோதியில் காணப்படும் ஏழு வர்ணங்கள் போலவே அவசியத் தன்மை கொண்டவை. ஜாதி அழிவுக்குக் கருவியாகாது’’ என்கிறார் பாரதி. (பாரதி புதையல், பாகம் -2, பக்கம் 180)
பாரதியை முற்போக்காளராய்க் காட்ட முட்டுக் கொடுக்கின்ற ஆள்கள் ஒருபக்கம் என்றால், மோசடியாக அவர் கவிதைகளில் திருத்தங்கள் செய்தும் பாரதியை முற்போக்காளராய்க் காட்டுகின்றனர்.
எடுத்துக்காட்டாக,
“வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்’’
என்ற பாடல். இதில் உள்ள “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்ற வரியை எடுத்துக்கொண்டு, பாரதி ஜாதியை மறுத்தார், வெறுத்தார், எதிர்த்தார் என்கின்றனர்.
ஆனால், உண்மை என்ன?
1915 பிப்ரவரி ‘ஞானபானு’ இதழில் ‘ஜாதி உயர்வு இல்லை பாப்பா’’ என்றுதான் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. அதாவது ஜாதியில் உயர்வு இல்லை என்பதே பாரதியின் நிலைப்பாடு. ஆனால், ஜாதி வேண்டும் என்பதே அவர் கொள்கை. அதன்படியே, “ஜாதி உயர்வு இல்லை பாப்பா’’ என்று பாரதி எழுதியுள்ளார். ஆனால், இதை பின்னால், “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று திருத்தி மோசடி செய்துள்ளனர்.
பாரதி எழுதிய கீழ்க்கண்ட பாடலை ஆய்வு செய்தால் இதை உறுதி செய்யலாம்.
“நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலைதவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிட ஜாதி
……
ஜாதிக் கொடுமைகள் வேண்டாம்’’
நான்கு வர்ணப்பிரிவை பாரதி ஏற்கிறார். இந்த நான்கு பிரிவில் ஒன்று ஒழிந்தாலும் குலத்தொழிலைச் செய்யும் நிலை தவறி வர்ணாஸ்ரம தர்மம் சிதைந்து அழியும். அதன்வழி மனித இனமே அழியும். எனவே, ஜாதி உயர்வு தாழ்வு சொல்லி நடக்கும் ஜாதிக் கொடுமைகள் கூடாது என்கிறார்.
ஆக, ஜாதி கூடாது என்பது அல்ல பாரதியின் கொள்கை.
ஆரியப் பார்ப்பன நயவஞ்சகச் சூழ்ச்சியே இங்குதான் ஒளிந்திருக்கிறது.
ஜாதியில் உயர்வு தாழ்வு இல்லையென்றால், எந்தத் தொழிலையும் யாரும் செய்யலாம் என்ற நிலை தானே வேண்டும்? குலவழி பரம்பரைத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஏன் கூற வேண்டும்? குலவழித் தொழில் செய்யும்போது ஜாதிக்குள் உயர்வுதாழ்வு இல்லாமல் எப்படிப் போகும்?
மலம் எடுப்பவனும், வேதம் ஓதுபவனும் ஒன்று; அவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்றால், ஆரிய பார்ப்பான் மலம் எடுக்கும் தொழிலைச் செய்வானா? அப்படிச் செய்தால், பாரதியும் அப்படிச் செய்து இப்படிச் சொல்லியிருந்தால் அவர்கள் நேர்மையை, ஜாதி ஒழிப்பை, ஜாதி மறுப்பை நாம் நம்பலாம்.
மலம் எடுப்பவன் பரம்பரை, மலம் எடுத்தே வாழ வேண்டும்! வேதம் ஓதுபவன், கல்வி கற்பவன் பரம்பரை கல்வி கற்றே வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்திவிட்டு, ஆனால் இவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை; எல்லாம் ஒன்று என்று கூறுவதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு உண்டா?
கடவுளை வணங்கவும், கோயிலுக்குள் செல்லவும் கூட ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு உரிமையில்லை என்று ஒதுக்கிவைத்ததும், கருவறைக்குள் எல்லா ஜாதியினரும் செல்ல முடியாது, செல்லக் கூடாது என்று இன்றளவும் சொல்லிக் கொண்டு, ஜாதி உயர்வு தாழ்வு இல்லையென்பது எப்படிப்பட்ட மோசடி!
“நாலு குலங்கள் அமைத்தான் – அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்’’
என்று வர்ணாஸ்ரம தர்மம் தகர்க்கப்-பட்டதைச் சாடுகிறார், கண்டிக்கிறார் பாரதி.
ஜாதிப் பிரிவை, வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தி நிலைநாட்ட விரும்பிய பாரதி, இந்தியா அகண்ட பாரதமாக இருக்க வேண்டும்; சேதமில்லா இந்துஸ்தானமாய் இருக்க வேண்டும் என்கிறார். இதுதானே ஆர்.எஸ்.எஸ். கொள்கை!
“சாஸ்திரங்கள் வேண்டா, சதுர்மறைகளேது மில்லை
தோத்திரங்களில்லை யுளந் தொட்டு நின்றாற் போதுமடா’’
என்று “கோமதி மவுனத்தில்’’ பாரதி கூறியதை மட்டும் எடுத்துக்காட்டி, பார்த்தீர்களா, பாரதி சாஸ்திரங்களை, வேதங்களைப் புறக்கணித்த புரட்சியாளர் என்கின்றனர் பாரதி வக்கீல்கள்.
“சதுர் வேதங்க ளாயிர முறை படித்தால்
மூளு நற்புண்ணிந்தான் – வந்து மொய்த்திடும்’’
“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
பார்மிசை யேது ஒரு நூல் இதுபோல’’
“அன்னையே, அந்நாளில் அவனிக்கெல்லாம்
ஆணி முத்து போன்ற பணிமொழிகளாலே
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள்
பரவு புகழ் புராணங்கள் இதிஹாசங்கள்
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்துரைப்போம் அதனை இந்நாள்?
ஓதுமினோ வேதங்கள்
ஓங்குமினோ! ஓங்குமினோ!’’
– பாரதமாதா நவரத்தின மாலை
“சதுர் வேதங்கள் மெய்யான சாஸ்திரங்கள்
எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்க
கூறும் துப்பான மதத்தினையே ஹிந்து
மதமெனப் புவியோர் சொல்லுவாரே!
அருமையுறு பொருள்களெல்லாம் மிக அரிதாய்
தனைச்சாரும் அன்பர்க்கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்து மதப் பெற்றி தன்னை
கருதியதன் சொற்படியிங் கொழுகாத
மக்களெல்லாம் கவலை யென்னும்
ஒரு நரகக் குழியதனில் வீழ்ந்து தவித்
தழிகின்றார் ஓய்விலாமே’’
என்று பாரதி பாடியுள்ளதற்கு இந்த வக்கீல்கள் என்ன பதில் கூறுவார்கள். பாரதியின் உள்ளக் கருத்துகளும் கள்ளக் கருத்துகளும் என்று நான் முதலில் தெளிவுபடுத்தியதுபோல, முற்போக்காக பாரதி பாடிய, எழுதிய சில கருத்துகள் சந்தர்ப்பவாதக் கருத்துகளே யல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த உண்மைக் கருத்துகள் அல்ல.
(தொடரும்…)