பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்
பெரும்பதவி வகித்தோர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து
பெரும்பிழைகள் இழைக்கின்ற ஒன்றி யத்தார்
வெறுப்பான அரசியலை நடத்தும் போக்கோ
வெங்கொடுமை, சிறுமையென அறிக்கை விட்டார்!
பொறுப்பினிலே உள்ளவரோ அமைதி காத்தல்
புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறி
அறிவுறுத்தி உள்ளமையைப் புரிந்து கொள்வீர்!
அனைவருமே நிகரென்னும் உண்மை ஓர்வீர்!
வெறுப்பான அரசியலோ மக்கள் ஆட்சி
விதிமுறைக்கு முரணாகும்; பழியே சேர்க்கும்
நெருப்பனைய நெஞ்சத்தார் வஞ்ச கத்தை
நிழல்கூட மறக்காது; மன்னிக் காது
பொறுப்புக்குப் பெருமையினைச் சேர்த்தல் வேண்டும்.
பொய்புரட்டும் அதிகாரச் செருக்கும் என்றும்
சிறப்பினையே நல்காது; கவனத் தோடு
சிந்திப்பீர்! பொதுநோக்கை மனத்தில் கொள்வீர்!
தன்கட்சி ஆளாத மாநி லத்தார்
தாங்கவொணாத் துயரங்கள் சந்திக் கின்ற
புன்மையினை நாளெல்லாம் வழங்க லாமோ?
புதியகுலக் கல்வியினால் உரிமை தன்னை
மண்ணுக்குள் புதைத்திடவே துடித்தல் ஏனோ?
மாற்றாந்தாய் மனப்பான்மை எதற்காம்? நாட்டில்
என்றைக்கும் மொழித்திணிப்பைத் தொலைவில் வீசி
இந்தியத்தின் ஒற்றுமையைக் காப்பீ ராக!
பெரியமுத லாளிகளின் அடிமை ஆதல்
பேரிழிவாம்; சீரழிவாம் மக்கட் கெல்லாம்;
அறியாமை இருளினிலே மூழ்கி யுள்ளோர்
ஆளுநரைப் பகடைக்காய் ஆக்கு கின்றார்!
வெறிகொண்டு மதச்சேற்றில் ஏற்றுக் கொள்ளா
வீண்சழக்கில் படுத்துருண்டு புரளல் வேண்டா!
நெறிமறந்த இட்லரெனத் தம்மை எண்ணி
நெடும்பழிக்கே ஆட்பட்டுத் தவித்தல் நன்றோ?ஸீ